டெஸ்ட் அணியின் புது ஆல்ரவுண்டர் 'அக்ஷர் பட்டேல்'
|டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆல்ரவுண்டர்களை உருவாக்கி இருப்பது இந்திய கிரிக்கெட் அணிதான். ஆம்...! ஜடேஜா, அஸ்வின்... இவர்களுக்கு அடுத்தபடியாக, நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார், அக்ஷர் பட்டேல்.
தனக்கு கிடைத்த சொற்ப வாய்ப்புகளில், பந்து வீச்சிலும், பேட்டிங் துறையிலும் சிறப்பாக செயல்பட்டு, டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில், மளமளவென முன்னேறி இருக்கிறார். இந்திய டெஸ்ட் அணிக்கு புதுநம்பிக்கை சேர்த்திருக்கும் அக்ஷர் பட்டேல் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...
பிறப்பு
அக்ஷர் பட்டேல் குஜராத்தில் பிறந்தவர். அவரது முழுப்பெயர், அக்ஷர் ராஜேஷ்பாய் பட்டேல். 15 வயதில் இவருக்கு கிரிக்கெட் விளையாட்டில், ஆர்வம் வந்திருக்கிறது.
கிரிக்கெட் ஆர்வம்
இவரது நண்பர் தீரன் கன்சாரா கிரிக்கெட் வீரர். 9-ம் வகுப்பு படிக்கையில், நண்பரின் வற்புறுத்தலால் பள்ளி அணியில் விளையாடினார்.
ரோல் மாடல்
இடது கை ஆட்டக்காரர் யுவராஜ் சிங், இவரது ரோல் மாடல். அவரை பின்பற்றியே, ஆல்ரவுண்டராக பயிற்சி பெற்றார்.
கிரிக்கெட் வாழ்க்கை
19 வயதிற்குட்பட்ட குஜராத் மாநில அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்று, பிறகு தேசிய அணியிலும் விளையாடினார். 2013-ம் ஆண்டு மும்பை ஐ.பி.எல்.அணிக்கு தேர்வானார். இருப்பினும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மாறிய பிறகே, விளையாடும் வாய்ப்பு பெற்றார். ஐ.பி.எல்.ஆட்டங்களில் வெகு காலமாக விளையாடினாலும், இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு வெகு தாமதமாகவே கிடைத்தது.
படிப்பாளி..!
பள்ளி-கல்லூரிகளில் அக்ஷர் பட்டேல் சிறப்பான மாணவராக திகழ்ந்திருக்கிறார். அவரை கிரிக்கெட் உலகில் படிப்பாளி என்றே அழைப்பார்களாம். ஏனெனில், அவர் என்ஜினீயரிங் பட்டதாரி.
பாட்டியின் ஆசை..!
கிரிக்கெட் உலகில் அக்ஷர் பட்டேல் கால்பதிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டவர், அவரது பாட்டி. ஆனால் அக்ஷர் இந்திய அணிக்காக விளையாடும் போது அதை கண்குளிரப் பார்க்க, அவர் இவ்வுலகில் இல்லை. இதை மிகப்பெரிய வருத்தமாக அக்ஷர் எப்போதும் பதிவு செய்வது உண்டு.
ரன் இல்லாமல், 4 விக்கெட் வீழ்த்தியவர்
அக்ஷர் பட்டேல் இந்திய அணியில் விளையாடுவதற்கு முன்பாக, இந்திய ஏ அணியில் விளையாடினார். அப்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில், ரன் எதுவுமே விட்டுக்கொடுக்காமல், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.