< Back
சிறப்புக் கட்டுரைகள்
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு:  இந்தியாவின் மிகப் பெரிய ஏரி
சிறப்புக் கட்டுரைகள்

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு: இந்தியாவின் மிகப் பெரிய ஏரி

தினத்தந்தி
|
31 Jan 2023 2:41 PM IST

சோழ மன்னர்களின் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகத் திகழ்பவை, காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட ‘கல்லணை’, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள ‘வீரநாராயணப் பேரேரி’ போன்றவை ஆகும்.

"உண்டி கொடித்தோ ருயிர்கொடுத் தோரே

உண்டி முதற்றே யுணவின் பிண்டம்

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

நீரு நிலனும் புணரி யோரின்

டுடம்பு முயிரும் படைத்திசி னோரே"

என்று பாடினார், குடபுலவியனார். (புறநானூறு-18)

அதாவது, "உணவைக் கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தவர்கள் ஆவார்கள். உணவென்று சொல்லப்படுவது, நிலத்தோடு கூடிய நீர். அந்த நீரையும் நிலத்தையும் ஒரு வழிக் கூட்டி, நீர் நிலைகளைக் குறைவின்றி அமைத்தவர்களே உடம்பையும் உயிரையும் படைத்தவராவார்" என்று நீர் நிலைகளின் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார், புலவர்.

அவரது கூற்றை நிஜத்தில் நிறைவேற்றிக் காட்டியவர்கள், நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்த சோழ மன்னர்களே என்பது வரலாறு.

சோழ மன்னர்களின் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகத் திகழ்பவை, காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட 'கல்லணை', கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள 'வீரநாராயணப் பேரேரி' போன்றவை ஆகும்.

சோழ மன்னர் ராஜேந்திரன், தஞ்சைக்குப் பதிலாக அரியலூர் மாவட்டத்தில் புதிய தலைநகரை உருவாக்கியபோது, அந்த நகரின் தேவை தவிர, தமிழகம் முழுவதும் பாசன வசதி பெற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன் 16 கல் நீளம், 3 கல் அகலம் கொண்ட பிரமாண்டமான ஏரியைக் கட்டினார். நம் நாட்டில், மனிதரால் கட்டப்பட்ட ஏரிகளுள் இதுவே மிகப் பெரிய ஏரி என்று வரலாற்று ஆய்வாளர் இரா.நாகசாமி குறிப்பிட்டு இருக்கிறார்.

வீராணம் ஏரியைவிட அளவில் மிகப்பெரிய இந்த ஏரியின் மொத்தப் பரப்பளவு 824 ஏக்கர். நீர்ப்பிடிப்புப் பகுதி, 2811 சதுர கிலோ மீட்டர். ஏரியின் நீர்த்தேக்க உயரம் 17 அடி. கொள்ளளவு 114.46 மில்லியன் கன அடி.

இந்த ஏரித் தண்ணீர் மூலம், கங்கைகொண்ட சோழபுரம், பிச்சானூர், குருவாலப்பர்கோவில், இளையபெருமாள்நல்லூர், உட்கோட்டை, ஆயுதக்களம், ஆமணக்கான்தொண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெற்றன.தலைநகரில் வசித்த மக்களுக்கும், படை வீரர்களுக்கும் இந்த ஏரித் தண்ணீரே பயன்படுத்தப்பட்டது. கங்கை படையெடுப்பு வெற்றியைத் தொடர்ந்து, அங்கு இருந்து எடுத்து வரப்பட்ட புனித கங்கை நீரை இந்த ஏரியில் ஊற்றி, நீர் மயமான வெற்றித் தூணை (ஜலமயமான ஜெயத்தம்பம்) நிறுவி, அந்த ஏரிக்கு `கங்காசோழம்' எனப் பெயரிட்டார், மன்னர் ராஜேந்திர சோழன்.

வானம் பார்த்த பூமியான, வறண்ட பகுதியில் அமைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, தென்புறத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து 60 கல் தொலைவு வாய்க்கால் மூலமும், வடபுறத்தில் வடவெள்ளாறு ஆற்றில் இருந்து மற்றொரு கால்வாய் மூலமும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

அரியலூர் அருகே, கல்லணையில் இருந்து 5 கல் கிழக்கே, கொள்ளிடத்தின் வடகரையில் ஒரு கால்வாய் தோண்டப்பட்டு, அங்கு இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர்தான் ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது.

