< Back
சிறப்புக் கட்டுரைகள்
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - மகனுக்குத் தந்தை கொடுத்த மகத்தான விருது
சிறப்புக் கட்டுரைகள்

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - மகனுக்குத் தந்தை கொடுத்த மகத்தான விருது

தினத்தந்தி
|
18 Sept 2022 2:22 PM IST

ஆதிகாலத்தில் இருந்தே சோழ மன்னர்கள் அடிக்கடி சேர நாடு மீதும், இலங்கை மீதும் படையெடுத்துச் சென்று போர் புரிந்தார்கள் என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது.

பழங்காலத்திய கல்வெட்டுகள், செப்பேட்டுச் சாசனங்கள், இலக்கியங்கள் ஆகியவை இந்தப் போர்களின் வெற்றி - தோல்வி பற்றிய தகவல்களைக் கொடுக்கும் ஆவணங்களாகத் திகழ்கின்றன.

ஆனால், அவற்றில் அந்தப் போர்களுக்கான காரணம் என்ன என்பது அநேகமாகக் குறிப்பிடப்படாமல் விடப்பட்டு இருக்கும்.

ஆட்சியைத் தக்க வைப்பதற்காக அல்லது ஆட்சி நிலப்பரப்பை விஸ்தரிப்பதற்காக ஒரு சில சமயங்களில் போர்கள் நடைபெற்றன என்றாலும், குறிப்பாக சேர நாடு மீதும், இலங்கை மீதும் நடைபெற்ற போர்களுக்கு முக்கியக் காரணமாகத் தென்படுவது அயல்நாட்டு வர்த்தகம்தான்.

அந்தக் காலத்தில், வெளிநாட்டு வர்த்தகம் மூலமாகத் தமிழக வணிகர்களுக்கும் மன்னர்களுக்கும் கொழுத்த லாபம் கிடைத்தது.

தமிழகத்தின் மேற்குப் பகுதியில் இருந்த சேர நாட்டின் கொல்லம், முசிறி ஆகிய துறைமுகங்கள் வழியாக எகிப்து, கிரேக்கம் போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு விலைமதிப்பு மிக்க ஏராளமான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

மிளகு, சீரகம், கடுகு, பெருங்காயம், உப்பு, மஞ்சள், சுக்கு, ஆமணக்குக் கொட்டை, பாக்கு, கருப்பட்டி, பனை வெல்லம், புளி, எள், பருப்பு, அவரை, துவரை, சந்தனம், அகில், கற்பூரம், புனுகு, பன்னீர், ஜவ்வாது, மெழுகு, சிப்பி, முத்து, நூல் புடவை, பட்டு நூல், பருத்தி, இரும்பு, செம்பு, பொன், வெள்ளி ஆகிய பல பொருள்கள் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்தப் பொருள்களுக்கு மாற்றாக அந்த நாடுகளில் இருந்து தங்கக் கட்டிகள் தமிழ்நாட்டிற்கு வந்து குவிந்தன. அரேபிய நாடுகளில் இருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களான கடலூர், மாமல்லபுரம், நாகப்பட்டினம் போன்ற இடங்களில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு முக்கியமான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்தத் துறைமுகங்களில் இருந்து புறப்படும் கப்பல்கள், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரமாகப் பயணித்து முதலில் இலங்கையை அடையும். பின்னர் அங்கு இருந்து நேர் கிழக்காகச் சென்று மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, கம்போடியா, வியட்நாம், சீனா ஆகிய நாடுகளைச் சென்றடையும்.

கிரேக்கத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது பானங்கள், அரேபிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட குதிரைகள், தமிழகத் துறைமுகங்கள் வழியாகவே தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கீழ்த்திசை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கற்பூரம், பெருங்காயம், அகில் போன்றவை தமிழகத்தின் மேற்குப் பகுதி துறைமுகங்களில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இவ்வாறு மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரை வழியாக நடைபெற்ற வணிகக் கப்பல் போக்குவரத்து காரணமாக சேர நாட்டின் துறைமுகங்களும், இலங்கையில் உள்ள துறைமுகங்களும் மிக முக்கியத்துவம் பெற்று இருந்தன.

சேர நாட்டையும், இலங்கையையும் கைப்பற்றுவதன் மூலம், அங்குள்ள அனைத்துத் துறைமுகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கிழக்கு மற்றும் மேற்கத்திய நாட்டு வர்த்தகத்தில் ஏகபோக உரிமை கொண்டாட வேண்டும் என்று சோழ மன்னர்கள் விரும்பினார்கள்.

