பி.ஒய்.டி. அட்டோ 3
|கார் தயாரிப்பு நிறுவனமான பி.ஒய்.டி. அட்டோ 3 மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் பேட்டரியில் இயங்கும் காராக இது வந்துள்ளது. இதன் விற்பனையக விலை ரூ.33.99 லட்சம். இந்தக் கார் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அசெம்பிளி பிரிவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் முன்புறம் சில்வர் கிரில், மெல்லிதான முகப்பு விளக்கு மற்றும் பகலில் ஒளிரும் எல்.இ.டி. விளக்குகள் சிறப்பான தோற்றப்பொலிவை அளிக்கிறது.
இரு வண்ணத்திலான பம்பர் மற்றும் சில்வர் வண்ணத்தில் ஸ்கிட் பிளேட் ஆகியன உள்ளன. மேலும் 18 அங்குல இரு வண்ண அலாய் சக்கரம் கூடுதல் அழகு சேர்க்கிறது. கிரே, சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது. உள்புறம் 12.8 அங்குல திரை உள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைப்பு வசதி கொண்டது. மேல்புறம் திறந்து மூடும் வகையிலான மேற்கூரை உள்ளது.
மேலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டது. 5 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சொகுசான பயணத்துக்கு மிருதுவான தோல் இருக்கைகள், ரம்மியமான சூழலை அளிக்கும் வகையிலான உள்புற வெளிச்சம் ஆகிய வசதி களைக் கொண்டது. 360 டிகிரி சுழலும் கேமரா, ஏ.பி.எஸ்., இ.எஸ்.சி., டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளோடு பாதுகாப்பான பயணத்திற்கு 6 ஏர் பேக்குகளைக் கொண்டதாக இது வந்துள்ளது.
இது 201 ஹெச்.பி. திறன் மற்றும் 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை கொண்டது. பேட்டரி காராக இருந்தாலும் இதை ஸ்டார்ட் செய்து 7.3 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 512 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும். போர்ட்டபிள் சார்ஜர் வசதியுடன் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.