< Back
சிறப்புக் கட்டுரைகள்
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு -  பொறியாளர் பார்வையில்...
சிறப்புக் கட்டுரைகள்

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - பொறியாளர் பார்வையில்...

தினத்தந்தி
|
12 Feb 2023 8:55 PM IST

கங்கைகொண்ட சோழீச்சரக் கோவிலின் புகழும் பெருமையும் தலைமுறை, தலைமுறையாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழர்கள், குறிப்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆர்வலர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்.

கங்கைகொண்ட சோழீச்சரம் கோவிலின் விமானத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போதே, அது மிகப் பிரமிப்பாகக் காட்சி அளிக்கும். கோவிலைச் சுற்றி வந்து ஒவ்வொரு பகுதியாகக் கூர்ந்து நோக்கினால் வியப்புகள் மேலும் விரிவடையும்.

சுற்றுவட்டாரப் பகுதியில் மலைகளே இல்லாத நிலையில், இந்தக் கோவில் கட்டுமானங்களுக்குத் தேவையான ஒரு லட்சத்து பதினொன்றாயிரம் டன் எடையுள்ள கருங்கற்களை எங்கே இருந்து, எப்படிக் கொண்டு வந்தார்கள் என்பது உள்ளிட்ட ஆச்சரியங்களும், இக்கோவிலின் கட்டுமான தொழில்நுட்பமும், நவீன காலத்திய பொறியாளர்களையே திகைக்க வைத்துவிடுகின்றன.

இப்படிப்பட்ட கங்கைகொண்ட சோழீச்சரக் கோவிலின் புகழும் பெருமையும் தலைமுறை, தலைமுறையாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழர்கள், குறிப்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆர்வலர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்.

இதற்காக, "கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழு" என்ற பெயரில் ஒரு குழு, அதே ஊரில் இயங்கி வருகிறது. இந்தக் குழுவின் தலைவராக இருப்பவர், தமிழக அரசு பொதுப்பணித் துறையில் என்ஜினீயராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இரா. கோமகன்.

கங்கைகொண்ட சோழீச்சரம் கோவிலுக்கு யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததில் முக்கியப் பங்காற்றிய பொறியாளர் இரா.கோமகன், இக்கோவிலின் கட்டுமான தொழில் நுட்பம் குறித்து கூறியதாவது:-

இப்போதைய பொறியாளர்களுக்கே சவால்விடும் வகையில் கங்கைகொண்ட சோழீச்சரம் கோவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.

இக்கோவிலின் கட்டுமானம், வடிவியலில் (ஜியோமெட்ரிக்) குறிப்பிடக்கூடிய வடிவங்களை உள்ளடக்கியது.

செவ்வக வடிவ உள்ளடக்கத்தில், சதுர வடிவமான கர்ப்பகிரகத்தின் மேல், நாற்கரக் கூம்பினுள், எண்பக்க எண்கோணத்தையும் ஒன்றோடு ஒன்று பொருத்தி, அரைக்கோளத்தை அடிப் படையாகக் கொண்டு, விமான உயரத்தை அமைத்துள்ளனர். கட்டுமானவியலில் இது மிகச் சிக்கலான வடிவமைப்பு நுட்பங்களைக் கொண்டது.

இன்று உள்ளது போன்ற நவீன தொழில்நுட்பக் கருவிகள் இல்லாமல், இந்த அபூர்வமான கட்டடத்தை, எவ்வாறு கட்டி முடித்தார்கள் என்பது, மிக வியப்பானது ஆகும்.

கங்கைகொண்ட சோழீச்சரம் கோவிலின் கட்டுமானத்தில், அறிவியலுடன் ஆன்மிகம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

கோவிலின் கருவறையில் உள்ள லிங்கத்தின் உயரம் 13 அடி, 4 அங்குலம். தஞ்சைப் பெரிய கோவில் லிங்கத்தை விட 4 அங்குலம் அதிக உயரம்.

விமானத்தின் வெளிப்புறத் தோற்றத்தையும், லிங்க வடிவிலேயே அமைத்து இருக்கிறார், மன்னர் ராஜேந்திரன்.

லிங்க வடிவம், மூன்று பாகங்களைக் கொண்டது. பிரம்மாவைக் குறிக்கும் அடிப்பாகம் சதுர வடிவிலும், விஷ்ணுவைக் குறிக்கும் நடுப்பகுதி எண்கோண வடிவிலும், சிவனைக் குறிக்கும் ருத்ர பாகம் என்ற மேல்பகுதி உருளை வடிவிலும் இருக்கும்.

கங்கைகொண்ட சோழீச்சரம் கோவில் விமானத்தின் அடிப்பகுதி சதுர வடிவில் கட்டப்பட்டு இருக்கிறது. அது பிரம்ம பாகம்.

சதுர வடிவ கட்டடத்திற்கு மேலே எட்டுக் கோணங்களுடன் உள்ளது விஷ்ணுபாகம்.

