< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஏழை குழந்தைகளுக்கு... கால்பந்து பயிற்சியளிக்கும் காவலர்..!
சிறப்புக் கட்டுரைகள்

ஏழை குழந்தைகளுக்கு... கால்பந்து பயிற்சியளிக்கும் காவலர்..!

தினத்தந்தி
|
6 Aug 2022 7:32 AM IST

மதுரை மண்ணில் பிறந்த சுந்தர ராஜா, பொறுப்பான காவல் அதிகாரி. அத்துடன், திறமையான கால்பந்து பயிற்சியாளரும்கூட. காவல் துறையில் பணியாற்றிக்கொண்டே, துடிப்பான ஏழை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை கொண்டு கலக்கலான கால்பந்து அணியையும் கட்டமைத்திருக்கிறார். அதுபற்றி நம்முடன் பகிர்ந்து கொண்டவை...

''எனது சொந்த ஊர், மதுரை திருமங்கலம். சிறுவயது முதலே கால்பந்து விளையாடி வருகிறேன். கல்லூரி காலங்களில், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறேன். இந்நிலையில் 2003-ம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்த பிறகும், போலீஸ் அணியில் விளையாடினேன். ஒருகட்டத்தில் கால்பந்து விளையாட்டு என்பது, காலை நேர அத்தியாவசிய உடற்பயிற்சியானது. இதற்காக பூங்காவில் விளையாடியபோதுதான், கால்பந்து மீது ஆர்வம் கொண்டிருந்த 20 சிறுவர்களை சந்திக்க முடிந்தது. அவர்கள் நாள்தோறும் கால்பந்து விளையாடுவார்கள். அவர்களுக்கு கால்பந்து மீதான ஆர்வம் அதிகமாக இருந்ததே தவிர ஆட்ட நுணுக்கங்களிலும், ஆட்ட விதிமுறைகளிலும் முறையான புரிதல் இல்லை. அதை நான் தெளிவுப்படுத்தினேன். அவர்களுக்கு தெரிந்திருந்த கால்பந்து விளையாட்டை முறைப்படி கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். எங்களுக்குள் நட்புறவு உண்டானது. கால்பந்து என்ற விளையாட்டால் நாங்கள் ஒன்றிணைக்கப்பட்டோம்'' என்று பொறுப்பாக பேசும் சுந்தர ராஜா, 20 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க தொடங்கி, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சியாளராக மாறியிருக்கிறார்.

''அந்த 20 சிறுவர்களுக்கும் கால்பந்து சொல்லி கொடுக்க ஆரம்பித்து, வெறும் 30 நாட்கள்தான் கடந்திருந்தது. மதுரையில், மிகப்பெரிய கால்பந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி, அவர்களை வென்று வந்திருந்தனர். அதுவே அவர்களுக்கு முதல் வெற்றியும்கூட. அந்த வெற்றி, என்னை அவர்களுடனே பயணிக்க வைத்தது. அவர்களை போலவே கால்பந்தில் சாதிக்க துடிக்கும் ஏழை குழந்தைகளுக்கும் கால்பந்து கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டேன். அதற்காகவே 'ரிசர்வ் லைன் கால்பந்து அகாடமி' ஒன்றை உருவாக்கி, அதில் ஒரே அணியாக, பயிற்சி பெற ஆரம்பித்தோம்'' என்றவர், உயர் அதிகாரிகளின் அனுமதியோடு பல கால்பந்தாட்ட பயிற்சி முகாம்களையும் முன் னெடுத்து கால்பந்தாட்ட விளையாட்டை மதுரை முழுக்க வளர்த்தெடுத்திருக்கிறார்.

2015-ம் ஆண்டு சுந்தர ராஜாவால் நிறுவப்பட்ட கால்பந்தாட்ட அகாடமி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பல இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியது. இவர்கள் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பல போட்டிகளில் விளையாடி, பல வெற்றிக்கோப்பைகளை வென்று சாதனை படைத்திருக்கிறார்கள். பல்வேறு வயது பிரிவுகளின்கீழ் 10 பெண்கள் உட்பட 80 மாணவர்களுக்குப் பயிற்சியளிப்பதில் பெருமைகொள்கிறார் ​​42 வயதாகும் சுந்தர ராஜா. ஏற்கனவே அவரிடம் பயிற்சி பெற்று, பயிற்சி யாளர் உரிமம் பெற்றவர்கள் கால்பந்து பயிற்சியில் அவருக்கு உதவி செய்கின்றனர்.

