செஸ் தலைநகரம் தமிழகம்
|உலக செஸ் திருவிழா, மாமல்லையில் இன்று தொடங்குகிறது. சதுரங்கத்தின் பிறப்பிடமான இந்தியாவில் முதல் முறையாக ‘செஸ் ஒலிம்பியாட்’ நடைபெறுவது சிறப்பு. அதிலும் இந்தியாவின் செஸ் தலைநகரமான தமிழகத்தில் உலக செஸ் ஜாம்பவான்களின் மோதல் அரங்கேறுவது ஏகப் பொருத்தம்.
செஸ் தலைநகரம் தமிழகம் என்பது ஒருவேளை உங்களுக்கு மிகைப்படுத்தலாக தோன்றலாம். ஆனால் அதன் அர்த்தம், கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்தாலே புரியும்...
இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர், மனுவேல் ஆரோன் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான்.
நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் எஸ்.விஜயலட்சுமி, சென்னையின் புதல்வி.
இந்தியாவின் முதல் சர்வதேச செஸ் நடுவர் வெங்கடாச்சலம் காமேஸ்வரன், சென்னையின் மதிப்புமிக்க மூத்த குடிமகன்.
இந்தியாவின் இன்றைய இரு இளம் கிராண்ட்மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, சென்னை செல்லங்கள்.
நாட்டில் தற்போதுள்ள கிராண்ட்மாஸ்டர்கள் 74 பேரில் 26 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் 'செஸ் ராஜா', முதல் கிராண்ட்மாஸ்டர், முதல் மற்றும் ஒரே உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் ஊர் சென்னை.
1972-ம் ஆண்டு சென்னையில் ரஷிய கலாசார மையத்தால் நிறுவப்பட்ட டால் செஸ் கிளப்பில் பயிற்சி பெறத் தொடங்கிய ஒரு சிறுவன்தான், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் செஸ் புரட்சிக்கு வித்திட்டவர்.
அவர்... நீங்கள் நினைப்பது சரி, 'விஷி' எனப்படும் விஸ்வநாதன் ஆனந்தேதான்.
செஸ் விளையாடத் தொடங்கிய சிறிது காலத்திலேயே இந்த 'மின்னல் குழந்தை' தனது வேகத்தாலும், வியூகத்தாலும் எதிராளிகளை விய(ர்)க்கவைத்தது.
புத்தாயிரம் ஆண்டில், புதிய உலக சாம்பியனாக, ரஷியர்கள் ஆதிக்கம் செலுத்திய செஸ் அரங்கில் புயலாய் பிரவேசித்தார் ஆனந்த்.
2000-ல் ஆனந்த் முதல் முறையாக உலக சாம்பியன் மகுடம் சூடிவந்தபோது அவரை விமான நிலையத்தில் இருந்து வீடு வரை சாரட் வண்டியில் அழைத்துச்சென்று சிலாகித்துக்கொண்டாடியது சென்னை.
ஆனந்தை பார்த்து உத்வேகம் பெற்ற பலரும் செஸ் பலகை முன் அமர, சரமாரியாய் இங்கிருந்து கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகத் தொடங்கினார்கள். சென்னையை 'கிராண்ட்மாஸ்டர் தொழிற்சாலை' என்றே வர்ணிக்கத் தொடங்கினார்கள் செஸ் வல்லுநர்கள்.
அதிலும் சமீப ஆண்டுகளில் இளம் வீரர்கள் சென்னையின் செஸ் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். அவர்களில் 'பளிச்'சென்று ஞாபகத்துக்கு வருபவர், பிரக்ஞானந்தா.
செஸ் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் (10) சர்வதேச மாஸ்டர் ஆனவர், 'பிராக்' (பிரக்ஞானந்தாவின் சுருக்க செல்லப் பெயர்). பக்கத்து வீட்டு பையன் போல தோற்றம் காட்டும் பிரக்ஞானந்தா, தற்போது உலகின் 5-வது இளம் கிராண்ட்மாஸ்டர்.
இந்த ஆண்டில், நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனை இருமுறை மண்டியிட வைத்து மலைப்பூட்டினார் பிரக்ஞானந்தா. இவர் தனது குருவாக கருதும் ஆனந்தை அவரது சொந்த ஊரான சென்னையில் சாய்த்த கார்ல்செனுக்கு எதிரான இனிய பழிவாங்கலாகவும் அது அமைந்தது.
கார்ல்செனை பிரக்ஞானந்தா முதல்முறை வென்றபோது, 'பிராக்... 16 வயதில் எவ்வளவு பெரிய வீரரை நீங்கள் வீழ்த்தியிருக்கிறீர்கள்! ஒட்டுமொத்த இந்தியாவையே நீங்கள் பெருமையடையச் செய்துவிட்டீர்கள்' என்று சிலிர்த்துப்போய் பாராட்டினார் கிரிக்கெட் கிங் சச்சின்.
இந்தியாவின் மற்றொரு இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷும், பிரக்ஞானந்தாவும் சென்னையின் ஒரே பள்ளியின் மாணவர்கள். பிறவி செஸ் மேதை குகேஷ், இவ்விளையாட்டு வரலாற்றில் 2-வது இளம் கிராண்ட்மாஸ்டர் ஆனவர்.
கடந்த 2019-ம் ஆண்டில் அந்த பெருமையை தனதாக்கினார் இவர். அப்போது உலகிலேயே இளம் கிராண்ட்மாஸ்டராக திகழ்ந்த உக்ரைனின் செர்ஜி கர்ஜாகினின் சாதனையை தகர்க்கும் வாய்ப்பை வெறும் 17 நாட்களில் தவறவிட்டார் குகேஷ்.