எட்டுக்கோணத்திற்கு மேலே விமானத்தின் உச்சி வரையிலும் கட்டுமானம் உருளை வடிவில் ருத்ரபாகமாகச் செல்கிறது.

சற்றுத் தொலைவில் நின்றபடி விமானத்தின் வெளிப்புறத் தோற்றத்தைக் கூர்ந்து நோக்கினால், லிங்க வடிவத்தில் சிவனை தரிசிப்பதுபோன்று இருக்கும்.

அத்துடன் சொரூபம், அரூபம், நாதம் ஆகிய மூன்று நிலைகளை கோவிலின் விமான வடிவில் மன்னர் ராஜேந்திரன் அற்புதமாக அமைத்து, சிவனை உருவகப்படுத்தி இருக்கிறார்.

வெளிப்புறம் நாம் காணும் விமானத்தின் புறத்தோற்றம், நாம் நேரடியாகப் பார்க்கக் கூடிய சொரூப லிங்கம்.

விமானத்தின் உட்பகுதி, பிரம்புக் கூடையை கவிழ்த்தி வைத்ததுபோன்று உட்புறம் கூடாக இருக்கும். அங்கே லிங்க வடிவத்தில் உள்ள வெற்றிடம், அரூபமான லிங்கம்.

கண்ணுக்குப் புலப்படாத இந்த (அரூப) லிங்கத்தின் நேர் கீழே, மூலவரின் முன் ஒலிக்கப்படும் மந்திரங்களின் ஒலி, கீழிருந்து மேலெழும்பி உருளை வடிவிலான ருத்ரபாகம் வரை சென்று சுவர்களில் மோதி, மீண்டும் எதிரொலிக்கும்.

விமான உட்கூட்டில் நின்றபடி 'ஓம்' என்று ஓங்கிக்குரல் எழுப்பினால், அதனால் உருவாகும் அதிர்வு அலைகள் நீண்ட நேரம் அங்கே நிலவுவதை உணர்ந்து மெய்சிலிர்க்கலாம்.

விமானத்தின் சதுரப்பகுதி மூலை விட்டங்கள், ஒன்றோடு ஒன்று வெட்டிக் கொள்ளும் மையப்புள்ளிதான், விமானத்தின் உச்சிப் பகுதியைத் தீர்மானிக்கிறது.

இந்த உச்சி, இம்மியளவும் பிசகாமல் இந்த மையப் புள்ளியுடன் இணைவதும், அப்புள்ளி, கீழே லிங்கத்தின் மையப்புள்ளியாக - அதன் உச்சியாக அமைந்து இருப்பதும் கட்டுமான நுட்பத்தின் உச்சம்.

ஒரே மையப்புள்ளியில் இருந்து உருவாக்கப்படும் சதுரத்தின் மீது, எண்கோண வடிவ கட்டுமானத்தையும், அந்த எண்கோண வடிவத்தின் மீது வட்ட வடிவமான உருளை அமைப்பில் கட்டுமானத்தையும் கூம்பாக அமைக்கும்போது, கட்டுமானம் உள்ளே சரிந்துவிடும். அவ்வாறு நிகழாமல் இருக்க, உட்சரிவைச் சமப்படுத்த வெளிப்புறத்தில் எடையைக் கூட்ட வேண்டும். அவ்வாறு செய்வது, வடிவ அழகியலைப் பாதிக்காமலும் இருக்க வேண்டும். மிக நுட்பமான, சவாலான இந்தப் பணி இங்கே நிகழ்த்தப்பட்டுள்ளது.

விமானக் கட்டுமானத்தில் ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்படும் கற்களுக்கு இடையில் பிடிப்புச் சாந்து பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இக்கட்டுமானத்தில் வழக்கத்திற்கு மாறாக, கீழடுக்கு கற்களில் குழியும், அதன் மேலே அடுக்கப்படும் கற்களில் முண்டும் (துருத்திக்கொண்டு இருக்கும் பகுதி) அமைக்கப்பட்டு, கீழ்க் குழியில் மேல் கல்லின் முண்டு பொருந்துமாறு "தண்டு முண்டு" (இன்டர்லிங்க்) இணைப்பு முறை, விமானத்தின் முழுக் கட்டுமானத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

கங்கைகொண்ட சோழீச்சரம் கோவில் விமானத்தின் உயரம் 180 அடி. அதாவது, தஞ்சைக்கோவில் விமானத்தின் உயரத்தைவிட சற்றுக் குறைவானது.

தனது தந்தை கட்டிய கோவிலை மிஞ்சக் கூடாது என்பதற்காக மன்னர் ராஜேந்திரன், உயரம் குறைவான விமானத்தைக் கட்டி இருக்கலாம் என்று சிலர் கருதுவார்கள்.