அதே சமயம், கொள்ளிடம் ஆற்றின் நீர் ஆதாரம் குறைந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கொல்லிமலை, துறையூர் பகுதிகளில் உற்பத்தியாகும் பல சிற்றாறுகளை ஒன்றிணைத்து, கங்கைகொண்ட சோழப் பேராறாக கொள்ளிடத்தில் கலக்கும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.

இந்த ஏரியின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஏரி நிரம்பியதும், அதில் இருந்து வெளியேறும் நீர், தென்மேற்காக ஓடும் கருடுவாறு வழியாக வடவெள்ளாற்றுடன் இணைந்து, வீராணம் ஏரிக்குச் சென்றுவிடும் என்பதோடு, வீராணம் ஏரியில் இருந்து, அடுத்தடுத்து ஒவ்வொரு ஏரி, குளமாகச் சென்று அவற்றையும் நிரப்பும் வகையில் கட்டமைக்கப்பட்டு இருந்தது என்பதுதான்.

ஏரியின் மிகு நீர், வடபுறத்தில் இருந்து பாண்டியன் ஏரிக்குச் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவை போன்ற அமைப்புகளால், தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பது தடுக்கப்பட்டது. அந்த ஏரியில் இருந்து புதிய தலைநகருக்கும், அங்கே கட்டப்பட்ட அரண்மனைகள், மக்களின் வாழ்விடங்கள், படை வீரர்களின் முகாம்கள் ஆகியவற்றுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்லும் வகையில் மதகுகள், கால்வாய்கள் கட்டப்பட்டன.

மதகுகள், கால்வாய்கள் ஆகியவற்றின் கட்டுமானத்தில், மன்னர் ராஜேந்திர சோழன் தனது தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தினார். ஏரிக்கு வரும் தண்ணீரின் வேகம், எதிர்கொள்ளும் ஏரியின் தன்மை, வெளியேறும் தண்ணீரின் அளவு ஆகியவற்றை அறிந்து செயல்படுவதில் சோழர்கள் நிபுணத்துவம் பெற்று இருந்தனர்.

ஏரியின் நெடுகிலும் பல இடங்களில் மதகுகள் அமைக்கப்பட்டன. அந்த மதகின் துவாரம் வழியாகக் கால்வாய்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும்போது, அதன் வேகத்தால் மதகு சேதம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக, தண்ணீர் வெளியேறும் வழியில், இரண்டு பக்கமும் அரை வட்ட வடிவச் சுவர் கட்டப்பட்டது.

பிறைச்சந்திரன் போன்ற இந்தக் கட்டுமானம் வழியாகத் தண்ணீர் வரும்போது வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. அவ்வாறு குறைந்த வேகத்துடன் வரும் தண்ணீர், ஒரு பெரிய தொட்டியில் விழுந்து செல்வதற்காக அங்கே கருங்கல் தளத்துடன் கூடிய ஒரு தொட்டி கட்டப்பட்டது. ஏரியில் இருந்து மண்ணோடு வரும் தண்ணீர், அந்தத் தொட்டி வழியாகச் சென்றபோது, தண்ணீருடன் கலந்து வரும் மண், அந்தத் தொட்டியில் தேங்கிவிடும் வகையில் அந்தத் தொட்டி வடிவமைக்கப்பட்டது. இதனால் வயல்களைப் பாதிக்கும் மண், தடுத்து நிறுத்தப்பட்டது. ஏரித் தண்ணீர், கால்வாய்கள் மூலம் சீராகவும், வடிகட்டப்பட்ட நிலையிலும் செல்லும் இந்த அபாரமான தொழில்நுட்பத்தை ராஜேந்திர சோழன் அறிமுகப்படுத்தினார்.

நகருக்குச் செல்லும் கால்வாய்களின் அடியில் கருங்கல் பதிக்கப்பட்டது. கால்வாயின் பக்கத்துச் சுவர், தண்ணீரை உறிஞ்சி வீணடித்துவிடக் கூடாது என்பதற்காக கால்வாயின் சுவர்களைச் செங்கல் கட்டுமானத்தில் அமைக்க ராஜேந்திர சோழன் ஆணையிட்டார். கால்வாய்களுக்குக் கருங்கல்லால் மூடிகளும் போடப்பட்டன.

