சர்க்கரை இல்லாத இனிப்புகள் பற்றிய கட்டுக்கதைகள் - உண்மைகள்
|ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ்வதற்கு குறைந்த கலோரிகளை கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும் வழக்கம் சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
உடல் பருமன்தான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதிக கலோரிகள் மற்றும் அதிக கொழுப்புகள்கொண்ட உணவுகளை சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரித்துவிடும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கிறது. ஆனால் சாப்பிடும் உணவில் சர்க்கரை கலந்திருக்கும் அளவு பற்றி பலரும் கவனத்தில் கொள்வதில்லை.
சர்க்கரையை அறவே தவிர்ப்பது சாத்தியமில்லாதது. அதனால் பலரும் குறைந்த கலோரி கொண்ட செயற்கை இனிப்பு பொருள் எனப்படும் 'சுகர் பிரீ சுவீட்ஸ்' உட்கொள்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இது சர்க்கரையை போன்றே இனிப்பு சுவையை அளிக்கக்கூடியது. அதே நேரத்தில் சர்க்கரை அடிப்படை யிலான இனிப்புகளை விட குறைந்த ஆற்றலை கொடுக்கக்கூடியது. குறைந்த கலோரி கொண்ட இனிப்பு பொருள் எனப்படும் 'சுகர் பிரீ சுவீட்ஸ்' பற்றிய கட்டுக்கட்டுக்கதைகள் பற்றியும், அதன் உண்மைத் தன்மை பற்றியும் பார்ப்போம்.
கட்டுக்கதை: 'சுகர் பிரீ உணவு பொருட்கள்' அனைத்தும் ஒரே மாதிரியானவை.
உண்மை: சர்க்கரை இல்லாத எல்லா உணவுகளும் சமமாக உருவாக்கப்படுவதில்லை. அஸ்பார்டேம், சுக்ரலோஸ், ஸ்டீவியா போன்ற வெவ்வேறு ரசாயனங்கள் சர்க்கரை இல்லாத உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. அஸ்பார்டேம் அதிக வெப்பநிலையில் எதிர்வினை புரியும் என்பதால் அதை பேக்கிங் அல்லது சூடான பொருட்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தக்கூடாது.
குளிர்ச்சியான பொருட்களின் தயாரிப்புகளுக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம். சுக்ரலோஸை அதிக வெப்ப நிலையிலும் பயன் படுத்தலாம். எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. குறிப்பாக சூடான டீ, காபி மற்றும் குளிர்ந்த பொருட்களுடனும் பயன்படுத்தலாம். ஸ்டீவியா அதிக வெப்பநிலையிலும் சீரானது என்றாலும், கசப்பான சுவையை வெளிப்படுத்தும் என்பதால் பலரும் அதனை விரும்புவதில்லை.
கட்டுக்கதை: சுக்ரலோஸ் போன்ற செயற்கை இனிப்புகளை விட ஸ்டீவியா போன்ற இயற்கை இனிப்புகள் சிறந்தவை.
உண்மை: இரண்டு வகையான இனிப்புகளும் உட்கொள்வதற்கு பாதுகாப்பானவை. ஆனால் குழந்தைகளுக்கு, ஸ்டீவியா மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. எந்தவொரு புதிய உணவை உட்கொள்வதற்கு முன்பும் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. ஆரோக்கியத்தில் எதிர் மறையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
கட்டுக்கதை: சர்க்கரை இல்லாத இனிப்புகள் (சுகர் பிரீ சுவீட்ஸ்) கல்லீரலுக்கு நல்லதல்ல.
உண்மை: சர்க்கரை இல்லாத இனிப்புகளில் தனித்துவமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் வெள்ளை சர்க்கரையை விட 300 முதல் 500 மடங்கு அதிகமான இனிப்புகள் சம அளவில் உள்ளன. இருப்பினும் அனைத்து இனிப்புகளின் தன்மையும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்குள் சுகர் பிரீ உணவுகளை உட்கொள்வது பாதுகாப்பானது. கல்லீரலுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
கட்டுக்கதை: சர்க்கரை இல்லாத இனிப்புகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது.
உண்மை: இது தவறானது, ஏனெனில் ஒவ்வொரு உணவு பொருளிலும் கிளைசெமிக் உள்ளது. அதிக கிளைசெமிக் கொண்ட ஒரு பொருளை சர்க்கரை இல்லாத இனிப்பு பொருள் தயாரிக்க பயன்படுத்தினாலும் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இந்த பொருட் களின் தயாரிப்பில் சேர்க்கப்படும் இனிப்பு 20 முதல் 25 சதவீதத்துக்குள்தான் இருக்கும். மீதமுள்ள 75 முதல் 80 சதவீதம் பொருட்கள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். எனவே எந்தவொரு பொருள் வாங்கினாலும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட் களின் அளவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
கட்டுக்கதை: சர்க்கரை இல்லாத இனிப்புகளில் கலோரிகள் அறவே இல்லை. பூஜ்ஜிய நிலையிலேயே உள்ளன.
உண்மை: சோயா, பால் பவுடர், பெசன், பால் பொருட்கள் போன்ற பல பொருட்களை பயன்படுத்தி சர்க்கரை இல்லாத இனிப்பு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் பயன்படுத்தப்படும் இனிப்பு மட்டுமே குறைவான கலோரிகள் உள்ளவை. மீதமுள்ள பொருட்கள் ஒரே மாதிரியான கலோரிகளை கொண்டவை. எனவே சர்க்கரை இல்லாத இனிப்புகள் சாதாரண இனிப்புகளை விட சற்றே குறைந்த கலோரிகளை கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றில் கலோரிகள் அறவே இல்லை என்று கூற முடியாது.
எந்தவொரு உணவு பொருட்களை வாங்குவதற்கு முன்பும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலோரிகள், ஊட்டச்சத்துக்களின் அளவை சரிபார்த்துக்கொள்வது நல்லது.