கருப்பு உப்பு - வெள்ளை உப்பு : எது சிறந்தது?
|மனித உடலுக்கு தினமும் 5 கிராம் சோடியம் அல்லது உப்பு தேவை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உப்பில் பல வகைகள் இருக்கின்றன.
இருப்பினும் வெள்ளை நிறத்தில் பளிச்சென்று காட்சி அளிக்கும் தூள் உப்புதான் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது. சிறுநீரக கல், தலைவலி, இதய செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற அறிகுறிகளையோ, பாதிப்புகளையோ எதிர்கொண்டால் வெள்ளை உப்பின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக கருப்பு உப்பை உபயோகிக்கலாம். இதில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் அதிகம் கலந்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்படும்.
வெள்ளை உப்பு, கடல் உப்பு மற்றும் இமயமலை இளஞ்சிவப்பு உப்பு, கருப்பு உப்பு உள்ளிட்ட பல வகையான உப்புகள் உள்ளன. இவற்றுள் கருப்பு உப்பை ஏன் உபயோகிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
* கருப்பு உப்பில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. சோடியமும் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது.
* கல்லீரலில் பித்தம் உற்பத்தி சீராக நடைபெறுவதற்கு கருப்பு உப்பு உதவுகிறது. உடலில் அமில அளவை கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு இருப்பதால் நெஞ்செரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கவும் உதவும்.
* கருப்பு உப்பில் பொட்டாசியமும் அதிக அளவு உள்ளது. இது தசை ஆரோக்கியத்திற்கு ஏதுவானது. தசைப்பிடிப்புகள் ஏற்படுவதையும் தவிர்க்கும்.
* நீரிழிவு அல்லது உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கருப்பு உப்பு நல்லது. ஏனெனில் இது ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதற்கும், சீரான அளவில் ரத்த அழுத்த அளவை அதிகரிப்பதற்கும் உதவும்.
* உடல் எடையை குறைப்பதற்கும் கருப்பு உப்பு சிறந்தது. சோடியம் உட்கொள்ளல் அளவை குறைக்கவும் உதவுகிறது.
* இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு போன்றவைகளுடன் கருப்பு உப்பை கலந்து பருகுவதன் மூலம் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தலாம்.
உப்பு ஏன் தேவை?
உப்பில் 40 சதவீதம் சோடியம், 60 சதவீதம் குளோரைடு காணப்படும். இது உணவுக்கு சுவை சேர்க்கும். அதிக உப்பு சூழலில் பாக்டீரியாக்களால் உயிர் வாழ முடியாது. அதனால் உப்பு, உணவுக்கு பாதுகாப்பு கவசமாகவும் செயல்படுகிறது. தசைகளை தளர்த்தவும், நரம்புகளை தூண்டவும் உடலுக்கு சிறிதளவு சோடியம் தேவைப்படும். அதனை உப்பு நிவர்த்தி செய்வதால் உப்பை அறவே தவிர்க்க முடியாது.
வெள்ளை உப்பை விட கருப்பு உப்பு சிறந்ததா?
வெள்ளை உப்பு பல்வேறுகட்ட செயல்முறைக்கு பிறகு பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. அதனுடன் ஒப்பிடும்போது கருப்பு உப்பு குறைந்த செயல்முறைக்கே உட்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் இயற்கை வடிவத்திலேயே கிடைக்கிறது.
வெள்ளை உப்பில் சோடியம் அதிக அளவு உள்ளது. அதனை அதிகம் சேர்ப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
கருப்பு உப்பில் மிகக் குறைந்த அளவே சோடியம் உள்ளது. மேலும் வெள்ளை உப்பில் தாதுக்கள் அதிகம் காணப்படும். அவற்றை உடலால் எளிதில் உறிஞ்ச முடியாது. ஆனால் கருப்பு உப்பு குறைந்த தாதுக்களையே கொண்டுள்ளது. செரிமானத்திற்கும் கருப்பு உப்பு உதவும். ஆனால் வெள்ளை உப்பை அதிகம் சேர்ப்பது சிக்கலை ஏற்படுத்தும்.