< Back
சிறப்புக் கட்டுரைகள்
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு
சிறப்புக் கட்டுரைகள்

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு

தினத்தந்தி
|
20 Nov 2022 4:28 PM IST

கீழைச்சாளுக்கியப் போர் முடிந்த உடன், இந்த மூன்று நாடுகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று சோழப் படைகளின் தளபதி அரையன் ராஜராஜன் தீர்மானித்தார்.

கீழைச்சாளுக்கியத்தில் மன்னர் ராஜேந்திரனின் மருமகன் ராஜராஜ நரேந்திரனை மன்னராக ஆக்குவதற்காக சோழப் படைகள் போர் நடத்தியபோது, அண்டை நாடுகளான தெலுங்கம், கலிங்கம், ஒட்டரம் (ஒடிசா) ஆகிய நாடுகளின் அரசர்கள், சோழப் படைகளுக்கு எதிராகக் களத்தில் குதித்தார்கள்.

கீழைச்சாளுக்கியப் போர் முடிந்த உடன், இந்த மூன்று நாடுகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று சோழப் படைகளின் தளபதி அரையன் ராஜராஜன் தீர்மானித்தார்.

அந்தச் சமயத்தில்தான் அவரிடம் மன்னர் ராஜேந்திரன், தமிழகத்தில் அமைக்கப்படும் புதிய தலைநகரைப் புனிதப்படுத்துவதற்காகக் கங்கை நீரைக் கொண்டுவர வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

மன்னரின் ஆசையை ஆணையாக ஏற்றுக்கொண்ட சோழப்படைகள், இந்திய வரலாற்றின் முக்கியப் படையெடுப்பாகக் கங்கையை நோக்கிச் சென்றன.

இந்தப் படையெடுப்பின்போது, வழிநெடுகிலும் சோழப்படைகள் வெற்றி கொண்ட 12 நாடுகளின் பட்டியல், மன்னர் ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் காணப்படுகிறது.

அதன்படி சக்கரக்கோட்டம், மதுரை மண்டலம், நாமனைக்கோணை, பஞ்சப்பள்ளி, மாசுனி தேசம், ஆதிநகர், ஒட்டவிஷயம், கோசலைநாடு, தண்டபுத்தி, தக்கணலாடம், வங்காள தேசம், உத்திரலாடம் ஆகிய நாடுகளை சோழப்படைகள் வென்றன.

வேங்கியில் இருந்து புறப்பட்ட சோழப்படை, முதலில் சக்கரக்கோட்டம் என்ற இடத்தைக் கைப்பற்றியது. சக்கரக்கோட்டம் என்பது தற்போதைய சத்தீஷ்கார் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் இந்திரவதி என்ற ஆற்றின் தென்கரையில் உள்ள இடம் ஆகும்.

அதன் பிறகு மதுரை மண்டலம், நாமனைக்கோனை ஆகிய நாடுகளையும், அடுத்து ஒடிசா மாநிலத்தில் உள்ள பஞ்சப்பள்ளி என்ற நாட்டையும், நாகர் மரபினருக்கு உரியது எனக் கூறப்படும் மாசுனி தேசத்தையும் சோழப்படை கைப்பற்றியது.

ஒடிசா மாநிலம் கஞ்ஜம் மாவட்டப் பகுதியில் உள்ள ஆதிநகர் என்ற நாட்டைச் சந்திரகுல மன்னரான இந்திரரதன் ஆண்டு வந்தார். அங்கே நடைபெற்ற போரில், ராஜேந்திர சோழனின் படைத் தலைவனின் வலிமை மிகுந்த யானை, குதிரை, காலாட் படைகள் இந்திரரதனை வென்றதாகவும், அந்த மன்னரின் வெண்கொற்றக் குடை வெட்டிச் சாய்க்கப்பட்டது என்றும் திருவாலங்காட்டுச் செப்பேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தப் போருக்குப் பிறகு, ஒடிசா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒட்டவிஷயம், கிழக்குப் பகுதியில் உள்ள கோசலைநாடு ஆகியவற்றைச் சோழப்படை கைப்பற்றியது.

இதன் பிறகு சோழப்படை மேற்கு வங்காள மாநிலத்துக்குள் புகுந்தது. அங்கு மிதுனபுரி மாவட்டத்தில் இருந்த தண்டபுத்தி என்ற நாட்டை தன்மபாலன் என்பவர் ஆண்டு வந்தார். அவரைத் தோற்கடித்த சோழப்படை, தண்டபுத்திக்கு வடக்கே இருந்த தக்கணலாடம் என்ற நாட்டின் மன்னர் ரணசூரனை வென்று அந்த நாட்டில் இருந்த செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டது.

