< Back
சிறப்புக் கட்டுரைகள்
மார்பகப் புற்றுநோயை கண்டறியும் கருவி..!
சிறப்புக் கட்டுரைகள்

மார்பகப் புற்றுநோயை கண்டறியும் கருவி..!

தினத்தந்தி
|
3 Jan 2023 1:58 PM GMT

மார்பகப் புற்றுநோயை கண்டறியும் கருவியை வடிவமைத்து இருக்கிறார் பெங்களூருவை சேர்ந்த கீதா மஞ்சுநாத்.

பெங்களூருவை சேர்ந்த கீதா மஞ்சுநாத், கடந்த 2016-ம் ஆண்டு ஒரு நிறுவனத்தில், டேட்டா அனலிட்டிக்ஸ் ரிசர்ச் லேபரேட்டரிக்கு தலைமை தாங்கி ஓர் அற்புதமான வாழ்க்கையைப் பெற்றார். அந்த சமயத்தில், அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது அவரது வாழ்க்கையையே மாற்றியது.

42 வயதான அவரது உறவினருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தாமதமாக நோய் கண்டுபிடிக்கப்பட்டதால், அவரை காப்பாற்ற முடியவில்லை. அந்த சமயத்தில் பேரழிவை எதிர்கொண்ட உணர்வு எனக்கு ஏற்பட்டது என்கிறார் கீதா.

பெங்களூருவில் பணியாற்றி வந்த கீதா, அந்த வேலையை விட்டுவிட்டு, மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய சாதனத்தைக் கண்டுபிடிக்க முடிவு செய்தார். அதுமட்டுமல்ல, கதிர்வீச்சு இல்லாத மற்றும் கதிர்விச்சு ஊடுருவாத வகையில் இந்த சாதனத்தை அவர் வடிவமைத்து இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், "45 வயதுக்குட்பட்ட பெண்களிடம் புற்றுநோயைக் கண்டறிய முடியாததால், அதை முன்கூட்டியே கண்டறிய உதவும் ஒரு கருவியை உருவாக்க நான் விரும்பினேன்.

ஏற்கனவே பணியாற்றிய நிறுவனங்களில் இந்த தொழில்நுட்பம் குறித்த அனுபவம் இருந்ததால், இந்த சாதனத்தை உருவாக்குவது எனக்கு எளிதாக இருந்தது. இந்த தெர்மோகிராபி சாதனத்தில், மார்பகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெப்பநிலை விவரங்களைப் பதிவு செய்ய அகச்சிவப்பு கேமராவைப் பயன்படுத்தியுள்ளேன்.

அறிவியல் ஆராய்ச்சியின்படி, ஒரு கட்டியின் இருப்பை வெப்பநிலை மூலம் கண்டறிய முடியும். ஆனால், இதில் முடிவுகளைக் கண்டறிவதில் சிக்கல் இருந்தது. இந்த சிக்கலை படிப்படியாக சரி செய்தோம். மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, 72 புற்றுநோயாளிகளின் வெப்ப படங்களைப் பயன்படுத்தி ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினோம். அப்போது இந்த நோயாளிகளை நாங்கள் பரிசோதித்தபோது, அவர்களுக்குக் கட்டி இருந்த இடத்தைக் கண்டறிய முடிந்தது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2020-ம் ஆண்டு 23 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. இது உலகின் பொதுவான நோயாகும். அதே ஆண்டில் உலகம் முழுவதும் 6 லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 2020-ம் ஆண்டு மார்பகப் புற்றுநோய்க்கு 37.2 சதவிகிதம் பேர் பலியாகியுள்ளனர். உலக அளவில் இந்த இறப்பு விகிதம் 30 சதவிகிதம் என சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது" என்றார்.

இது உலகின் பொதுவான நோயாகும். அதே ஆண்டில் உலகம் முழுவதும் 6 லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்