இந்தக் கால்வாய்கள் மூலமாகத் தண்ணீர், நகரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் கட்டப்பட்ட அகழிகளுக்கும், புதிய கோவிலின் அகழிக்கும், மக்களின் வாழ்விடங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட கால்வாய்களை அடையாளம் காண்பதற்கு வசதியாக, அவற்றுக்கு 'அதிகைநாயன் கால்வாய்', 'சந்தன கால்வாய்' என்று பெயர்கள் சூட்டப்பட்டன.

கால்வாய்கள் வழியாகப் பல்வேறு இடங்களுக்குச் சென்றபின் எஞ்சிய தண்ணீர், வடவெள்ளாறு ஆற்றில் கொண்டு சேர்க்கப்பட்டு, அங்கு இருந்து வீராணம் ஏரிக்கும், இறுதியாகக் கடலுக்கும் போய்ச் சேரும் வகையில் நீர் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஏரி தவிர, விசலூர் ஏரி, கிரங்குடி ஏரி, நங்கைக் குளம், பாப்பாக் குளம், மடா குளம், தீத்த குளம், அதிகைநாயக்கன் வாய்க்கால் போன்ற நீர் நிலைகளும், தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்தன.

'த இண்டியன் ஆண்டிகுவாரி' என்ற நூலில் எம்.ஜே.வால்ஹவுஸ் என்ற ஆங்கிலேயர் எழுதிய குறிப்பில், 'ஒரு காலத்தில் இந்த ஏரி, இந்தியாவின் மிகப்பெரிய ஏரியாக இருந்திருக்கும். படையெடுப்பால், வேண்டுமென்றே திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஏரி, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல், இப்போது காடுகள் மண்டிக் கிடக்கிறது. ஏரியை புனரமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கான என்ஜினீயரிங் அதிகாரிகள் இல்லாத காரணத்தால் ஏரி, சீர் செய்யப்படவில்லை' என்று தெரிவித்து இருக்கிறார்.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது, ஜெயங்கொண்டம் செல்லும் நெடுஞ்சாலை, இந்த ஏரியை ஊடறுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டதால், அந்த ஏரி இரண்டு பாகமாக ஆகிப்போனது. மன்னர் ராஜேந்திரன் காலத்தில் கட்டப்பட்ட மதகுகள் வலுவானதாக இருப்பதால், இன்னும்கூட அவை இடிபாடுகளுடன் காட்சி அளிக்கின்றன.

சோழகங்கம் என்ற பெயரைப் பெற்று இருந்த ஏரி, 1397-ம் ஆண்டு நாயக்க மன்னர் வீரவிருப்பண்ண உடையார் என்பவர் காலத்தில் 'பொன்னி வளர்கள் ஏரி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தப் பெயர் அப்படியே சுருங்கி, இப்போது 'பொன்னேரி' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏரியைத் தூர்வாரினால், தமிழகத்தின் பல பகுதிகள் பாசன வசதி பெறும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

1957-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது இந்த ஏரியை தூர்வார முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்தப் பணிகள் முற்றுப் பெறாததால், இன்றளவும் பொன்னேரி என்ற சோழகங்கம் ஏரி, பரிதாபமான நிலையிலேயே காட்சி அளிக்கிறது. இதேபோல, மன்னர் ராஜேந்திரன் மிக ஆர்வத்துடன் கட்டிய கங்கைகொண்ட சோழீச்சரம் கோவிலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அழியும் நிலையில் இருந்தது. அந்தக் கோவிலை தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்ததாலும், பாரம்பரியச் சின்னம் என்று ஐ.நா.சபை அங்கீகாரம் அளித்ததாலும், அந்தக் கோவில் புத்துயிர் பெற்றுள்ளது.

தினமும் ஏராளமானவர்கள் வந்து அந்தக் கோவிலை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கிறார்கள். அவர்கள் வியப்புடன் பார்க்கும் கங்கைகொண்ட சோழீச்சரம் கோவிலில் அடங்கியுள்ள அதிசயங்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

(வரலாறு வளரும்)

மேலும் செய்திகள்