அரசு உதவிபெறும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் அவர்கள், சிறுவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கிறார்கள்.

''இவர்களுக்கு தொழில் முறைப்படி பயிற்சி வழங்குவதற்காகவே, 2017-ம் ஆண்டு நான் பயிற்சியாளர் உரிமம் (டி-லைசென்ஸ்) பெற்றேன். அடுத்த சில வருடங்களிலேயே, மாநில கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக செயல்படக்கூடிய 'சி-லைசென்ஸும்' பெற்றுவிட்டேன். இப்போது பி-லைசென்ஸ் பயிற்சிகளில் மும்முரம் காட்டுகிறேன். இதன்மூலம் தேசிய மகளிர் கால்பந்து அணிக்குக்கூட பயிற்சியாளராக செயலாற்ற முடியும்'' என்பவர், இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவதையே தன்னுடைய லட்சியமாக வைத்திருக்கிறார். இதற்கு அடித்தளமிடும் வகையில் தன்னுடைய அணியை வழிநடத்தி பல வெற்றிகளையும் பதிவு செய்திருக்கிறார்.

''திறமையான பல அணிகளை எங்களது அணி பந்தாடி இருக்கிறது. 2017-2018-ம் ஆண்டு நடந்த எம்.டி.எப்.ஏ. 'பி' டிவிஷன் போட்டியில் 2-ம் இடம் பிடித்தோம். அதேபோல அதற்கு அடுத்த வருடமும், பல திறமையான அணிகளை வீழ்த்தி, 2-ம் இடம் பிடித்தோம்.

2019-ம் ஆண்டு, எம்.டி.எப்.ஏ. 14-வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் எங்களது சிறுவர் அணி 2-ம் இடத்தை பிடித்தது. அதேபோல 2020-ம் ஆண்டில், 'உயர்நீதி மன்ற' அணிக்காக விளையாடும் வாய்ப்பு ஒருசில மாணவர்களுக்கு கிடைத்தது. அதிலும் சிறப்பாக விளையாடி, 2-ம் இடம் பிடித்தனர். அதே ஆண்டு 'சி' டிவிஷனில் விளையாடி, 2-ம் இடத்தை பிடித்தோம்'' என்றவர், தென்னிந்திய அளவில் நடைபெறும் பிற போட்டிகளிலும் தனது அணியை பங்குபெற செய்திருக்கிறார். இதில் தஞ்சையில் நடைபெற்ற தென் இந்தியா டோரனமெண்டில், 2017-ம் ஆண்டு 2-ம் இடமும், 2018-ம் ஆண்டு மூன்றாம் இடமும் கிடைத்திருக்கிறது.

''கால்பந்து விளையாட்டில் திறமையான கோல்கீப்பர்களை உருவாக்குவது கடினமான விஷயம். ஆனால் எங்களது அணியில் 9-க்கும் மேற்பட்ட கோல் கீப்பர்கள் இருக்கின்றனர். இந்திய அணியின் மிக பிரபல கோல் கீப்பராக திகழ்ந்த ராஜமாணிக்கம், எங்களுக்கு பக்கபலமாக இருப்பதால் அவரது உதவியுடன், திறமையான கோல் கீப்பர்களை உருவாக்கி வருகிறோம். இவர்கள் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார்கள்" என்றவர், தன்னிடம் பயிற்சி பெறும் மாணவர்களை வழிநடத்தி, உடற்கல்வி ஆசிரியராகவும், பயிற்சியாளராகவும் தரம் உயர்த்தி இருக்கிறார். அபுபக்கர் சிதிக், வீரமணி மற்றும் தமிழ்செல்வன்... இவர்கள் மூவரும் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே, இளைஞர் படைக்கு கால்பந்து பயிற்சி வழங்குகிறார்கள்.

''அயராத காவல் பணியிலும், பயிற்சி பணியிலும் நாட்கள் பிசியாக நகர்வதால் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடமுடிவதில்லை. இருப்பினும் என்னுடைய மனைவி ஜெர்லின் ரூபா அதை உணர்ந்திருப்பதாலும், அவரின் ஊக்கப் படுத்துதலினாலும், கால்பந்து பயிற்சியில் அதிக நேரம் செலவிடமுடிகிறது. அதேபோல காவல் துறையினரின் ஆதரவும் சிறப்பாக கிடைக்கிறது'' என்று விடை கொடுத்தார்.

மேலும் செய்திகள்