லிங்க வடிவில் கட்டப்பட்ட விமானத்திற்குள், வழிபாடுகளின்போது ஓதப்படும் வேத மந்திரங்கள், நாத ரூப சிவனை உருவாக்கி, வடிவமற்ற லிங்கத்தினுள் மக்களுக்குப் பயனளிக்கும் குறிப்பிட்ட அதிர்வு அலைகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக, அறிவியல் பூர்வமாக விமான உயரத்தைத் தீர்மானித்து, அதற்குத் தக்கபடி ராஜேந்திரன் கட்டி இருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவல்.

கங்கைகொண்ட சோழீச்சரம் கோவிலின் நுழைவு கிழக்குப் பகுதியில், 7 அடுக்கு கொண்ட இரண்டு ராஜகோபுரங்கள் இருந்தன.

முதல் நுழைவுக் கோபுரத்தின் நிலைக்கால்களான இரண்டு தூண்கள் மட்டுமே இப்போது எஞ்சி நிற்கின்றன. ராஜகோபுரம் முழுவதும் திருச்சுற்று மாளிகையுடன் தகர்த்து அப்புறப்படுத்தப்பட்டு, கொள்ளிடம் வெள்ளாறு பாலம் கட்டுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.

தனித்து நிற்கும் இரண்டு தூண்களுக்கு அடியில் கிடைமட்டமாக, 645 செ.மீ நீளமும், 68 செ.மீ. அகலமும் கொண்ட கல் பலகை பதிக்கப்பட்டு இருக்கிறது.

அந்தக் கல் பலகையின் இடது மற்றும் வலது பக்கங்களில் 16.5 செ.மீ. நீளமும், 17 செ.மீ. அகலமும் கொண்ட செவ்வக வடிவிலான குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன. நடுவில் கோடுகளைக் கொண்ட அவை மிகச் சரியாக திசை காட்டும் அமைப்பாகக் காட்சி அளிக்கின்றன. அந்தக் குறியீட்டில் கிழக்கு-மேற்காகச் செல்லும் கோட்டை நோக்கினால், அந்தக் கோட்டுக்கு நேரே கோவிலின் பலிபீடம், கொடிமரம், நந்தி, விமானத்தின் உச்சிப் பகுதி ஆகியவை ஒரே கோட்டில் அமைந்து இருக்கும் அதிசயம் தெரியும். இது 'திருக்குறியீடு' என அழைக்கப்படுகிறது.

கல்லில் செதுக்கப்பட்ட அந்தக் குறியீடுகள், கட்டுமானத்தின் மூலம் என்பதாலும், பரமன் என்பதையும், பிரம்மத்தின் உட்பொருளையும் குறிக்கின்றன என்பதாலும், அவை 'பிரம்மதரிசனக் குறியீடுகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.

இக்கோவிலில் தற்பொழுது மிஞ்சி இருக்கும் வடிவங்களின் அளவீட்டு கணக்கின்படி, பயன்படுத்தப்பட்ட கற்களின் மொத்த எடை, ஒரு லட்சத்து பதினொன்றாயிரம் டன். விமானப் பகுதிக்கு மட்டும் அறுபத்தி எட்டாயிரம் டன் எடை கொண்ட, இருபத்தி ஐந்தாயிரம் கனமீட்டர் கற்கள் தேவைப்பட்டிருக்கிறது.

அதாவது, ஒரு சதுர மீட்டர் கட்டுமானத்திற்குள் எழுபத்து நான்கு டன் எடை கடத்தப்பட்டிருக்கிறது.

இக்கோவில் அமைக்கப்பட்டிருக்கும் பகுதியின் மண் தாங்கு திறன், முப்பது டன் எடை அளவில்தான் உள்ளது. அதில் இரு பங்கு எடையைக் கடத்தும் அளவுக்கு, ஐந்து அடிக்குக் கீழ் கருங்கற்களை அடுக்கி, பாறைபோன்று இறுகிய தளத்தை உருவாக்கி, அதன் மீது இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இதனால் இந்தக் கோவில் கட்டுமானம் எந்தக் காலத்திலும் சேதம் அடையாது.

இந்த அளவு வியப்பான கட்டுமான வடிவியல் கோட்பாடுகள், கோவிலில் ஆங்காங்கே குறியீடுகளாக அமைக்கப்பட்டுள்ளன. நடராஜர் மண்டபத்திற்கு எதிரே முன் மண்டபத்தின் கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் காலச் சக்கரமான ராசி மண்டல குறியீடுதான் இக்கோவில் அமைப்பின் மையப் புள்ளியாக விளங்குகிறது.

இவ்வாறு பொறியாளர் இரா.கோமகன் கூறினார்.

கோவில் விமானத்தின் கட்டட அமைப்பில் அபாரமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய மன்னர் ராஜேந்திரன், விமானத்தின் சுற்றுப்புறச் சுவர்களில் அமைத்த சிற்பங்களில் இன்னும் அதிகமான அதிசயங்களைப் பொதிந்து வைத்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்