சுற்றுச்சூழல் சீர்கேடு: டெல்லியை மீட்கப்போராடும் அதிகாரிகள்
|பஞ்சாபில் பயிர் கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக மாற்று வழியில் பயன்படுத்துவது குறித்து பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வட இந்தியாவைப் பொறுத்தவரை, பஞ்சாபில் மட்டும் 80 விழுக்காடு வைக்கோல் நிலத்திலேயே எரிக்கப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலையில், பதன்கோட் மாவட்டத்தில் பயிர் கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக மாற்று வழியில் பயன்படுத்துவது குறித்து பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் நெல் அறுவடை முடிந்ததும் பயிர் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படும். இதனால், ஏற்படும் மாசு, தலைநகர் டெல்லி வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
2021-ம் ஆண்டு 71 ஆயிரத்து 304 இடங்களில் வைக்கோல்கள் எரிக்கப்பட்டதால், பெருமளவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டது. நெல் அறுவடைக்கும், கோதுமை விதைப்புக்கும் இடைப்பட்ட கால அவகாசம் குறைவாக இருப்பதால் வைக்கோலை எரிப்பதாக கூறுகின்றனர், விவசாயிகள்.
இதற்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஓரளவு வெற்றி கண்டு இருக்கிறார்கள். இதுபற்றி அதிகாரி டாக்டர் அம்ரிக் சிங் கூறுகையில், "வைக்கோல்களை எரிப்பதில் அதிகம் பங்கு வகிக்கும் மாநிலமாக பஞ்சாப் கருதப்பட்டது.
வட இந்தியாவை பொறுத்தவரை 80 சதவிகித பயிர்க்கழிவுகள் பஞ்சாபில் எரிக்கப்பட்டு வந்தன. விவசாயிகளின் ஒத்துழைப்போடு இதனைத் தடுத்து நிறுத்தியுள்ளோம்.
பதன்கோட் மாவட்டத்தில் வைக்கோலுக்கு தீ வைப்பதை 100 சதவிகிதம் தடுத்து நிறுத்தியுள்ளோம். வைக்கோலை எரிப்பதால் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர் ஆக்சைடு மற்றும் மீத்தேன் போன்றவை சுற்றுச்சூழலுக்கும் நமது ஆரோக்கியத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதை குறைக்க நேரடியாக களமிறங்கியும், யூ-டியூப் சேனல் தொடங்கியும் விவசாயிகளுக்கு அதன் பாதிப்புகளை எடுத்து கூறி வருகிறோம். கூடவே, தோட்டங்களிலும், விளைநிலங்களிலும் பயிர்க்கழிவுகளை எரிக்காத விவசாயிகளின் வெற்றிக் கதைகளை யூடியூப் சேனலில் பகிர்ந்தோம்.
இது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளைச் சென்றடைந்தது. இதுவரை இது தொடர்பாக 156 காணொளிகளைப் பதிவேற்றம் செய்துள்ளோம். இதுதவிர வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் வைக்கோலை எரிக்கக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
பதன்கோட் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 50 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் ஆண்டுதோறும் 1.3 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு வைக்கோல் உற்பத்தியாகிறது.
இந்த வைக்கோலை எரிப்பதற்குப் பதில் அவற்றை கால்நடை தீவனத்திற்கு விற்குமாறு விவசாயிகளை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியது. இதன்மூலம் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் பயன் அடைந்தனர்.
தங்கள் நிலத்தில் மீதமான வைக்கோலை விற்பதன் மூலம் ஒரு ஏக்கருக்கு விவசாயிகளுக்கு ரூ.3,000 கிடைக்கிறது. இதன்மூலம் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 5 ஆயிரம் கால்நடைகளுக்குத் தீவனமும் கிடைக்கிறது. இன்றைக்கு நிலத்தில் வைக்கோலை எரிப்பது முற்றிலும் நின்று விட்டது'' என்றார்.
நேரடியாக களமிறங்கியும், யூ-டியூப் சேனல் தொடங்கியும் விவசாயிகளுக்கு அதன் பாதிப்புகளை எடுத்து கூறி வருகிறோம். கூடவே, தோட்டங்களிலும், விளைநிலங்களிலும் பயிர்க்கழிவுகளை எரிக்காத விவசாயிகளின் வெற்றிக் கதைகளை யூடியூப் சேனலில் பகிர்ந்தோம்.