இதன் காரணமாகவே, சேர நாட்டையும், இலங்கையையும் தங்கள் குடையின் கீழ்க் கொண்டு வருவதில் சோழ மன்னர்கள் அதிக அக்கறை காட்டினார்கள்.

மன்னர் ராஜராஜன் காலத்திலும் இந்த நோக்கம் காரணமாகவே சேர நாடு மீதும் இலங்கை மீதும் அடிக்கடி போர்கள் நடைபெற்றன.

இப்போது ஒடிசா என்று அழைக்கப்படும் கலிங்கம் வரை சோழர்கள் படையெடுத்துச் சென்றதற்குக் காரணம், தமிழகத்தின் வடக்கே உள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்பதுதான்.

இதற்காக நடைபெற்ற போர்கள் அனைத்திலும் ராஜராஜனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தவர், அவரது மகன் ராஜேந்திரன்தான்.

கி.பி.988-ம் ஆண்டு, சேர நாட்டையும் இலங்கையையும் ஒருசேரத் தாக்கிய மன்னர் ராஜராஜன், அதன் பிறகு வணிக நோக்கத்திற்காக சேர நாட்டின் மீது மீண்டும் படையெடுத்துச் சென்றார்.

இந்தப் படையெடுப்பில் கொல்லம் மற்றும் திருச்சூர் மாவட்டம் மலபார் கடற்கரையில் பெரியாற்றின் கரையில் உள்ள கொடுங்களூர் ஆகிய துறைமுகங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தப் போர்களில் கிடைத்த வெற்றிகளை அடுத்து, கோதாவரிக்கும், கிருஷ்ணா நதிக்கும் இடையே உள்ள கூர்க் என்று அழைக்கப்படும் குடமலை நாடு மீது ராஜராஜன் போர் தொடுத்து, அந்தப் பகுதியையும் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தார்.

குடகு நாடு சங்க காலத்தில், 'பொன்படு நெடுவரை' என்று அழைக்கப்பட்டதாக ஆவூர் மூலங்கிழாரின் புறநானூற்றுப் பாடல் மூலம் தெரிகிறது. அதாவது அந்த நாடு, பொன் போன்ற தோற்றம் உடையதாம். பொன் போன்ற அந்தப் பகுதியில் மழை பெய்து காவிரியில் வெள்ளம் வருவதன் காரணமாக, காவிரிக்குப் 'பொன்னி ஆறு' என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுவதும் உண்டு.

குடகு வெற்றிக்குப் பிறகு, மன்னர் ராஜராஜன் படைகள், தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள கங்கபாடி, தடிகைபாடி, நுளம்பபாடி ஆகிய நாடுகளைக் கைப்பற்றின.

தற்காலத்திய ராயலசீமா என்ற பகுதி, முன்காலத்தில் வேங்கி நாடு என அழைக்கப்பட்டது. 9-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் அந்த நாட்டில் ஏற்பட்ட வாரிசுப் போட்டியில் மன்னர் தாணார்வனன் என்பவர் கொல்லப்பட்டார்.

அவரது மகன்களான சக்திவர்மனும், விமலாதித்தனும் அங்கு இருந்து உயிர் தப்பி, சோழ மன்னர் ராஜராஜனிடம் தஞ்சம் புகுந்தனர்.

சக்திவர்மனுக்கு அவரது வேங்கி நாட்டை மீட்டுத் தரும் வகையில், அந்த நாடு மீது கி.பி.999-ம் ஆண்டு ராஜராஜன் போர் தொடுத்தார். இந்தப் போரில் வேங்கியைக் கைப்பற்றிய மன்னர் ராஜராஜன், அங்கு சக்திவர்மனை ஆட்சியில் அமர்த்தினார்.

அப்போது கீழைச்சாளுக்கியர்களுடன் தொடர்ந்து உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மன்னர் ராஜராஜன், தனது மகள் குந்தவையை சக்திவர்மனின் தம்பி விமலாதித்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

(பிற்காலத்தில் விமலாதித்தனுக்கும், குந்தவைக்கும் பிறந்த மகனுக்கு தனது மகளை ராஜேந்திரன் திருமணம் செய்து கொடுத்தார். அந்தத் தம்பதிக்குப் பிறந்தவர்தான் சோழர்களின் மற்றொரு புகழ் மிக்க மன்னரான முதலாம் குலோத்துங்க சோழர் என்பது குறிப்பிடத்தக்கது).

