டாப்சி தயாரிப்பில் 4 நாயகிகள்
|‘தக்தக்’ என்ற படத்தை, வயாகாம் 18 ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் டாப்சி. இந்தப் படம் 4 பெண்களின், சாகசப் பயணத்தை மையமாகக் கொண்ட கதையாகும்.
டெல்லியில் பிறந்து வளர்ந்தவர், டாப்சி. மாடலிங் துறையில் இருந்த இவரை, 2010-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஜும்மாண்டி நாதம்' என்ற படத்தில் அறிமுகம் செய்தார், இயக்குனர் கே.ராகவேந்திர ராவ். 2011-ல் தமிழில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் வெற்றிமாறனால் அறிமுகம் செய்யப்பட்டார். 2012-ல் 'சேஷ்மி பதோர்' படத்தின் மூலமாக பாலிவுட்டில் நுழைந்தார். இருப்பினும் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில்தான் அதிகப் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'பிங்க்' திரைப்படம், டாப்சிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்தப் படம்தான், தமிழில் அஜித்குமார் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
'பிங்க்' வெற்றிக்குப் பிறகு, பாலிவுட்டில் அதிக படங்களில் டாப்சி ஒப்பந்தமானார். தற்போது இந்தி மொழியில்தான் அதிகமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு அங்கே படம் தயாரிக்கும் அளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார், டாப்சி.
'அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய டாப்சி, இன்னும் சில தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து, 'பிளர்' என்ற திரில்லர் படத்தை இந்தியில் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில், இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
'பிளர்' திரைப்படம் தவிர, சமந்தா நாயகியாக நடிக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தையும் டாப்சி தயாரிக்கிறார். மேலும் 'தக்தக்' என்ற படத்தை, வயாகாம் 18 ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படம் 4 பெண்களின், சாகசப் பயணத்தை மையமாகக் கொண்ட கதையாகும். இதில் பாத்திமா சனா ஷேக், ரத்னா பதக் ஷா, தியா மிர்ஸா, சஞ்சனா சங் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தை தருண் துடேஜா இயக்குகிறார்.