நீரிழிவு நோயாளிகளும்.. காலை உணவும்..
|காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது. சாப்பிடும் ஒவ்வொரு உணவும் உடலுக்கு ஊட்டமளிக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடும்.
இன்சுலின் வெளியீட்டையும் கட்டுப்படுத்தும். எனவே அன்றைய நாளின் முதல் உணவாக வெறும் வயிற்றில் உட்கொள்ளப்படும் காலை உணவு ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்க வேண்டும்.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் காலை உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த காலை உணவில் முட்டைகளை சேர்த்து கொள்ளலாம். ஏனெனில் முட்டைகளில் கலோரிகள் மிகவும் குறைவாகவே இருக்கும். புரத சத்து மிகுந்திருக்கும்.
ஆதலால் நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் 2 முட்டைகள் சாப்பிடலாம். இது நீரிழிவு நோயாளியின் ஆரோக்கியத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் பராமரிக்க உதவும். எனினும் இரண்டு முட்டை சாப்பிடும் விஷயத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். நோயின் தன்மையை பொறுத்து மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்கு முட்டை சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் ஓட்ஸை சேர்த்துக் கொள்ளலாம். நிறைய நார்ச்சத்து இதில் உள்ளது. இதனை உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கும். கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக கொண்டிருக்கும் ஸ்மூத்திகளையும் தயார் செய்து காலை உணவுடன் பருகலாம்.
இதுவும் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். சியா விதைகளின் உதவியுடனும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். சியா விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள நார்ச்சத்துகள் நீரிழிவு நோயை நிர்வகிக்க துணை புரியும்.
காலை உணவில் பாலாடைக்கட்டி மற்றும் பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் புரதம் கிடைக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவும் சீராக பராமரிக்கப்படும்.