< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஆப்பிள் ஐ-போன் 14 புரோ, வயர்லெஸ் இயர்போன், அல்ட்ரா ஸ்மார்ட் கடிகாரம்
சிறப்புக் கட்டுரைகள்

ஆப்பிள் ஐ-போன் 14 புரோ, வயர்லெஸ் இயர்போன், அல்ட்ரா ஸ்மார்ட் கடிகாரம்

தினத்தந்தி
|
15 Sept 2022 5:36 PM IST

பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் 14 புரோ மற்றும் ஐ-போன் 14 புரோ மேக்ஸ் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை சுமார் ரூ.1,29,900 முதல் ஆரம்பமாகிறது. இவை இரண்டிலும் புதிய ஏ 16 பயோனிக் சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 48 மெகா பிக்ஸெல் கேமரா, கீழே விழுந்து சேதமடைவதை உணர்ந்து எச்சரிக்கும் வசதி மற்றும் அவசர கால தகவலை செயற்கைக்கோள் மூலமாக அனுப்பும் வசதி ஆகியவை கொண்டது. 6.1 அங்குலம் மற்றும் 6.7 அங்குலம் ஓலெட் சூப்பர் ரெட்டினா திரை, எப்போதும் ஒளிரும் வகையிலான நுட்பம் கொண்டது. முன்புற கண்ணாடி பகுதியைப் பாதுகாக்கும் வகையில் செராமிக் ஷீல்டு கவர் கொண்டது.

இதில் பொருத்தப்பட்டுள்ள ஏ 16 பயோனிக் சிப் பன்மடங்கு செயல்திறன் கொண்டது. முந்தைய மாடல்களை விட 40 சதவீதம் கூடுதல் செயல்திறன் கொண்டதாக இது உள்ளது. இதில் உள்ள கேமரா மூலம் 4-கே ரெசல்யூஷனில் வீடியோ காட்சிகளை டிஜிட்டல் ஜூம் வசதியின்றி பதிவு செய்ய இயலும். முன்புறம் 12 மெகாபிக்ஸெல் கேமரா மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளையும் பதிவு செய்யலாம். தூசி மற்றும் நீர் புகாத தன்மை கொண்டது. இரண்டு சிம்கார்டு (நானோ மற்றும் இ சிம்) போடும் வசதி உள்ளது. உள்ளீடாக லித்தியம் அயன் பேட்டரி விரைவாக சார்ஜ் ஆக 15 வாட் மேக் சேப் வயர்லெஸ் சார்ஜர் வசதியுடன் வந்துள்ளது. இது 23 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. கருப்பு, சில்வர், தங்க நிறம், பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் 128 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1 டி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது. 1 டி.பி. நினைவகம் உள்ள மாடலின் விலை சுமார் ரூ.1,89,900.

வயர்லெஸ் இயர்போன்

ஆப்பிள் வயர்லெஸ் இயர்போனின் புதிய மாடல் ஏர்போட்ஸ் புரோ என்ற பெயரில் சுமார் ரூ.26,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் துல்லியமான இசையை வழங்கும் திறன் கொண்டது. இதில் ஹெச் 2 சிப்செட் மற்றும் 2 எக்ஸ் மேம்பட்ட சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் உள்ளது. இது இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த மாடலாகும். காதின் முனைப் பகுதி மூன்று அளவுகளில் (சிறிய, நடுத்தர மற்றும் பெரியது) கிடைக்கிறது. தங்களுக்கு விருப்பமான இசையைத் தேர்வு செய்யும் வசதி கொண்டது.

ஐ-போன், ஐ-பேட், மேக் மற்றும் ஆப்பிள் டி.வி.யுடன் இதை இணைக்க முடியும். அவரவர் தேர்வு செய்யும் இசையின் அளவிற்கேற்ப இது செயல்படும் நுட்பம் கொண்டது. 30 மணி நேரம் செயல்படக் கூடியது. சார்ஜிங் கேஸ் கியூ ஐ நுட்பம் கொண்டது. இதனால் இது இருக்குமிடத்தை மறந்து வைத்தாலும் எளிதில் கண்டு பிடிக்க முடியும். இதில் உள்ள ஹெச் 2 சிப், சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டதாகும். தொடு உணர் மூலம் இதன் இசையைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.

அல்ட்ரா ஸ்மார்ட் கடிகாரம்

ஆப்பிள் நிறுவனம் அல்ட்ரா என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் அழகிய வடிவமைப்பு, சாகச செயல் புரிவோரைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட இதன் திரை பெரியதாகும். இது டைட்டானியம் உலோகத்தால் ஆனது. விமானங்களில் பயன்படுத்தும் இத்தகைய உலோகம் வலுவானதாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாகவும், எடை குறைவான தாகவும், துருப்பிடிக்காத தன்மை கொண்டதாகவும் இருக்கும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 36 மணி நேரம் செயல்படக் கூடியது.

இதில் உள்ளீடாக 3 மைக்ரோபோன் உள்ளது. இது அழைப்புகளுக்கு பதில் அளிக்க உதவும். காற்றின் வேகத்தையும் இது தடுத்து மறுமுனையில் இருப்பவர்களுக்கு பேசுபவரது குரல் கேட்கும் வகையில் செயல்படும். 2.4 மைல் நீச்சல், 112 மைல் சைக்கிள் ஓட்டுதல், 26.2 மைல் மாரத்தான் ஓட்டம் உள்ளிட்ட டிரையத்லான் வீரர்களின் செயல் திறனை துல்லியமாகப் பதிவு செய்யும் திறன் கொண்டது. இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பல உடல் சார்ந்த விஷயங்களை அறிவுறுத்தும். இதை அணிந்திருப்பவரது கார் விபத்துக்குள்ளானால் 10 விநாடிகளில் எவ்வித சலனமும் இல்லாவிடில் உடனடியாக அவசர உதவிக்கு தானாக அழைப்பு மேற்கொள்ளும். விபத்து நிகழ்ந்த இடம் உள்ளிட்ட தகவலையும் பகிர்ந்துவிடும். இதன் விலை சுமார் ரூ.89,900.

மேலும் செய்திகள்