20 ஆயிரம் வேலைகள்: எஸ்.எஸ்.சி. தேர்வில் ஆங்கிலத்திலும் அசத்தலாம்...
|ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) என்ற அமைப்பு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணியை நடத்துகிறது.
பட்டதாரிகள், பிளஸ் 2 படித்தவர்கள், 10-ம் வகுப்பு படித்தவர்கள் என்ற கல்வி அடிப்படையில் 3 விதமான தேர்வுகள் உள்ளன. தற்போது பட்டதாரிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நடைபெறும் இந்த தேர்வு குறித்தும், இதில் இடம்பெறும் கேள்விகள் குறித்தும் இந்தப்பகுதியில் பார்த்து வருகிறோம். இறுதிப்பகுதியான இந்த வாரம் ஆங்கிலம் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிப்பது குறித்து காண்போம்.
ஆங்கிலம்
தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் SSC தேர்வு எழுதாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஆங்கிலம். ஆனால், மிக எளிதாக அதிகமதிப்பெண்கள் பெறக்கூடிய பகுதி இதுதான்.
ஆங்கில அறிவைப் பொறுத்த வரையில் நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். உங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளலாம். ஆங்கில மொழிப் பகுதியை சொற்கள் மற்றும் இலக்கணம் ஆகிய இரண்டும் சேர்ந்ததாகக் கருதலாம்.
அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை அறிந்து கொள்வது மற்றும் இலக்கணப் பிழையின்றி அவற்றைப் பயன்படுத்துவது ஆகிய இரண்டையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
ஆங்கிலப் பகுதிக்கு தயார் ஆகும்போது முதலில் அதை எங்கிருந்து துவங்குவது என்ற குழப்பம் வருவது இயல்பு. அடிப்படை ஆங்கில இலக்கணத்தை முதலில் தெளிவாக படித்து முடித்து விடுங்கள். அனைவருமே ஓரளவிற்கேனும் ஆங்கில இலக்கணம் அறிந்து இருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நுணுக்கமான விஷயங்களை நன்கு அறிந்திருப்பது அவசியம். Preposition, Articles, Relative Clause மற்றும் Concord போன்ற பகுதிகளில் பலர் தவறு செய்கிறார்கள். Spotting the Errors பகுதியில் கேட்கப்படும் வினாக்களில் அதிக அளவு இந்தப் பகுதியை மையமாக வைத்தே கேட்கப்படுகிறது.
இப்பகுதிக்கு நன்கு தயார் செய்வதற்கு Common Errors in English and How to Correct them என்ற புத்தகத்தை படிக்கலாம். Pratiyogita kiran, Competition Refresher, Renu GK போன்ற மாதாந்திர சஞ்சிகைகளை தவறாமல் படியுங்கள். இதில் வெளியாகும் Test of English Language பகுதியை தொடர்ந்து படித்தாலே போதுமானது.
முதலாவதாக, Grammer Practice for Intermediate Students என்ற புத்தகத்தை முழுமையாக படித்து விடுங்கள். One Word Substitution, Idioms, Close Type, Sentence Improvement, Voice and Tenses போன்ற பகுதிகளில் தவறே செய்யக்கூடாது.
Vocabulary பகுதி ஓரிரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ படித்து முடிப்பது அல்ல. அனேக மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலான ஆங்கில வார்த்தைகளை அறிந்து இருந்தாலும் பொருத்தமான சூழலுக்கு (Context) ஏற்றவாறு பயன்படுத்துவதில் திணறுகின்றனர். ஏனெனில் கதைகள், நாவல்கள் ஆகியவற்றைப் படித்தல், ஆங்கில செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இல்லாமை ஆகியவற்றால் அவை பயன்படுத்தப்படாத வார்த்தைகளாகவே (Passive Vocabulary) உள்ளன. அடிக்கடி வாக்கியங்களை பயன்படுத்துதல், ஆங்கில நாவல்கள் படித்தல், செய்தித்தாள் வாசித்தல் ஆகியவற்றின் மூலம் அவை Active Vocabulary ஆக மாறி பயன்படும்.
தினசரி 20 சொற்கள் வீதம் படித்து அவற்றை வாக்கியம் அமைத்து பழகினால் தான் மனதில் நிற்கும். ஆங்கில செய்தித்தாளில் உங்களுக்கு பிடித்தமான பகுதியை (அரசியல், விளையாட்டு, சினிமா, உள்ளூர் செய்திகள் போன்றவை) ஆழ்ந்து வாசியுங்கள்.
தொலைக்காட்சியில் ஆங்கில சேனல்கள் ஒளிபரப்பும் பேட்டிகள், விவாதங்கள், செய்திகள் ஆகியவற்றை பார்க்கலாம். 'பி.பி.சி. செய்தியை கேட்பதன் மூலம் வார்த்தைகளை சரியாக உச்சரிக்க தெரிந்து கொள்ளலாம். வானொலியில் ஒலிபரப்பாகும் ஆங்கிலச் செய்தியை கேட்கலாம்.
