< Back
சிறப்புக் கட்டுரைகள்
தாய்ப்பால் கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
சிறப்புக் கட்டுரைகள்

தாய்ப்பால் கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

தினத்தந்தி
|
7 Aug 2022 5:09 PM IST

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தாய்மார்களும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதில் தாய்ப்பால் கொடுக்கும்போது உண்ணும் உணவு முறைக்கு முக்கிய பங்கு உண்டு.

தாய்மார்கள் சாப்பிடும் சில உணவுகள் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். அப்படி ஏதேனும் பாதிப்பை குழந்தை எதிர்கொண்டால் அந்த உணவுகளை ஒரு வாரம் வரை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். அந்த சமயத்தில் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் வீரியம் குறைந்திருந்தால் அந்த உணவு களை அறவே தவிர்த்துவிட வேண்டும். தாய்ப் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்:

மீன்களில் உள்ளடங்கி இருக்கும் பாதரசம் பச்சிளம் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். அப்படி அதிக அளவு பாதரசம் கொண்ட மீன் வகைகளை தாய்மார்கள் தொடர்ந்து உட்கொண்டு வருவது குழந்தையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். குழந்தையின் வளர்ச்சியும் தாமதமாகும். குறிப்பாக டுனா, சுறா, வாள் மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிலும் இறால், நண்டு, ஆக்டோபஸ் போன்ற 'ஷெல்பிஷ்' மீன் இனங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

இருப்பினும் மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டது. எனவே பாதரசம் அளவு குறைவாக உள்ள மீன்களை வாரத்திற்கு இரு முறை உட்கொள்வது நல்லது.

காபி மற்றும் சாக்லெட்டில் காபின் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிலிருக்கும் காபின் தாய்ப்பாலில் கலந்துவிடக்கூடும். குறிப்பாக காபின் குழந்தையின் தூக்க செயல்முறைக்கு தொந்தரவு கொடுக்கும். தவிர்க்கமுடியாத பட்சத்தில் 2 கப் காபிக்கு மேல் பருகக் கூடாது. ஒன்று அல்லது இரண்டு துண்டு சாக்லெட்டு களுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும்போது காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனினும் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு, வயிற்று வலி இருந்தால் கார உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.

அஸ்பாரகஸ், பருப்பு வகைகள், பீன்ஸ், முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலி பிளவர் போன்றவையும் தாய்ப்பால் கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள். குழந்தைக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாயு தொல்லை இருந்தால், இந்த உணவுகளை ஓரிரு வாரங்கள் காட்டாயம் தவிர்த்து விடுவது நல்லது.

தேநீரிலும் காபின் உள்ளது. இது குழந்தையின் செரிமான அமைப்புக்கு நல்லதல்ல. மேலும் தாயின் உடலில் இரும்பு உறிஞ்சப்படும் செயல்முறையையும் கடினமாக்கும். பிரசவத்தின்போது இழக்கப்பட்ட இரும்பு சத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசியமானது. அதனால் இறைச்சி, பச்சை இலை காய்கறிகள், தானியங்கள் போன்ற இரும்பு சத்து நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த உணவுகளுடன் தேநீர் பருகக்கூடாது.

புதினா குடும்பத்தை சேர்ந்த பெப்பர்மிண்ட் மற்றும் கொத்தமல்லி தழை போன்றவை தாய்ப்பால் உற்பத்தியை கட்டுப்படுத்தக்கூடும். தாய்ப்பால் சுரப்பு குறைவதாக உணர்ந்தால் இவற்றை சமையலில் சேர்ப்பதை தவிர்த்துவிட வேண்டும்.

தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியலில் சர்க்கரை பானங்களும் அடங்கும். சோடாக்கள், பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், குளிர் பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் தாகம் எடுக்கலாம். சோடா அல்லது குளிர் பானங்களை உட்கொள்வதற்கு பதிலாக தண்ணீர் பருகுவதுதான் சிறந்தது.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பசுவின் பால் பருகுவது பிரச்சினையை ஏற்படுத்தாது. எனினும் குழந்தைக்கு பால் ஒவ்வாமை பிரச்சினை இருப்பதாக உணர்ந்தால், பசும்பால் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளின் மார்பு, கன்னத்தில் அரிப்பு, சொறி போன்ற தோல் அழற்சி பிரச்சினைகள் ஏற்பட்டால் வேர்க் கடலை போன்ற நட்ஸ் வகைளை தாய்மார்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்