< Back
சிறப்புக் கட்டுரைகள்
காவல்துறையில் ஒரு இரும்பு மனிதன்
சிறப்புக் கட்டுரைகள்

காவல்துறையில் ஒரு 'இரும்பு மனிதன்'

தினத்தந்தி
|
29 Oct 2022 2:53 PM IST

ஒவ்வொரு வருடத்தின் இறுதி மாதங்களிலும் அடுத்த புத்தாண்டு சபதமாக பலரும் சில உறுதிமொழியை ஏற்பார்கள். பெரும்பாலானோர் உடல் எடையை குறைப்பதற்கு தீர்மானிப்பார்கள். ஆனால் உடல் பருமனை குறைப்பது சாதாரண விஷயமல்ல. மாதக்கணக்கில் நீண்டு வருடங்களையும் தாண்டி கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உடல் எடையை குறைப்பதை லட்சியமாக கொண்டு அதற்கேற்ப வழிமுறைகளை பின்பற்றினால் கட்டுக்கோப்பான உடல் அழகை பெறுவதோடு விரும்பியதை சாதிக்கவும் முடியும் என்பதற்கு முன் மாதிரியாக திகழ்கிறார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஷைல் பியாகோட்.

38 வயதாகும் இவர் கர்நாடக மாநிலம் பெலகாவி அடுத்த கட்டபிரபா காவல் நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணி புரிகிறார். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் போன்றவற்றை உள்ளடக்கிய டிரையத்லான் போட்டியில் பங்கேற்பதற்காக 30 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து, அந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்திருக்கிறார். 'ஹாப் 'அயர்ன்மேன்' எனப்படும் டிரையத்லான் போட்டியில் வென்ற முதல் கர்நாடக காவல்துறை வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஹாப் அயர்ன்மேன் என்பது ஒலிம்பிக் டிரையத்லானின் தூரத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அதில் 1.9 கி.மீ. நீச்சல், 90 கி.மீ. சைக்கிள் ஓட்டுதல் மற்றும் 21.1 கி.மீ. ஓட்டம் ஆகியவை அடங்கும். இந்த மூன்று போட்டிகளின் இலக்கையும் 10 மணி நேரத்திற்குள் எட்டிப்பிடிக்க வேண்டும். ஆனால் ஸ்ரீஷைல் பியாகோட், 6 மணி நேரம் 39 நிமிடங்களிலேயே முடித்து சாதித்துவிட்டார். 1.9 கி.மீ. தூர நீச்சல் போட்டியில் 52 நிமிடம் 48 வினாடிகளில் நீந்தி முடித்துவிட்டார். 90 கி.மீ சைக்கிள் ஓட்டும் பந்தயத்தை 2 மணி 57 நிமிடங்களில் கடந்துவிட்டார். 21 கி.மீ. தூர ஓட்டப்பந்தய தூரத்தை 2 மணி நேரம் 28 நிமிடங்களில் எட்டிப்பிடித்துவிட்டார். குறுகிய காலத்தில் இலக்கை துரத்தியதையடுத்து ரெவர் ஸ்டார் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டிலும் நுழைந்துவிட்டார்.

''2014-ம் ஆண்டு 102 கிலோவாக இருந்த நான், 2019-ம் ஆண்டு 96 கிலோவாக எடை குறைந்தேன். தற்போது எனது உடல் எடை 75 கிலோவாக உள்ளது. இதற்காக நான் எந்த மாயாஜாலமும் நிகழ்த்தவில்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத்தான் பின்பற்றினேன். ஆரோக்கியத்தை விட முக்கியமானது எதுவுமில்லை என்பதை 35 வயதில்தான் உணர்ந்தேன். அதனை பின்பற்றியதால் இது சாத்தியமானது'' என்கிறார்.

100 கிலோவுக்கும் அதிகமாக உடல் எடை கொண்டிருந்த சமயத்தில் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உடற்பயிற்சி செய்ய தொடங்கி இருக்கிறார். அவரது மனைவி ஸ்மிதா உள்பட அவரது நலம் விரும்பிகள் பக்கபலமாக இருந்து வழிகாட்டி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்தவர் பின்னர் ஜிம்மில் சேர்ந்து, படிப்படியாக ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் டென்னிஸ் விளையாடத் தொடங்கி இருக்கிறார். இத்தகைய பயிற்சிகள் டிரையத்லான் போட்டியில் பங்கேற்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நடந்த ஹாப் அயர்ன்மேன் டிரையத்லான் போட்டியில் பங்கேற்று வெற்றிவாகை சூடிவிட்டார்.

ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சிக்காக 3 முதல் 4 மணிநேரம் ஒதுக்குவதாக ஸ்ரீஷைல் கூறுகிறார். வாரத்திற்கு இரண்டு முறை நீச்சலில் கவனம் செலுத்துகிறார். சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பந்தயம் போன்றவற்றுக்கும் தலா இரண்டு நாட்கள் செலவிடுகிறார். தனது மனைவியின் அறிவுறுத்தலின் படி குறைவான எண்ணெய்யில் தயாராகும் உணவு பொருட்கள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், ஓட்ஸ் உள்ளிட்ட உணவு முறையை பின்பற்றி வருகிறார்.

"பணத்தை விட ஆரோக்கியத்திற்கு முக்கி யத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும். நீங்கள் பொருத்தமான உடல்வாகுவுடன் இருந்தால், உங்களுக்கு எல்லாம் கிடைக்கும். ஒவ்வொரு நபரும் உடல் தகுதிக்காக குறிப்பிட்ட நேரத்தை செலவிட வேண்டும்'' என்கிறார்.

கோலாப்பூரில் நடந்த ஹாப் அயர்ன் டிரையத்லான் தான் பங்கேற்ற முதல் போட்டி என்றும், அதில் தங்கப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஸ்ரீஷைல் கூறுகிறார். போட்டியில் பங்கேற்பதற்கு அதிக ஸ்டெமினா தேவைப்படும் என்பது தனக்குத் தெரியும் என்றும், அதனை அதிகரிப்பதற்காக டென்னிஸ் விளையாட்டில் கவனம் செலுத்தியதாகவும் கூறுகிறார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கஜகஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச அயர்ன்மேன் போட்டியில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். 2019-ம் ஆண்டு சிறந்த காவல் சேவைக்காக முதல்-மந்திரி பதக்கம் பெற்றிருக்கும் ஸ்ரீஷைல், உடல்நலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரது முயற்சியால் கட்டபிரபா காவல்நிலையத்தில் உள்ள மற்ற போலீசாரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்