< Back
சிறப்புக் கட்டுரைகள்
கழிவுப்பொருட்களில் தயாராகும் கலைப்பொக்கிஷங்கள்..!
சிறப்புக் கட்டுரைகள்

கழிவுப்பொருட்களில் தயாராகும் கலைப்பொக்கிஷங்கள்..!

தினத்தந்தி
|
17 July 2022 6:30 PM IST

மூங்கில் குச்சி, தென்னை மட்டை, பனை மட்டை, தேங்காய் ஓடு, காய்ந்த இலைகள், காய்கறி கழிவுகள்... இவை எல்லாம் நுண்கலை ஆசிரியர் உமாபதியின் கைவண்ணத்தில், கண்கவர் சிற்பங்களாக உருமாறியிருக்கின்றன.

கழிவுப்பொருட்களை, கலைப்பொருளாக மாற்றுவதில், அவர் எக்ஸ்பெர்ட். அந்த மாயாஜாலத்தை எப்படி நிகழ்த்துகிறார், என்பதை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்.

''புதுச்சேரி சேலியமேடு பகுதியில் இருக்கும் கவிஞரேறு வாணிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியராக என் பணியை தொடங்கினேன். இந்த அரசுப்பள்ளி, என்னுடைய கலை வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் அரசு ஆசிரியராக, முதன்முதலில் பணியை தொடங்கியது இங்கேதான். அதேபோல, நுண்கலை ஆசிரியர் என்பதை தாண்டி, கழிவுப்பொருட்களை கலை சிற்பமாக மாற்றும் புதுமை கலைஞராக மாறியதும் இங்கேதான்'' என்றவர், கழிவுப்பொருட்களில் கலைச்சிற்பங்கள் செய்ய தொடங்கியது பற்றி பேசினார்.

''நான் பணியாற்றும் சேலியமேடு அரசு பள்ளியில், நடுத்தர குடும்பத்து பிள்ளைகளே அதிகமாக படிக்கிறார்கள். சார்ட் பேப்பர், கலர் பென்சில்-ஸ்கெட்ச், வண்ண பெயிண்ட்... போன்றவற்றை வாங்கி, அதைக்கொண்டு நுண்கலை கற்பது என்பது, அவர்களுக்கு ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. ஆர்வமும் குறைய தொடங்கியது. அதன் பிறகுதான் வீணாகும் கழிவுப் பொருள்களைக் கொண்டு உருவங்களை செய்யத் தூண்டினேன்'' என்றவர், கழிவுப்பொருட்களை கொண்டு பிரத்யேக கலை உலகையே படைத்திருக்கிறார்.

''முட்டை ஓடு, காய்ந்த விதைகள், பாக்கு மட்டை, வாழை மட்டை, தென்னை மட்டை, காய்ந்த எள் கூடு, சுரைக்காய் கூடு, மூங்கில் குச்சிகள், தேங்காய் கூடுகள், மரக்குச்சிகள், பனை ஓலைகள், பனை மட்டை... இப்படி கண்ணில் சிக்கும் சிறுசிறு கழிவுகளையும், கலைப்பொருளாக மாற்ற முடிந்தது. அடுப்பில் எரிக்கும் கொட்டாங்குச்சியை, நான் ஸ்கூட்டராக, மனித உருவ வடிவில் கற்பனை செய்தேன். அதை கலைச்சிற்பமாகவும் மாற்றினேன். இப்படியாக, நிறைய கலைப்பொருட்களை உருவாக்க முடிந்தது.

