< Back
சிறப்புக் கட்டுரைகள்
வறட்சியின் பிடியில் தத்தளிக்கும் 7 உலக நாடுகள்
சிறப்புக் கட்டுரைகள்

வறட்சியின் பிடியில் தத்தளிக்கும் 7 உலக நாடுகள்

தினத்தந்தி
|
24 Jun 2022 8:52 PM IST

2030-ம் ஆண்டுக்குள் சுமார் 70 கோடி மக்கள் வறட்சியால் இடம்பெயர்ந்து செல்லும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் உலக நாடுகள் சில உங்கள் பார்வைக்கு...

பருவ காலநிலை மாற்றம், உலக வெப்ப மயமாதல், சுற்றுச்சூழல் பரப்பளவு குறைதல் போன்றவை வறட்சி அபாயத்தை அதிகரிக்க வழிவகுக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, ஒவ்வொரு ஆண்டும் 5.5 கோடி பேர் வறட்சியால் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். உலகின் ஒவ்வொரு பகுதியிலும் கால்நடைகள் மற்றும் பயிர்கள்தான் வறட்சியின் கோரப்பிடியில் கடுமையாக சிக்குகின்றன. மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஆசியாவில்தான் அதிகம் என்பது தெரியவந்துள்ளது. உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறார்கள்.

1. எத்தியோப்பியா: இங்கு பல ஆண்டு களாக வறட்சி நிலவுகிறது. சோமாலி மற்றும் ஒரோமியா பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதிலும் 20 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

புவி வெப்பமடைதலுக்கு வழிவகுக்கும் காலநிலை மாற்றம், மழைப்பொழிவு குறைதல், காடுகள் அழிப்பு மற்றும் நிலத்தில் ஏற்படும் மாற்றம் ஆகியவை எத்தியோப்பியாவை மிகவும் வறட்சியான நாடுகளில் ஒன்றாக மாற்றிக்கொண்டிருக்கின்றன.

2. பிரேசில்: பிரேசிலின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகள் இதுநாள் வரை பார்த்திராத அளவுக்கு மிக மோசமான வறட்சியை கடந்த ஆண்டு சந்தித்தன. வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை, உணவு பயிர்கள் வாடுதல் போன்ற நிகழ்வுகள் அரங்கேறின. அமேசான் காடுகளில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் வன பகுதிகள் பலவும் கடும் பாதிப்பை எதிர்கொண்டன.

பசிபிக் பெருங்கடலில் நிலவிய வானிலை மாற்றம், பருவ கால நிலை மாற்றம், அமேசான் காடுகள் அழிப்பின்போது பல உயிரினங்கள் இறப்பு போன்றவை காரணமாக மழைப்பொழிவில் மாற்றம் நிகழ்ந்தன. அதன் காரணமாக பிரேசிலின் பல பகுதிகளில் வறட்சி அபாயம் அதிகரித்துள்ளது.

3. சிலி: ஒன்றல்ல.. இரண்டல்ல.. 13 ஆண்டுகளாக போதிய மழைப்பொழிவு இல்லாமல் நாட்டின் பல பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கிறது. இது 60 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான வறட்சி நிலைமையாகும். லத்தீன் அமெரிக்க பனிப்பாறைகளில் மூன்றில் ஒரு பங்கு சிலியில் படர்ந்திருந்தாலும் காலநிலை மாற்றம் தண்ணீரை பதுக்கி வைப்பது போன்ற செயல்பாடுகள் நாட்டில் நெருக்கடி நிலையை ஏற்படுத்துகின்றன.

4. ஈராக்: இங்கு அவ்வப்போது விஸ்வரூபம் எடுக்கும் மணல் புயல்கள் நாட்டின் சில பகுதிகளை வாழ தகுதி இல்லாத பிரதேசமாக மாற்றிவிட்டன. ஈராக் கடந்த மூன்று ஆண்டு களாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் காலநிலை மாற்றம் நிலைமையை மோசமாக்கிக்கொண்டிருக்கிறது. ஈராக்கின் 'தெற்கு பிரதேசத்தின் முத்து' என்று அழைக்கப்படும் சாவா ஏரியும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வறண்டு விட்டது.

5. அங்கோலா: அங்கோலாவும் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. சுமார் 15.8 லட்சம் பேர் கடுமையான உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர். அதிலும் தெற்கு அங்கோலாவில் நிலவும் வறட்சியான கால நிலையும், கால்நடை வளர்ப்புக்கு உகந்த சூழல் இல்லாததும் நிலைமையை மோசமாக்கிவிட்டது. உலகின் மிகவும் வறட்சியான பகுதிகளில் ஒன்றாகவும் இது அறியப்படுகிறது.

7. புர்கினா பாசோ: மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள புர்கினா பாசோவின் சஹேல் பகுதி 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது. அங்கு 1 கோடிக்கும் அதிகமான மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே புர்கினாவில் கடந்த 1970களில் வறட்சி காரணமாக கடுமையான பஞ்சம் தலைதூக்கியது. போதிய உணவு பொருட்கள் கிடைக்காமல் கால்நடைகள் மட்டுமின்றி மக்களும் இறந்தனர். அதன் பிறகு நிலைமை ஓரளவு சீரடைந்தாலும் அதன் இருப்பிடம் மற்றும் கால நிலை மாற்றம் காரணமாக உலகின் வறட்சியான பகுதிகளில் ஒன்றாக இப்பகுதி அறியப்படுகிறது.

6. ஆப்கானிஸ்தான்: கடந்த ஆண்டு முதலே வறட்சி பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அது கால்நடைகள் மற்றும் பயிர் உற்பத்தியை முடக்கி உணவுப் பற்றாக்குறைக்கு வழி வகுத்துவிட்டது. பனிப்பாறைகள், பனி மற்றும் பனிக்கட்டிகளாக குவிந்து கிடக்கும் மலைகளில் நிலவும் குளிர்கால மழைப்பொழிவை நம்பிதான் நீர் நிலைகள் இருக்கின்றன. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் புவி வெப்பமடைதல் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வறட்சிக்கு வழிவகுத்துவிட்டது.

மேலும் செய்திகள்