வங்காள தேசத்தை கோவிந்தசந்தன் என்பவர் ஆண்டு வந்தார். அவர் சோழப் படைகளுடன் கடுமையாகப் போர் புரிந்தார். யானை மீது இருந்து போராடிய அவர், இறுதியில் சோழப் படையைச் சமாளிக்க முடியாமல் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடினார் என்று ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியில் கூறப்பட்டு இருக்கிறது.

சோழப் படை, கோவிந்தசந்தனை வெற்றி பெற்று திரும்பும்போது, கிழக்கு வங்கம், மகதம் உள்ளிட்ட பெரும் பகுதியை ஆட்சி செய்த மகிபாலன் என்ற மன்னர், சோழப் படையுடன் மோதினார். வட நாட்டில் இவர் ஒருவர் மட்டுமே பலம் வாய்ந்த பேரரசராக இருந்தார். உத்தரலாடம் என்ற இடத்தில் இரு படைகளுக்கும் இடையே கடும் போர் நடந்தது.

இந்தப் போரில் மகிபாலன் தோற்கடிக்கப்பட்டார். அவரது பட்டத்து யானை, அரண்மனைப் பண்டாரத்தில் இருந்த பொக்கிஷங்களை சோழப்படை கைப்பற்றியது.

அதன் பிறகு கங்கையின் புனித நீரை எடுப்பதற்காகச் சோழப்படை கங்கைக் கரைக்குச் சென்றபோது, ஓரிடத்தில் கங்கையைக் கடக்க வேண்டி இருந்தது. கங்கை நதி ஆழமாக இருந்ததுடன், தண்ணீர் பிரவாகம் எடுத்து ஓடியதால் கங்கையைக் கடப்பது சவாலாக இருந்தது.

அப்போது சோழப்படைத் தளபதிக்குப் புதிய யோசனை உதித்தது. அதன்படி, படையில் இருந்த அனைத்து யானைகளையும் கங்கை ஆற்றின் குறுக்கே வரிசையாக நிறுத்தினார்கள். நெருக்கமாக நின்ற யானைகளின் முதுகு மீது மரப் பலகைகளைப் போட்டு, அவற்றைத் தற்காலிகப் பாலம் போல உருவாக்கினார்கள்.

சோழப்படை வீரர்கள், அந்தப் பாலத்தில் ஏறிச்சென்று கங்கை ஆற்றைக் கடந்தார்கள். பின்னர் திரிவேணி துறையில் இருந்து புனித கங்கை நீரை சேகரித்தார்கள். சோழர்கள் கொண்டு சென்று இருந்த தங்கக் குடங்களில் கங்கை நீர் சேகரிக்கப்பட்டது.

தங்கள் பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்ற தகவலை, தளபதி அரையன் ராஜராஜன், வேங்கியில் தங்கி இருந்த மன்னர் ராஜேந்திர சோழனுக்கு ஓர் ஆள் மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்தார். அதன்படி குதிரைச் சேவகர் ஒருவர், மின்னல் வேகத்தில் சென்று அந்தச் செய்தியை மன்னர் ராஜேந்திரனிடம் தெரிவித்தார்.

கங்கைக்குச் செல்லும் வழியில் உள்ள வட மாநில வேந்தர்கள் அனைவரையும் சோழப் படை வெற்றி கண்டது என்பதையும், புனித கங்கை நீர் பொற்குடங்களில் சேகரிக்கப்பட்டுவிட்டது என்பதையும் கேள்விப்பட்ட ராஜேந்திரன் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தார்.

மாபெரும் சாதனை புரிந்த படை வீரர்களைக் கவுரவிக்கும் விதமாக அவர்களை எதிர்கொண்டு வரவேற்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

ஒரு சிறிய படையுடன் வேங்கியில் இருந்து புறப்பட்ட ராஜேந்திர சோழன், கோதாவரி நதியை அடைந்தார். அந்த நதியில் புனிதச் சடங்குகளைச் செய்த ராஜேந்திர சோழன், அங்கு இருந்து கிழக்கு நோக்கிச் சென்றார்.

வழியில் அவர் ஒட்டர தேசத்தைக் கடக்க வேண்டி இருந்தது.

ஒட்டர தேச மன்னர், பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு ராஜேந்திரனை எதிர்ப்பதற்காகத் தனது தம்பியுடன் விரைந்து வந்தார்.