குறிப்பாக, தேங்காய் ஓடு ஸ்கூட்டர், வாழை மட்டையில் உருவான மனித உருவங்கள், மூங்கில் குச்சி மனிதர்கள், தேங்காய் மட்டை - கொட்டாங்குச்சியில் உருவான தேர், பனை ஓலை-குச்சிகளில் உருவான மாட்டு வண்டி, சுரைக்காய்க் கூடு-பனை ஓலையில் உருவான மீன், தேங்காய் மட்டை கொக்கு... இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இதோடு வீணான பல்புகள், கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு லாந்தர் விளக்குகளை வடிவமைத்தேன். அதில் பேட்டரிகளைப் பொருத்தி சிறிய பல்புகளைப் பிரகாசிக்கச் செய்தேன்'' என்று நம்மை வித்தியாச உலகிற்கு கூட்டிச்செல்லும் உமாபதி, தன்னுடைய சிந்தனையை மாணவ-மாணவிகளுக்கு புகுத்தி, அவர்கள் ஒவ்வொருவரையும் படைப்பாளிகளாக மாற்றியிருக்கிறார். கடந்த 12 ஆண்டுகளில், பள்ளி மாணவர்களை கொண்டு 6 ஆயிரத்திற்கும் கலைப்பொக்கிஷங்களை உரு வாக்கி, அதை பள்ளி வளாகத்தில் காட்சிக்கு வைத்திருக்கிறார்.

''எங்கள் பள்ளி நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பள்ளியில், சோளம், சுரைக்காய் பயிரிட்டுள்ளோம். சின்ன குறுங்காடும் இருக்கிறது. அதனால் பள்ளியில் கழிவாக சேரும் பொருட்களை எங்களுக்கான மூலப்பொருளாக மாற்றிக்கொள்கிறோம்.

மாணவர்கள் உருவாக்கும் கைவினைக் கலைப் படைப்புகளை, பள்ளியில் காட்சிப்படுத்துவது வழக்கம். பள்ளிக்கு வருகை தரும் பார்வையாளர்கள் கலை வடிவங்களை விலைக்கு வாங்கத் தொடங்கினர். அதனால் பிரத்யேக கண்காட்சிகளை நடத்த ஆரம்பித்தோம். புதுவை, சென்னை, ஏனாம், குஜராத் போன்ற பகுதிகளில் நடந்த கண்காட்சியில், பள்ளி மாணவர்கள் உருவாக்கிய கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏராளமானவை நல்ல விலைக்கும் விற்பனையாகி இருக்கிறது'' என்றவர், கலை வடிவ உருவாக்கத்தை தொழிலாக முன்னெடுத்து பொருள் ஈட்டும் வித்தையையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்.

''என்னிடம் படித்த மாணவர்கள் பலர், இதை சுயதொழிலாகவும், சிறுதொழிலாகவும் முன்னெடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற கைவினை பொருட்கள் மற்றும் கழிவுப்பொருள் கலைப்பொருட்களை சந்தைப்படுத்தவும், விற்றுக்கொடுக்கவும் பல தனியார் அமைப்புகள் உதவுகின்றன. அதனால் கலை முயற்சி என்பதைதாண்டி, கழிவுப்பொருட்களை கொண்டு வருமானம் ஈட்டமுடியும்.

நிறைய கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இதுசம்பந்தமான வகுப்புகளை நடத்தக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். அந்தவகையில் நான் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு பயணமாகி, பல பள்ளி-கல்லூரிகளில் இந்த கலையை பயிற்றுவித்திருக்கிறேன். ஏன்...? லட்சத்தீவு மற்றும் செஷல்ஸ் தீவுகளுக்கு பயணமாகி, கழிவை கலைப்பொருளாக மாற்றும் வித்தையை கற்றுக்கொடுத்திருக்கிறேன்'' என்றவர், பல மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் தொழில் பயிற்சி வழங்குகிறார்.

கழிவுப்பொருட்களில் கலை படைப்புகளை உருவாக்கும் உமாபதிக்கு, பள்ளி நிர்வாகமும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் உறுதுணையாக இருக்கிறார்கள். புதுச்சேரி முதலையார்பேட்டை பகுதியில் வசிக்கும் இவருக்கு ஜெயகலா என்ற மனைவியும், கிஷாலி என்ற மகளும், கிரிஷவ் என்ற மகனும் உண்டு.

மேலும் செய்திகள்