கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - முன்னீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்
|பிரமாண்டமான ஒரு செயலை அப்பழுக்கு எதுவும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்றால், அதேபோன்ற ஒரு செயலைச் செய்து காட்டக் கூடிய முன் அனுபவம் இருப்பது மிக அவசியம்.
அப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பு மன்னர் ராஜேந்திரனுக்கு அவரது தந்தை மூலமாக உருவானது.
1025-ம் ஆண்டு மன்னர் ராஜேந்திரன், அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி, 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீவிஜயம் (இந்தோனேஷியா) நாட்டுக்குச் சென்று, அங்கே போர் நடத்தி அந்த நாட்டு மன்னரைக் கைது செய்த அசாத்தியச் செயலுக்கு முன்னோட்டமாக அமைந்தது, முன்னீர்ப்பழந்தீவு போர் ஆகும்.
மன்னர் ராஜராஜன் அவரது வாழ்நாளில் கடைசியாக நடத்திய முன்னீர்ப்பழந்தீவுப் போரில், ராஜேந்திரன் தளபதியாகக் கலந்து கொண்டு சோழப் படைக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தார்.
அந்தப் போரில் கிடைத்த அனுபவம்தான், சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஸ்ரீவிஜயம் நாடு மீது போர் செய்து வெற்றி பெற்றதற்கு அடித்தளமாக அமைந்தது.
முன்னீர்ப்பழந்தீவில் நடைபெற்ற போர் குறித்து, வரலாற்றுப் பக்கங்களில் விளக்கமான தகவல்கள் பதிவாகவில்லை. ஆனாலும் அந்தப் போர், ராஜேந்திரனின் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துவிட்டதால் முக்கியத்துவம் பெறுகிறது.
அந்தத் தீவு, சோழர்கள் காலத்தில் "முன்னீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்" என்ற பெயரில் அழைக்கப்பட்டது. 12 ஆயிரம் என்பது அங்குள்ள தீவுகளின் எண்ணிக்கை அல்ல.
அந்தத் தீவின் மன்னராக இருந்தவர், தன்னை 'பன்னீராயிரம் தீவுகளுக்கு அரசன்' என்று சொல்லிக் கொண்டதால், 'முன்னீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' என்ற பெயர் ஏற்பட்டது.
அந்தத் தீவுக் கூட்டங்களின் அமைப்பு, மாலை போன்ற தோற்றத்தைக் கொடுத்ததால், பின்னர் அந்தத் தீவு 'மாலைத் தீவு' என்ற பெயரைப் பெற்று இப்போது ஆங்கிலத்தில் 'மால்டீவ்ஸ்' எனக் குறிப்பிடப்படுகிறது.
நடுக்கடலில் உள்ள அந்தத் தீவுகளுக்கு, அந்தக்காலத்தில் கப்பல்கள் மூலமாக மட்டுமே செல்ல முடியும்.
தமிழர்கள், மிகப் பழங்காலத்திலேயே கப்பல் கட்டும் கலையிலும், கடல் பயணத்திலும் தேர்ந்தவர்களாக இருந்தனர்.
'நூற்றுவர் கன்னர்' என்று அழைக்கப்பட்ட சாதவாகனர்கள் (கி.பி.166-193) ஆட்சிக் காலத்திலேயே கப்பல்களின் பயன்பாடு அதிகம் இருந்தது.
சாதவாகனர்கள், கப்பல் உருவத்துடன் வெளியிட்ட நாணயங்கள் இதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
அவர்களுக்குப் பிறகு பல்லவர்கள் காலத்திலும் கப்பல்கள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக மன்னர் ராஜராஜன் காலத்தில், மிகப்பெரிய கப்பல்படை உருவாக்கப்பட்டது. கப்பல்கள் மூலம் அயல் தேசங்களுக்குப் பயணிக்கும் வணிகர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காகவே முதலில் கப்பல் படை ஏற்படுத்தப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுப் பொருள்களுக்கு கீழ்த்திசை நாடுகளிலும், மேற்கத்திய நாடுகளிலும் நல்ல கிராக்கி இருந்தது.
நானாதேசி திசைஐயாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், ஆயாவோலை, அஞ்சுவண்ணத்தார், வளஞ்சியர் என்பது போன்ற பல பெயர்களில் இயங்கிய வணிகர்கள், மேற்கே அரேபியா, பாரசீகம், எகிப்து, கிரேக்கம் ஆகிய நாடுகளுடனும், கிழக்கே ஸ்ரீவிஜயம் (இந்தோனேஷியா), கடாரம் (மலேசியா), மியான்மர் (பர்மா), சீனா, கம்போடியா ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்து இருந்தனர்.