கோதாவரி ஆற்றுக்கும், மகாநதிக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியான கலிங்கம், கீழைச்சாளுக்கிய நாட்டின் வேங்கிக்கு வடக்கே உள்ளது. அந்த நாட்டை குலூதன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர், வேங்கி நாட்டு மன்னர் விமலாதித்தனுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால், விமலாதித்தனுக்கு உதவ, ராஜேந்திரன் தலைமையில் பெரிய படை கலிங்கத்தை நோக்கிச் சென்றது. விமலாதித்தன் படைகளும் இதில் சேர்ந்து கொண்டன.

குலூதனை வென்ற ராஜேந்திரன், கலிங்கத்தைச் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தார்.

ஏற்கனவே கங்க நாட்டை வென்ற ராஜேந்திரன், இப்போது வேங்கியையும் வென்றதால், இந்த வெற்றிகளைப் போற்றும் வகையில், அவர் வேங்கி, கங்கம் ஆகிய நாடுகளின் மாதண்டநாயகனாக (ஆட்சியின் காப்பாளராக) அறிவிக்கப்பட்டார்.

அத்துடன், "பஞ்சவன் மாராயன்" என்ற சிறப்புப் பட்டத்தையும் தனது மகன் ராஜேந்திரனுக்கு மன்னர் ராஜராஜன் வழங்கி பெருமைப்படுத்தினார்.

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணத்து வட்டம் பாலமூரி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் மன்னர் ராஜராஜனின் புகழைக் கூறும் வாசகங்களுடன், ராஜேந்திரன் பெற்ற வெற்றிகளும் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.

அந்தக் கல்வெட்டில், "வேங்கி மண்டலம், கங்க மண்டலம் ஆகியவற்றின் மாதண்டநாயகனாக இருந்த பஞ்சவன் மாராயன் துளுவம், மலயம் ஆகியவற்றை வென்றதோடு சேர மன்னரையும் வென்றார். தெலுகம், இரட்டிங்கம், பல்வால தேசம் ஆகியவற்றையும் தன் ஆற்றலால் வெற்றி கண்ட இவன் (ராஜேந்திரன்), மும்முடிச் சோழன் (ராஜராஜன்) பெற்றெடுத்த களிறு" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மன்னர் ராஜராஜன் மிகச் சிறந்த கடற்படையை வைத்து இருந்தார். அந்தப் படையை நிர்வகித்ததிலும் ராஜேந்திரனுக்கு முக்கியப் பங்கு இருந்தது.

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாகக், கடலில் வெகு தூரம் பயணித்து, நடுக்கடலில் உள்ள மாலத்தீவில் போர் நடத்தி, வெற்றிவாகை சூடிய மன்னர் என்ற பெருமையை ராஜராஜனுக்குத் தேடித்தந்த கடல் போர் வித்தியாசமானது.

அந்தப் போர், ராஜேந்திரன் பிற்காலத்தில் கீழ்த் திசை நாடுகளை வெல்ல நல்ல அஸ்திவாரமாக அமைந்தது.

(வரலாறு வளரும்)

வியப்பான வினோதம்...

சோழ மன்னர்கள் பரம்பரையிலேயே, அரும்பெரும் சாதனைகளைச் செய்தவர்கள் என்று கொண்டாடப்படுபவர்கள் மன்னர் ராஜராஜனும் அவரது மகன் ராஜேந்திரனும் ஆவார்கள்.

அவர்கள் காலத்தில், படைத் தளபதிகளும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும், மக்களும் அந்த மன்னர்களைப் போற்றி வணங்கினார்கள். அவர்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அவர்களின் உருவங்களைச் செப்புச் சிலைகளாகவும் செய்து வைத்தார்கள்.

ஆனால், இந்த மன்னர்கள் எப்போது, எவ்வாறு மரணம் அடைந்தார்கள் என்ற நினைவுக் குறிப்புகள், எங்குமே யாராலும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த மன்னர்கள் எரியூட்டப்பட்ட இடம், அல்லது புதைக்கப்பட்ட இடம் எது என்ற தகவல்கூட செப்பேடுகளிலோ, கல்வெட்டுகளிலோ காணப்படவில்லை.

மன்னர் ராஜேந்திரன் உடல் எரியூட்டப்பட்டபோது, அவரது மனைவிகளில் ஒருவரான வீரமாதேவி உடன்கட்டை ஏறினார் என்ற ஒற்றை வரிச் செய்தி மட்டுமே கிடைத்து இருக்கிறது.

காலாகாலத்திற்கும் ராஜராஜன், ராஜேந்திரன் ஆகியோரின் நினைவு இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் மறைந்த இடத்தில் அல்லது சமாதி மீது அந்தக் காலத்தில் எவருமே நினைவாலயம் எழுப்பாதது ஏன் என்பது வினோதம்தான்.

மேலும் செய்திகள்