< Back
சிறப்புக் கட்டுரைகள்
90 வினாடிகளில் 21 சொற்களை உச்சரித்து ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி சாதனை!
சிறப்புக் கட்டுரைகள்

90 வினாடிகளில் 21 சொற்களை உச்சரித்து "ஸ்பெல்லிங் பீ" போட்டியில் இந்திய வம்சாவளி மாணவி சாதனை!

தினத்தந்தி
|
4 Jun 2022 5:57 AM GMT

அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி ஹரிணி லோகன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

ஹூஸ்டன்,

அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி ஹரிணி லோகன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

உலகப்புகழ் பெற்ற 'ஸ்பெல்லிங் பீ' எனப்படும் சொற்களை சரியாக உச்சரிக்கும் போட்டி 1925ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 'ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ' இறுதிப் போட்டி நேற்று நடந்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரினி லோகன் மற்றும் விக்ரம் ராஜூ ஆகிய இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. வெற்றியை தீர்மானிக்க, ஒவ்வொரு போட்டியாளரும் 90 வினாடிகளில் எத்தனை ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கின்றனர் என்று முடிவு செய்யப்பட்டது.

அதில் 90 வினாடிகளில், ஹரினி லோகன் 21 சொற்களை பிழையின்றி சொல்லி முடித்தார்.விக்ரம் ராஜூ 15 சொற்களை தவறின்றி கூறினார்.

இதையடுத்து எட்டாவது படிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரினி லோகன் வெற்றி பெற்றதாக நீதிபதிகள் அறிவித்தனர். அவருக்கு, ஸ்கிரிப்ஸ் கோப்பை, ரூ.35 லட்சம் பணம், மெரியம் - வெப்ஸ்டர் மற்றும் என்சைக்ளோபிடியா பிரிட்டானிக்கா நிறுவனங்களின் விருதுகள் கிடைத்துள்ளன.

இப்போட்டியில் டென்வரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஏழாம் வகுப்பு மாணவரான விக்ரம் ராஜூ இரண்டாவது இடத்தை பிடித்தார். அதேபோல, டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஹான் சிபல் (13 வயது) மூன்றாவது இடத்தையும், வாஷிங்டனைச் சேர்ந்த சஹர்ஷ் வுப்பலா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு இந்த போட்டி நடைபெறவில்லை. இந்த கடும் சிரமமான போட்டியில் பங்குபெறும் தகுதியுடைய போட்டியாளர்கள், மாதக் கணக்கில் தங்களை தயார்படுத்திக் கொண்டு களம் காணுகின்றனர்.

அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியில், ஒவ்வொரு ஆண்டும் இந்திய வம்சாவளியினர் சிறந்து விளங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் சாம்பியன் பட்டம் வென்று வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த 14 வயது ஜைலா அவன்ட்கார்ட் வெற்றி பெற்று அந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில், மீண்டும் இந்திய வம்சாவளி மாணாக்கர்களின் கை மீண்டும் ஓங்கி நிற்கிறது.

மேலும் செய்திகள்