ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற 'போலோ' டீசர்
|‘போலோ’ டீசர் வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 1 கோடி ரசிகர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி மற்றும் நரேன் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கைதி'. இந்தப் படத்தின் கதை மற்றும் வித்தியாசமான திரைக்கதையின் காரணமாகவும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட படமாகவும், மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது. இந்தப் படத்தை இந்தியில் எடுப்பதற்கான உரிமையை வாங்கி, நாயகனாக நடிப்பதுடன் படத்தை இயக்கவும் செய்துள்ளார், அஜய் தேவ்கன். 'கைதி' படத்தின் மையக் கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, திரைக்கதையை முற்றிலுமாக மாற்றி படமாக்கியிருக்கிறாராம், அஜய்தேவ்கன். தமிழில் கதாநாயகி கிடையாது. ஆனால் இந்தி படத்தில் தபு நடிக்கிறார். அவர் கதாநாயகியாக நடிக்கிறாரா, அல்லது தமிழில் நரேன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் 'போலோ' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் ஒரு சிறுமியிடம், அந்த காப்பகத்தின் அதிகாரி "நாளை உன்னைப் பார்க்க உன்னுடைய நெருங்கிய சொந்தக்காரர் ஒருவர் வரப்போகிறார்" என்று சொல்கிறார். இதனால் பிறந்தது முதல் தனக்கு யாரும் இல்லை என்று கருதிக்கொண்டிருந்த சிறுமி, தன்னை பார்க்க வருபவர் யாராக இருக்கும் என்று, இரவு முழுவதும் தூங்காமல் காத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரம் பல ஆண்டுகளாக சிறைக் குற்றவாளியாக இருந்த அஜய்தேவ்கன் சிறையில் இருந்து விடுதலையாவது போன்று, அந்த அமைக்கப்பட்டுள்ளது. இந்த டீசர், பாலிவுட் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. டீசர் வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 1 கோடி ரசிகர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர்.