< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஆன்லைன் வர்த்தகத்தில் அசத்தும் இந்திய-பாகிஸ்தான் பெண்கள்
சிறப்புக் கட்டுரைகள்

ஆன்லைன் வர்த்தகத்தில் அசத்தும் இந்திய-பாகிஸ்தான் பெண்கள்

தினத்தந்தி
|
5 Feb 2023 8:13 PM IST

உலகம் முழுவதும் 4.26 பில்லியன் மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணிக்கை 2027-ம் ஆண்டில் 6 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு பெண்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மூலம் தெற்காசியாவில் வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக உருவெடுத்துள்ளார்கள். இவர்களது தன்னம்பிக்கை கதையானது, பல உலக இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என பிரபல சர்வதேச டி.வி.யில் ஆவணப்படம் வெளியாகி இருந்தது. அந்த இருவரில், ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான கிரிதி குப்தா. இவர் குழந்தைகளுக்கான சோப்புகளை தயாரித்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் வழியே விற்பனை செய்கிறார்.

இவரைப்போலவே, பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து 500 கி.மீ தொலைவில் வசிக்கும் சரா ஜபார் மிர் என்ற பெண், குழந்தைகளுக்கான தயாரி்ப்புகளை சமூக ஊடகங்கள் வழியே விற்பனை செய்கிறார். தினமும் 1 லட்சத்து 50 ஆயிரம் பின்தொடர்பாளர்களிடம் தமது தயாரிப்புகளை கொண்டு சேர்க்கிறார். குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் பிரசவத்துக்கு பிந்தைய சாதனங்களை விற்பனை செய்கிறார்.

இது குறித்து பாகிஸ்தானை சேர்ந்த மிர் கூறும்போது, ''என் கணவர் எனக்கு ஒத்துழைப்பது நான் செய்த பாக்கியம். எனது வணிகத்துக்கு குழந்தைகளும் உதவுகிறார்கள்" என்றார். குப்தாவும், மிர்ரும் வெவ்வேறு நாடுகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், இருவருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

இருவரும் புதிய தலைமுறை தெற்காசியப் பெண்கள். சமூக ஊடகங்களை முழுமையாகப் பயன்படுத்தி தனித்துவமான ஆன்லைன் வணிகத்தை உருவாக்குகிறார்கள். சமூக ஊடகங்களை பயன்படுத்தி நிதி சுயச்சார்பை எட்டியுள்ளனர்.

உலகம் முழுவதும் 4.26 பில்லியன் மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணிக்கை 2027-ம் ஆண்டில் 6 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமூக ஊடகங்களில் தான் புதிய, ஆற்றல்மிக்க சந்தை உருவாகி வருகிறது. அந்த வகையில் இந்த இரு பெண்களும் ஆணாதிக்க விதிமுறைகளை தகர்த்தெறிந்து சமூக ஊடகங்கள் வழியே தங்கள் வணிகத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து குப்தா கூறும்போது, ''எனது இன்ஸ்டா கடையை எப்போதும் மூடியதில்லை. நான் கூட்டுக்குடும்பத்தில் வாழ்கிறேன். நல்ல குடும்பம் கிடைத்தால் எதையும் சமாளிக்க முடியும் என்பதை உணர்ந்தேன். அந்தவகையில் நான் கொடுத்து வைத்தவள்.

பிறந்து வளர்ந்தது பாங்காக் என்றாலும், 21 வயதில் இந்தியாவுக்கு வந்தேன். ஜெய்ப்பூரில் திருமணம் நடந்தது. இன்ஸ்டாகிராமில் உள்ள 760 பின்தொடர்பாளர்கள் தொடர்ந்து எனது தயாரிப்புகளை வாங்குகின்றனர். 25 வகையான இயற்கை சோப்புகளை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்கிறேன்" என்றார்.

மேலும் செய்திகள்