195 நாடுகளின் தலைநகர் பெயர்களை கூறி அசத்தும் மழலை
|சுறுசுறுப்பாய் ஓடிக்கொண்டும், நினைத்ததை எல்லாம் பேசிக்கொண்டும், கையில் ஏதேனும் கிடைத்தால் அதை கொண்டு சுவரில் கிறுக்கிக்கொண்டும் திரியும் வழக்கமான அழகு குழந்தைகள் போன்றே சிறுவன் மகிழனின் சேட்டைகளும், சிரிப்பும் ரசிக்க வைக்கிறது
சுறுசுறுப்பாய் ஓடிக்கொண்டும், நினைத்ததை எல்லாம் பேசிக்கொண்டும், கையில் ஏதேனும் கிடைத்தால் அதை கொண்டு சுவரில் கிறுக்கிக்கொண்டும் திரியும் வழக்கமான அழகு குழந்தைகள் போன்றே சிறுவன் மகிழனின் சேட்டைகளும், சிரிப்பும் ரசிக்க வைக்கிறது. ஆனால், அம்மாவோ, அப்பாவோ நாடுகளின் பெயரை கூறிவிட்டால், அந்தந்த நாடுகளின் தலைநகர் பெயர்களை தன்னிச்சையாகவே கூறி அசத்துகிறான்.
ஆம்..! 'அம்மா' என்று அழைத்த வார்த்தையை பல்லாண்டுகள் கடந்தாலும் மறக்காத தாய்மார்கள் இன்னும் உண்டு. அப்படி ஒற்றை வார்த்தையே நம்மை மயக்கும் என்றால், ஒரு குழந்தை தன் மழலை மொழியில் உலகில் உள்ள 195 நாடுகளின் பெயரை சொன்னால் அவற்றின் தலைநகரையும் கூறினால் பெற்றோர் மனம் எப்படி பூரிக்கும். அப்படித்தான் பூரிக்கிறது ஈரோடு நாடார் மேடு பகுதியை சேர்ந்த எல்.கார்த்தி-மோகன பிரியா தம்பதியரின் உள்ளம். இவர்களின் 2-வது குழந்தை எல்.கே.மகிழன். பெயருக்கு ஏற்ப பெற்றோரை மகிழ வைக்கும் குழந்தை. மகிழனுக்கு தற்போது 2 வயது நிறைவடைந்து விட்டது. ஆனால் 1 வயது 7 மாதத்திலேயே நாடுகளின் தலைநகர் பெயர்களை கூறியதுடன், தேசியக்கொடிகளை அடையாளம் காட்டி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளான்.
அம்மா மோகன பிரியா ஒவ்வொரு நாடுகளின் பெயரை கூறினால், தலைநகர் பெயரை மழலை மொழியில் கூறி வியக்க வைக்கிறான்.
இந்த அசத்தலுக்காகவே, லண்டன் மாநகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் "வேர்ல்ட் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் மற்றும் வேர்ல்ட் வைய்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" ஆகிய புத்தகங்களின் சாதனை நாயகனாக இடம் பெற்று அதற்கான சான்றிதழ்களையும் பெற்று உள்ளான்.
தான் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெருமைக்கு சொந்தக்காரன் என்பதைகூட தெரியாத மழலையாக வலம் வரும் எல்.கே. மகிழன் பற்றி அவனது பெற்றோர் கூறியது:-
''எங்களுக்கு 2 குழந்தைகள். முதல் குழந்தை எல்.கே. ஆதிரா. 3-ம் வகுப்பு படிக்கிறாள். அவள் குழந்தையாக இருக்கும்போது நான் அதிகமாக அவளுடன் நேரம் செலவிடுவேன். அவளுக்கும் பல விஷயங்கள் கற்றுக்கொடுத்தேன். அவள் அதை திரும்ப கூறுவாள். ஆனால், 2 வயதுக்கு மேல்தான் அவளது மனப்பாடம் செய்யும் ஆற்றல் எனக்கு தெரிந்தது. அதை முறைப்படி எப்படி வெளியே கொண்டு வருவது என்று தெரியாமல் விட்டுவிட்டேன்.
இரண்டாவதாக மகிழன் கருவில் உருவானபோதே, அவனுக்கான நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட்டேன். யோகாசனங்கள் செய்வது, தியானம் செய்வது, நல்ல இசை கேட்பது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றுடன், வயிற்றில் இருக்கும் அவனுடன் அதிகமாக பேசுவது என்று எனது நடவடிக்கைகள் இருக்கும். ஆனால் அவன் பிறந்த பின்னர், குடும்ப சூழலால் அவனுக்காக அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை. ஒரு குழந்தை உருவானது முதல் 1000 நாட்கள் அந்த குழந்தையின் வளர்ச்சியில் முக்கியமானவை என்பதால் நான் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவனுக்கு பல விஷயங்கள் கற்றுக்கொடுத்தேன். அவன் அதை கவனிக்கிறானா என்றெல்லாம் தெரியாது. ஆனால், நான் அவனுடன் பேசிக்கொண்டே இருப்பேன். அப்படி அவனுக்கு 1 வயது 3 மாதம் ஆன காலக்கட்டத்தில் ஒரு நாள் நான் ஏதேச்சையாக நாடுகளின் பெயரை கூறி தலைநகர்களையும் கூறிக்கொண்டு இருக்கும்போது, என்னை முந்திக்கொண்டு அவன் பேசினான். அது முழுமையாக புரியவில்லை என்றாலும், நான் சொல்வதற்கேற்ப அவனும் பேசியதால் நான் புரிந்து கொண்டேன். அந்த நாள் எனது வாழ்வில் மிக முக்கியமான நாளாகும்.
தொடர்ந்து நாடுகளின் கொடிகளை நான் கூறக்கூற அடையாளப்படுத்திக்காட்டினான். மரங்கள், செடிகள், பழங்கள், விலங்குகள் என்று பலவற்றையும் அடையாளம் காட்டினான். அப்போதெல்லாம் உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒருநாள் இணையத்தில் பார்த்தபோது, வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்ட் வைய்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைய முகவரிகள் கிடைத்தன. விண்ணப்பித்து பார்த்தேன். மகிழனை வீடியோ எடுத்து அனுப்பும் படி பதில் வந்தது. அப்படியே செய்தோம். அதை ஏற்றுக்கொண்டு மிக இளைய வயதில் 195 நாடுகளின் தலைநகரை கூறிய சிறுவன் என்ற சாதனை செய்து இருப்பதாக சான்றிதழ் அனுப்பினார்கள். இதுபோல் கொடிகளை அடையாளப்படுத்தும் சாதனை தொடர்பான வீடியோ அனுப்பவும் அனுமதி அளித்து இருக்கிறார்கள். விரைவில் அதையும் செய்வோம்'' என்றார்கள்.
மகிழனின் தந்தை கார்த்தி பேக்கரி நடத்தி வருகிறார். தாயார் மோகனபிரியா என்ஜினீயரிங் பட்டதாரி. குடும்ப தலைவி. குழந்தைகளை சாதனையாளர்களாக்கும் ஆசை அவரது வார்த்தைகளில் தெறிக்கிறது.