இந்தச் சமயத்தில் வட நாட்டில் இருந்து திரும்பிய சோழப்படையும் ஒட்டர தேசத்தில் உள்ள மகேந்திரகிரி என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தது.

அங்கே ஒட்டர தேச மன்னரின் யானைப் படைக்கும், ராஜேந்திரனின் படைக்கும் இடையே போர் நடைபெற்றது. இந்தப் போரின்போது ஒட்டர தேச யானைப் படையைச் சேர்ந்த ஒரு யானை, மன்னர் ராஜேந்திரனை கொல்வதற்கு முயன்றது.

கண நேரத்தில் உயிர் தப்பிய மன்னர் ராஜேந்திரன், தன்னைக் கொல்ல வந்த யானையை கூரிய ஈட்டியால் குத்திக் கொன்றார்.

போரில் தோல்வி அடைந்த ஒட்டர தேச மன்னரும், அவரது தம்பியும் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடினார்கள். போர்க்களத்தில் மிஞ்சிய ஒட்டர தேச யானைகளை சோழப் படையினர் கைப்பற்றிக் கொண்டார்கள்.

போரில் ஒட்டர தேச மன்னர் வீழ்த்தப்பட்டதைக் குறிக்கும் வகையில் அங்கு மகேந்திரகிரி என்ற இடத்தில் வெற்றித் தூண் ஒன்றை ராஜேந்திரன் நிறுவினார்.

அங்கு நடைபெற்ற போரில் தீரத்துடன் போராடிய சோழப்படையின் தளபதி அரையன் ராஜராஜனுக்கு 'விட்டி வாரணமல்லன்' (யானைப் படையை வென்றவன்) என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது.

மகேந்திரகிரி மலையில் மூன்று கோவில்கள் உள்ளன. அந்தக் கோவில்களின் சுவரில் இந்தத் தகவல்கள் தமிழ் மொழியில் கல்வெட்டாகப் பதிக்கப்பட்டு இருப்பதை இப்போதும் பார்க்கலாம்.

சோழப்படைகளின் தளபதி, வடநாட்டில் இருந்து கொண்டு வந்த ஏராளமான செல்வங்கள் மற்றும் கங்கை நீர் ஆகியவற்றுடன், ராஜேந்திரன் தலைநகர் திரும்பினார் என்று திருவாலங்காட்டுச் செப்பேட்டில் எழுதப்பட்டு இருக்கிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடு, தலைநகர் என்று குறிப்பிட்டு இருப்பது, தஞ்சை நகரைத்தான். காரணம், அப்போது புதிய தலைநகரை நிர்மாணிக்கும் வேலைகள் முற்றுப்பெறாமல் இருந்தன.

தஞ்சை நகருக்கு வரும் வழியில் உள்ள திருத்தலங்களில் கங்கை நீரை வைத்து ராஜேந்திரன் வழிபாடு நடத்தியதோடு, அந்தக் கோவில்களுக்கு நிவந்தங்கள் வழங்கினார் என்ற தகவல், கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

கங்கைகொண்ட சோழபுரத்திற்குத் தென்கிழக்கே 10 மைல் தூரத்தில் உள்ள திருலோக்கி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில், "ராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்துத் திருவடி தொழுது..." என்ற வாசகம் காணப்படுவதன் மூலம் இதனை அறியலாம்.

வட மாநில படையெடுப்பை வெற்றிகரமாக முடித்து, கங்கையில் இருந்து புனித நீரைக் கொண்டு வந்ததால், அழியாப் புகழைப் பறைசாற்றும் "கங்கைகொண்ட சோழன்" என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்று ராஜேந்திரன் புதிய வரலாறு படைத்தார்.

சோழப் படைகள் வட மாநில படையெடுப்பில் வெற்றி பெற்ற அதே நேரம், இந்தப் படையெடுப்பு, தமிழக வரலாற்றுச் செய்தியில் ஓர் ஐயப்பாடு எழுவதற்குக் காரணம் ஆகிவிட்டது.

(வரலாறு வளரும்)

வட மாநில படையெடுப்பை

வெற்றிகரமாக முடித்து, கங்கையில் இருந்து புனித நீரைக் கொண்டு வந்ததால், அழியாப் புகழைப் பறைசாற்றும் "கங்கைகொண்ட சோழன்" என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்று ராஜேந்திரன் புதிய வரலாறு படைத்தார்.

மேலும் செய்திகள்