< Back
சிறப்புக் கட்டுரைகள்
செல்ல நாய்க்குட்டியுடன், சாகச பைக் பயணம்..!
சிறப்புக் கட்டுரைகள்

செல்ல நாய்க்குட்டியுடன், சாகச 'பைக்' பயணம்..!

தினத்தந்தி
|
30 July 2022 10:30 AM IST

வெள்ளைப் பனி மூடிய சிகரங்கள், பரந்து விரிந்த மலைகள், தெளிவான நீல வானம் என பார்க்கும் திசையெங்கும் அமைதியும் அழகுமாக இருக்கிறது லடாக். அங்கு தன் செல்ல நாய்க்குட்டி ஸ்னோபெல்லுடன் சமீபத்தில் சாகசப் பயணம் செய்திருக்கிறார் சுதீஷ்.

வாழ்நாள் முழுவதும் கிடைக்காத ஒரு வாய்ப்பைப் பெற்றது அந்த நாய்க்குட்டி. பனியில் விளையாடி மகிழ்ந்தது. மலை ஏரிகளில் தெளிந்த நீரைக் கண்டு குதூகலித்தது. கொச்சியிலிருந்து ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் 'பைக்' பின்னால் அமர்ந்து பயணம் செய்திருக்கிறது.

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சுதீஷ், இப்போது கொச்சியில் பணியாற்றுகிறார். அங்கிருந்துதான், தன் செல்ல நாய்க்குட்டியுடன் இந்த சாகச பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்த தொலைதூர சாகச பயணத்தில், இவருடன் மூன்று வயது நாய்க்குட்டி பின் இருக்கையில் சவாரி செய்தது.

இருவரும் இரண்டு மாதங்களில் லடாக் பயணத்தை முடித்துள்ளனர். எந்த வருத்தமோ, கசப்பான பேச்சுகளோ, கருத்து வேறுபாடுகளோ இல்லாமல் 12 ஆயிரம் கி.மீ. பயணம் செய்திருக்கிறார்கள். ஸ்னோபெல், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுதீஷை தற்செயலாக சந்தித்தது. அன்று முதல் அதன் வாழ்க்கை மாறியது. சுதீஷின் வாழ்க்கையையும் மாற்றிவிட்டது.

''சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஸ்னோபெல்லை கண்டேன். அழகான அந்த நாய்க்குட்டி என் மனதை உருகவைத்தது. எடுத்து வளர்க்க ஆரம்பித்தேன். தொடக்கத்தில் மிகவும் சண்டையிடும். இப்போது நாங்கள் இருவரும் தோழர்கள். எனக்கு வெகுநாட்களாகவே பைக் பயணம் மேற்கொள்ளும் திட்டம் இருந்தது. ஸ்னோபெல்லை பார்ப்பதற்கு முன்பே திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதனை விட்டுவிட்டு பயணம் மேற்கொண்டால் 2 மாதங்கள் தனியாக எப்படி இருக்கும் என்ற கேள்வி என் மனதில் நிழலாடிக்கொண்டே இருந்தது. அதனால்தான், சாகச பயணத்தில் ஸ்னோபெல்லையும் இணைத்துக்கொண்டேன்" என்றார்.

இவர்கள் வடகிழக்கு மாநிலங்கள் தவிர, இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார்கள். பைக்கில் இருவரும் மே 8-ந் தேதியன்று பயணத்தைத் தொடங்கினர். சோதனை ஓட்டம் இருவரின் நம்பிக்கையை உயர்த்தியது.

''பனி மூடிய மலைகளுக்குச் செல்ல ஸ்னோபெல் ஆர்வமாக இருந்தது. மலையேற்றத்தை விரும்பியது. குறிப்பாகப் பனியுடன் விளையாடுவதில் உற்சாகம் கொண்டது. மகாராஷ்டிராவின் மிக உயரமான இடமான கல்சுபாய் சிகரத்தையும் நாங்கள் ரசித்தோம். இந்த நீண்ட பயணத்தின் வழியில் செல்லப்பிராணிகளுக்கு அனுமதியில்லாத இடங்கள், சோதனை நடத்தப்படும் வழித்தடங்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளை நான் கைவிட்டேன்'' என்றவர், ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க்கின் இயற்கை பேரழகில் திளைத்ததாக கூறுகிறார். பின்னர் கேதார்நாத்தில் 42 கி.மீ. மலையேற்றத்தை ஸ்னோபெல் ரசித்தது. மேலும், நுப்ரா பள்ளத்தாக்கில் சவாரி செய்து மகிழ்ந்தது. லடாக்கில் வெந்நீர் ஊற்றுகளையும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தது.

செல்ல நாய்க்குட்டி ஸ்னோபெல் மற்றும் சுதீஷ் இருவரும் தங்கள் பயணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தயாராகி இருக்கிறார்கள். "வெல்டர் உதவியுடன் பைக்கில் ஒரு கேரியரை உருவாக்கினேன். லடாக்கிற்கான பயணம் என்பது வெவ்வேறு நிலப்பரப்புகளின் வழியாகச் செல்வதாக இருக்கும். இதற்காக நான் ஸ்னோபெல்லுடன் பல சோதனை ஓட்டங்களை செய்தேன்" என்றார் சுதீஷ். இவர்கள் அடுத்ததாக, தமிழகத்தை சுற்றிப்பார்க்க பயணத்திட்டத்தை வகுத்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்