தமிழத்திலும், தாயகத்திலும் சதுரங்க விருட்சம் கிளைவிட விதையாய் விழுந்த ஆனந்த், தனக்கு முன்பே செஸ் கலாசாரம் தமிழகத்தில் வேரூன்றியிருந்தது என்று கூறுகிறார்.
இன்றும் தமிழகத்தின் சிறுநகரங்களிலும், பெருநகரங்களிலும் மூலை முடுக்குகளில் எல்லாம் செஸ் பயிற்சி நிலைய பலகைகள் தென்படுவதையும், அங்கு கருப்பு-வெள்ளை கட்ட பலகைகளின் முன்னே இளஞ்சிறார், சிறுமியர் மோனத் தவம் இருப்பதையும் காணலாம். சர்வதேச அனுபவம் பெற்ற செஸ் கில்லிகள் பலரும் அடுத்தடுத்த வீரர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த விளையாட்டில் பெற்றோர் காட்டும் ஆர்வத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
சென்னையின் இளம் சர்வதேச செஸ் சிங்கங்கள் பலவும் சைவப்பட்சிகள். அதனால் அவர்களின் தாய்மார்கள் ரைஸ் குக்கரும் கையுமாய் உலகெங்கும் உடன் பயணிக்கிறார்கள். செஸ் விளையாட்டுக்கு பல பள்ளிகள் அளிக்கும் ஆதரவும் 'சபாஷ்' போடத் தகுந்தது.
முத்தாய்ப்பாக, செஸ் விளையாட்டுக்கு கட்சி தாண்டி தமிழக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தரும் ஆதரவு, இந்தியாவிலேயே வேறு எங்கும் காண முடியாத முக்கியமான விஷயம் இது என்கிறார் ஒரு தமிழக கிராண்ட்மாஸ்டர்.
தற்போதுகூட, செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வாய்ப்பை இருகரம் நீட்டி வரவேற்றதும், அதை வெற்றிகரமாக நடத்திக்காட்ட வேண்டும் என்று முதல்-அமைச்சர் முதற்கொண்டு அரசு எந்திரம் சுற்றிச் சுழல்வதும் தமிழகத்தின் செஸ் பிரியத்துக்குச் சான்று.
அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் சொந்த மண்ணில் தமிழக செஸ் படை பட்டையைக் கிளப்பும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பு.
போட்டிக்களமாக மாமல்லபுரம் தேர்வு ஏன்?
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்களமாக மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? தலைநகர் சென்னையில் எல்லா வசதிகளும் இருக்கும்போது அங்கேயே போட்டிகளை நடத்தியிருக்கலாமே என்ற கேள்விகள் பலருக்கும் எழலாம். ஆனால் சென்னையில் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் குவிவது இங்கு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்திருக்கும். மாறாக, சென்னைக்கு அருகிலேயே அமைந்திருப்பதுடன், நட்சத்திர ஓட்டல்கள் பலவும் இருப்பதும், பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய முடிவதும் மாமல்லபுரம் தேர்வுக்கு காரணமாக கூறப்படுகின்றன. இதன் வரலாற்று, பாரம்பரிய பெருமையும், சர்வதேச அளவில் கிடைக்கும் சுற்றுலா விளம்பரமும் கூடுதல் காரணங்கள்.
இதற்கு முன்பு...
இதற்கு முன்பு சென்னையில் குறிப்பிடத்தக்க பெரிய சர்வதேச போட்டியாக 2013-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப், அந்த ஆண்டின் நவம்பர் 7 முதல் 25 வரை நடந்தது. அதில் அப்போதைய சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை வென்று புதிய உலக சாம்பியனாக மகுடம் சூடினார், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென்.
பிரத்தியேக செஸ் இதழ்
செஸ் செய்திகளுக்கு என்றே பிரத்தியேகமாக சென்னையில் இருந்து 'செஸ்மேட்' இதழ் வெளிவருகிறது. சாதனை அளவாக 9 முறை தேசிய செஸ் சாம்பியன் ஆன மனுவேல் ஆரோனின் மகன் அரவிந்த் ஆரோன்தான் இந்த இதழை நடத்துகிறார்.
புராணகால தொடர்பு
செஸ் விளையாட்டுடன் தமிழகத்துக்கு புராணகாலம் தொட்டே தொடர்பு இருப்பதற்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் 'சதுரங்க வல்லபநாதர் கோவில்'. சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் சிவபெருமானே சித்தர் ரூபத்தில் செஸ் விளையாடியதாக தல வரலாறு கூறுகிறது. இன்றும் செஸ் பிரியர்கள் விரும்பிவந்து வழிபட்டுச் செல்லும் தலமாக சதுரங்க வல்லபநாதர் கோவில் உள்ளது. இங்கு அவ்வப்போது செஸ் விளையாட்டு போட்டிகளும் களைகட்டுகின்றன.
போட்டிக்கு முன்னரே சாதனை
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முன்பாக, ஏற்பாடுகள் எல்லாம் செம்மையாக இருக்கின்றனவா என்று சோதிக்கும் வகையில் பயிற்சி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. அதில் ஆயிரத்து 414 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதும், அனைத்து போட்டிகளும் நேரடியாக இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டதும் புதிய உலக சாதனை. அந்தவகையில் உண்மையான போட்டி தொடங்கும் முன்பே இந்த செஸ் ஒலிம்பியாட் சாதனை படைத்துவிட்டது. மேலும், 100 ஆண்டுகால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 187 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதும், 'தம்பி' வரவேற்கும் இந்த செஸ் போட்டியில்தான்.