இதய ஆரோக்கியத்தை பேணுவது பற்றிய விழிப்புணர்வு: இதய வடிவில் ஒளிரும் 'சிக்னல்'
|இதய ஆரோக்கியத்தை பேணுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், பெங்களூரு மாநகரில் உள்ள சில சிக்னல்களில் இதய வடிவில் ஒளிரும் வகையில் போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக சாலை களின் முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்படும் சிக்னல்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை வண்ணங்களில் ஒளிரும். அவை வட்ட வடிவத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் திரைக்குள் ஒளிர்வதால் அவற்றின் நிறம் வட்டவடிவ பின்னணியில் காட்சி தரும். ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரில் உள்ள சில சிக்னல்களில் இதய வடிவில் ஒளிரும் வகையில் போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
அந்த புதிய சிக்னல்களை பார்த்து வாகன ஓட்டிகள் ஆச்சரியம் அடைந்தார்கள். அது இணையத்தில் பரவவே, பலருடைய கவனத்தை ஈர்த்துவிட்டது. சிவப்பு நிற சிக்னல்கள் ஏன் வடிவம் மாறியது என்று பலரும் விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் பின்னணியில் 'இதயம்' இருக்கிறது. ஆம்..! இதய ஆரோக்கியத்தை பேணுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு போக்குவரத்து காவல் துறை ஆகியவை தனியார் மருத்துவமனை யுடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்.
உலக இதய தினத்தையொட்டி நகரின் 20 சிக்னல்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சிவப்பு நிற சிக்னல்கள் மற்றும் இதய வடிவத்தில் உருமாறி காட்சி அளிக்கின்றன. சிக்னலுக்கு அருகில் கியூ.ஆர் குறியீடும் இடம் பெற்றுள்ளது. அதனை ஸ்கேன் செய்தால், அவசர எண்ணுடன் இணைத்து ஆம்புலன்ஸ் சேவையுடன் தொடர்பு கொள்ள வைக்கும். விபத்தில் சிக்கியவரை தாமதமின்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.