அந்தக் காலத்தில் இந்தியாவில் குதிரைகள் வளர்ப்பு இல்லை. வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் அதிவேகப் பயணத்திற்குக் குதிரைகளே முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டன. அனைத்து மன்னர்களும் குதிரைப் படையை வைத்து இருந்தனர்.
இவற்றுக்கான குதிரைகள் அரேபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டன. தமிழகத்தின் மேற்குப் பகுதி துறைமுகங்களில் வந்து இறங்கும் குதிரைகள், கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுகங்கள் வழியாகக் கீழ்த்திசை நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
இப்படிப்பட்ட ஏற்றுமதி, இறக்குமதி காரணமாக முசிறி, தொண்டி, காயல்பட்டினம், நாகப்பட்டினம், மாமல்லபுரம், மயிலாப்பூர், வீரசோழப்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் பரபரப்பான வணிகச் சந்தைகளாக இயங்கின.
இந்தத் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கும், இறக்குமதியான சரக்குகளுக்கும் சுங்க வரி வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் குவிந்த நிதி, அரசின் கஜானாவை நிரப்புவதில் பெரும் பங்கு வகித்தது.
அந்தக் காலத்தில் கடல் பயணம் அரிதானதாகக் கருதப்பட்டது. இதனால் ஒவ்வொரு முறை கடல் பயணத்தின்போதும் வணிகர்கள் விலை மதிக்க முடியாத பொருள்களைத் தங்களால் முடிந்த அளவு கப்பலில் கொண்டு செல்வார்கள்.
அவ்வாறு கொண்டு செல்லப்படும் பொருள்களைக் கொள்ளையடிக்க கடற்கொள்ளையர்கள் உருவானார்கள். அரபிக் கடல், வங்கக்கடல் ஆகிய இரண்டு கடல் பகுதிகளிலும் கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் இருந்தது.
இவர்களிடம் இருந்து தங்களையும், தங்கள் பொருள்களையும் காப்பாற்றிக்கொள்ள, ஆரம்ப காலங்களில் வணிகர்கள் தங்களுடன் ஆயுதம் தாங்கிய வீரர்களை அழைத்துச் சென்றார்கள்.
கடற்கொள்ளைகள் அதிகமானதால், கடலில் செல்லும் வணிகர்களைப் பாதுகாக்கும் வகையில் தனியாகக் கடற்படையை அரசாங்கமே உருவாக்கியது. அப்படி ராஜராஜன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கடற்படை, கடல் பயணம் மேற்கொண்ட வணிகர்களுக்குப் பாதுகாப்பு அளித்ததோடு, பல போர்களிலும் முக்கியப் பங்கு வகித்தது.
மன்னர் ராஜராஜன், அவரது ஆட்சிக்காலத்தில் மூன்று முறை கடற்படையைப் பயன்படுத்தி போர்களை நடத்தியதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
முதலாவது கடற்போர், கி.பி.988-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது மன்னர் ராஜராஜன் சேர நாடு மீது தொடுத்த போர், காந்தளூர்ச்சாலைப் போர் என வர்ணிக்கப்படுகிறது.
அந்தப் போரின்போது ராணுவத்தின் ஒரு பகுதியான தரைப்படை, தஞ்சையில் இருந்து பாண்டியநாடு வழியாகத் தரை மார்க்கமாகச் சென்று, சேர நாட்டில் உள்ள காந்தளூர்ச்சாலையை அடைந்தது.
ராணுவத்தின் மற்றொரு பிரிவான கடற்படை வீரர்கள், கப்பல்கள் மூலம், கிழக்குக் கடற்கரை வழியாகக் கன்னியாகுமரியைச் சுற்றியபடிப் பயணித்து காந்தளூர்ச்சாலைக்குச் சென்று போரில் கலந்து கொண்டார்கள். அந்தப் போரில் காந்தளுர்ச்சாலை சூறையாடப்பட்டது.
அதன் பிறகு, இரண்டாவது கடற்போர் கி.பி.1001-ம் ஆண்டு ஈழத்தைக் கைப்பற்றும்போது நடைபெற்றது. இந்தப் போரில் ராஜராஜனின் கடற்படை முழுமையாகப் பங்கு வகித்தது. ஏராளமான கப்பல்களில் போர் வீரர்கள் கடல் கடந்து இலங்கைக்குச் சென்று வெற்றியைத் தேடித் தந்தனர்.
