ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் இளைஞர்
|ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் இளைஞர், அங்கு பகுதி நேரமாக வருமானம் ஈட்டி தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் தேநீர் கடை நடத்தி வரும் இளைஞர் ஒருவர், இந்திய மாணவர்கள், பகுதி நேரமாக சம்பாதிக்கவும் வழிவகுத்து கொடுத்துள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று பயிலும் இந்தியர்கள், அங்கு பகுதி நேரமாக வருமானம் ஈட்டி தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அங்கு தேநீர் கடை நடத்தி வருகிறார். தான் படிப்பை பாதியில் கைவிட்டாலும், மற்ற இந்திய மாணவர்கள் தொடர்ந்து படிக்கும் வகையில், தனது கடையில் சிலருக்கு பகுதி நேரமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்து இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், பி.பி.ஏ. என்று கூறப்படும் வணிகத்தில் இளங்கலைப் படிப்பு படிப்பதற்காக ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த சஞ்சித் என்பவர் சென்றார். திடீரென படிப்பை பாதியில் கைவிட்ட அவர், `டிராப் அவுட் சாய்வாலா' என்ற பெயரில் தேநீர் கடையை நிறுவினார். தேநீர் கடை நடத்துவது என்பது நமது நாட்டில் சாதாரண விஷயம்.
ஆனால், ஆஸ்திரேலியாவில் அப்படி கிடையாது. அது துணிச்சலான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சஞ்சித் கடை வைத்த இடம் தேநீர், காபிக்கு புகழ்பெற்ற மெல்போர்ன் நகரமாகும். தேநீர், காபியின் சுவை, தரத்திற்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதை உணர்ந்த சஞ்சித், `டிராப் அவுட் சாய்வாலா' கடையை சிறப்பாக நடத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறார்.
இதன்மூலம் அவர் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் ஒரு மில்லியன் அளவுக்கு சம்பாதித்து இருக்கிறார். அதாவது இந்திய ரூபாயில் சுமார் 5 கோடியாகும்.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்களை பகுதிநேரமாக தேநீர் கடையில் பணியமர்த்தி உள்ள அவர், அவர்கள் வருவாய் ஈட்ட வழிகாட்டி இருக்கிறார். தன்னால் நிறைவு செய்ய முடியாத படிப்பை, மற்றவர்கள் சிரமமின்றி முடிக்க வேண்டும் என்பது சஞ்சித்தின் நோக்கமாக உள்ளது.
இதுபற்றி அவர் கூறுகையில், "தேநீர் கடையில் லாபம் ஈட்டும் என்னை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு யாரும் படிப்பை பாதியில் விட்டு வெளியே வரவேண்டாம். கல்வி மனிதனுக்கு மிகப்பெரிய சொத்து, படிப்பை முடித்த பின்னர் வேலைக்குச் செல்வதா… அல்லது சொந்தத் தொழில் ஆரம்பிப்பதா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்" என்று அறிவுரை கூறியுள்ளார்.
சஞ்சித் கடை வைத்த இடம் தேநீர், காபிக்கு புகழ்பெற்ற மெல்போர்ன் நகரமாகும். தேநீர், காபியின் சுவை, தரத்திற்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.