< Back
சிறப்புக் கட்டுரைகள்
பாரம்பரிய வாழ்க்கைமுறையை காட்சிப்படுத்தும் பண்ணை
சிறப்புக் கட்டுரைகள்

பாரம்பரிய வாழ்க்கைமுறையை காட்சிப்படுத்தும் பண்ணை

தினத்தந்தி
|
24 July 2022 5:45 PM IST

சுற்றுச்சூழலுக்கேற்ற பாரம்பரிய முறையில் பண்ணை வீட்டைக் கட்டியிருக்கிறார்கள் மும்பை தம்பதியர் அத்வைத்-உத்தாரா. மகாராஷ் டிராவின் நாசிக்கில் உதோப்பியா பார்ம் ஸ்டே என்ற பெயரில் இந்த கனவுப் பண்ணையை உருவாக்கியிருக்கிறார்கள்.

வேலையை விட்டுவிட்டு இருவரும் இயற்கை சார்ந்த வாழ்க்கைக்குத் திரும்பியது குறித்து அத்வைத் விவரிக்கிறார்.

''நாங்கள் இருவரும் மாடலிங் துறையில் பணியாற்றினோம். என் மனைவி 1982-ம் ஆண்டு மிஸ்.இந்தியா பட்டம் பெற்றவர். எங்கள் மகள்களை இயற்கை சூழ்ந்த பகுதியில் வளர்க்க முதலில் நாசிக்கிற்கு இடம் பெயர்ந்தோம். அங்கு 3 உணவகங்களை தொடங்கினோம். அதன்பிறகு, 2018-ம் ஆண்டு பண்ணை இல்லத்தை திறந்தோம்.

கிராமத்துக் கட்டிடக்கலை பற்றித் தெரிந்துகொள்ள அருகில் உள்ள கிராமங்களில் பல மாதங்களை செலவழித்தேன். பண்ணை இல்லங்களை கட்ட தொடங்கும்போது அந்த நிலத்தின், மண்ணின் தரத்தை பார்த்து கட்டுமானப் பணியை தொடங்குவதற்கு என்ஜினீயர்கள் தயங்கினர்.

அதன்பின்னர், வல்லுநர்களின் ஆலோசனையின் பேரில் நானே கிராமத்துப் பாணியில் குடில்களைக் கட்டினேன். சிறிதளவுதான் சிமெண்ட் பயன்படுத்தினோம். பெரும்பாலும் மாட்டுச் சாணத்தையே சுவரைப் பூசுவதற்குப் பயன்படுத்தினோம்.

பண்ணையில் சூரியசக்தி மின்சாரத்தையே பயன்படுத்துகிறோம். பண்ணையில் காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயிரிட்டுள்ளோம். எங்கள் பண்ணையில் 42 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. வசிக்கின்றன. சூரியகாந்தி பூக்கள் மூலம் 100 லிட்டர் எண்ணெய் கிடைக்கிறது.

இந்த பசுமை கட்டமைப்பு பற்றி பேஸ்புக்கில் தெரிந்து கொண்ட மும்பைவாசிகள், இங்கு வந்து தங்க அனுமதி கேட்டனர். நாங்களும் சம்மதித்திருக்கிறோம். அப்படி பண்ணையில் தங்குவோருக்கு, மூலிகை உணவும் சமைத்து கொடுக்கிறோம்.

நாங்கள் இயற்கை முறையில் வாழ்வதற்காக கட்டமைக்கப்பட்ட இந்த பண்ணை வீட்டில், இப்போது பலரும் வந்து தங்குகிறார்கள். அவர்களின் தேவைகளுக்காக, கூடுதலாக கட்டமைத்து வருகிறோம். விருந்தாளிகளில் சிலர், உடற்பயிற்சி கூடத்தை எதிர்பார்த்தனர். அதற்கு மாற்றாக நாங்கள் யோகா வகுப்புகளையும் நடத்துகிறோம்.

பெரிய நகரங்களில் வாழும் குழந்தைகள் செடிகளில் காய்கறிகள் எப்படி வளரும் என்று அறிந்திருக்க மாட்டார்கள். இங்கு வந்ததும் அவற்றை அதிசயமாகப் பார்க்கிறார்கள்" என்றார்.

மேலும் செய்திகள்