மூன்றாம் முறையாக நடந்த கடற்போர், சரித்திரத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்தது. காரணம், இந்திய வரலாற்றிலேயே மிக அதிக தூரம் கடலில் பயணித்து நடத்தப்பட்ட முதல் போர் இதுவே ஆகும்.
சேர நாட்டிற்குத் தென் மேற்கே நடுக்கடலில், 1,000 கிலோ மீட்டர் தொலைவில் முன்னீர்ப்பழந்தீவு 12 ஆயிரம் (மாலத்தீவு) என்ற தீவுக் கூட்டங்கள் இருக்கின்றன.
தமிழகத்தின் மேற்குக் கடற்கரை துறைமுகங்களில் இருந்து அரேபியா, எகிப்து, பாரசீகம், கிரேக்கம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் வணிகக் கப்பல்கள், இந்தத் தீவுகள் வழியாகச் செல்லும்.
அந்தப் பகுதியில் கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகம் இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட வணிகர்கள், இது பற்றி மன்னர் ராஜராஜனிடம் முறையிட்டார்கள்.
கடற்கொள்ளையர்களை ஒழிக்கும் நோக்கம் காரணமாகவும், மேற்கத்திய நாடுகளுடனான வணிகத்திற்கு முக்கியக் கேந்திரமாக இருக்கும் அந்தத் தீவுகளைத் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டு வருவது லாபகரமாக இருக்கும் என்பதாலும் ராஜராஜன் தனது கடற்படையை அங்கே அனுப்பி வைத்தார்.
தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள மாலத்தீவை நோக்கி சோழர்களின் கப்பல் படைகள் அணிவகுத்துச் சென்றன. இந்தப் படையெடுப்பிலும் இளவரசர் ராஜேந்திரன் தளபதியாகக் கலந்து கொண்டார்.
முன்னீர்ப்பழந்தீவுக் கூட்டங்கள், தஞ்சையில் இருந்து 1000 கிலோ மீட்டர் தூரத்தில் அரபிக் கடலின் நடுவே இருப்பதால், அந்த அளவு தொலைவுக்குக் கப்பல்களில் பயணித்துப் போர் செய்வது என்பது அந்தக் காலகட்டத்தில் யாருமே நினைத்துப் பார்க்காத ஒன்று.
மன்னர் ராஜராஜன் மிகவும் துணிச்சலுடன், ஏராளமான கப்பல்கள் மூலம் முன்னீர்ப்பழந்தீவுக்குப் படையெடுத்துச் சென்று வெற்றி வாகை சூடினார்.
அங்கு இருந்த ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டு, புதியவர்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர். அத்துடன் அந்தப் பகுதியில் இருந்த கடற்கொள்ளையர்களையும் ராஜராஜன் அடியோடு ஒழித்தார்.
அதன் பிறகு வணிகர்கள் எந்த பயமும் இன்றி மேற்கத்திய நாடுகளுக்குக் கப்பலில் சென்று வந்தார்கள்.
மிகத் தொலைவில் நடுக்கடலில் உள்ள தீவுக் கூட்டத்திற்கு கப்பல் படையை அனுப்பி வெற்றிகண்ட ராஜராஜனின் திறமை, வேறு யாராலும் நிறைவேற்ற முடியாத ஒன்று என்பதால், அந்தத் தீவின் வெற்றி அவரது மெய்க்கீர்த்தியில் முக்கிய இடம்பெற்றது.
இப்படி மூன்று முறை நடைபெற்ற கடற் போர்களிலும், இளவரசராக இருந்த ராஜேந்திரன் முக்கியப் பங்காற்றினார்.
முன்னீர்ப்பழந்தீவு போர் போலவே மேலைச்சாளுக்கிய மன்னர் சத்யாச்சரியனுடன் நடத்திய போரும் ராஜராஜனுக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது.
அமரர் கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் நாவலின் முக்கிய கதாபாத்திரம் சத்யாச்சரியன். அந்த மன்னரின் கொடூர குணம் பற்றி பலரும் அறிந்து இருப்பார்கள்.
அந்த சத்யாச்சரியன், பல்லவர் காலத்தைச் சேர்ந்தவர். அவரது வழியில் வந்த மற்றொரு சத்யாச்சரியன், மன்னர் ராஜராஜன் காலத்தில் மேலச்சாளுக்கிய நாட்டை ஆண்டு வந்தார்.
அந்த சத்யாச்சரியனுடன், மன்னர் ராஜராஜனும் இளவரசர் ராஜேந்திரனும் நடத்திய போர் மிகவும் உக்கிரமானது.