Idioms, Synonyms, Antonyms மற்றும் One Word Substitution ஆகியவை எளிமையானவை. வங்கித்தேர்வு, ரெயில்வே தேர்வு, ஸ்டாப் செலக்சன் கமிஷன் நடத்தும் SSC (MTS), SSC (CGL) மற்றும் ஸ்டெனொ கிராபர் போன்ற தேர்வுகளின் முந்தைய வினாத்தாளிலிருந்து 200 Idioms, 100- One Word Substitution சேகரித்து படித்து விடலாம். 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான ஆங்கிலப் பாடப் புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள Idioms களை சேகரித்து தனியாக எழுதி வைத்துப் படியுங்கள். இணையதளத்தில் பொருத்துக (Matching) வடிவில் கொடுக்கப்பட்டுள்ள Idioms Exercises பயிற்சி செய்வது சுவாரஸ்யமாக இருப்பதுடன், தேர்வில் விரைவாக பதிலளிக்கவும் உதவும். இதற்கு Dictionary of English Idioms என்ற புத்தகம் உதவும்.
குறிப்பிட்ட சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியங்களை எழுதி வைப்பதுடன், பல்வேறு சூழல்களில் அந்த சொற்கள் பயன்படுத்தப்படும் முறையையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த சொற்களை பயன்படுத்தி வாக்கியங்களை நீங்களே சொந்தமாக அமைத்துப் பழகுங்கள்.
ஆங்கில இலக்கண விதிகள், மரபுச் சொற்கள், வார்த்தைகள் பயன்பாடு மற்றும் அர்த்தங்கள் குறித்த பல பயிற்சி வினாக்களை சில இணையதளங்கள் இலவசமாக அளிக்கின்றன. இவற்றை பார்வையிட்டு நமக்கு தேவையானவற்றை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
www.oxfordictionaries.com என்ற இணையதளத்தில் ஆங்கிலத்தில் இலக்கணப் பிழை இல்லாமல் எழுதும் முறை, ஸ்பெல்லிங், புதிர்கள், அகராதி, எழுத்து விளையாட்டு, இலக்கணப் பயிற்சி ஆகியவை உள்ளது. www.dictionary.cambridge.org என்ற இணையதளத்தையும் பார்க்கலாம். இதில் வார்த்தைகள், அவற்றின் பொருள் உச்சரிப்பு என அனைத்தும் உள்ளது. சரியான இடத்தில் பொருத்தமான சொற்களை பயன்படுத்துவது மொழி ஆளுமையின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
நேர நிர்வாகம்
SSC தேர்வுகள் TNSPC, UPSC, RRB தேர்வுகளிலிருந்து மாறுபட்டது. இதில் வேகம் மற்றும் துல்லியத் தன்மை (Speed and Accuracy) மட்டுமே உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். ஏனெனில் அனைத்துப் பாடங்களையும் நீங்கள் படித்து முடித்து விடலாம். கணிதம் எந்தப் பகுதியிலிருந்து கேட்டாலும் விடையளித்து விடுவீர்கள். ரீசனிங் பகுதியில் சற்றேறக்குறைய 90 சதவீத வினாக்களுக்கு விடையளித்து விடுவீர்கள். ஆனால் உங்களது வெற்றியை தீர்மானிக்கும் ஒரே கேள்வி. "எவ்வளவு நேரத்தில்" என்பதுதான்.
UPSC தேர்வுகள் மாரத்தான் போட்டியை போன்றது எனில், SSC தேர்வுகள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்றது.
ஓராண்டுத் திட்டம்
தொடர்ந்த பயிற்சியின் மூலம் இது சாத்தியமாகும். உதாரணமாக நீங்கள் தட்டச்சு (Typewriting) கற்றுக் கொள்ளும்போது, ஒவ்வொரு எழுத்தாக கீபோர்டை பார்த்து முதலில் தட்டச்சு செய்வோம். சில நாட்கள் பயிற்சிக்குப்பின் கீபோர்டை பார்க்காமல் தட்டச்சு செய்வோம். தொடர்ந்து பயிற்சி செய்யும்போது மிக விரைவாக தட்டச்சு செய்வோம்.
இதைப் போலத்தான் கணிதப் பகுதியோ, ரீசனிங் பகுதியோ ஆரம்பத்தில் அதிக நேரமாகும். தொடர்ந்த பயிற்சியின் மூலம் அதிக வினாக்களை குறைந்த நேரத்தில் தீர்வு செய்யும் திறமையை பெற்று விடலாம். எனவே, படிக்க ஆரம்பித்த ஒருமாத காலத்திற்கு நேரத்தை குறித்து கவலைப்படாமல் Logic, Formula, Concept ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு மட்டும் நன்கு கற்றுக் கொள்ளுங்கள். பயிற்சியின் மூலம் வேகத்தை அதிகரித்து விடலாம்.
ஸ்டாப் செலக்சன் கமிஷன் 2022-ம் ஆண்டு தேர்வு திட்ட அட்டவணையில் (Annual Calender Program) டிசம்பர் மாதம் 12-ம் வகுப்பு கல்வித் தகுதியான Combined Higher Secondary Level தேர்வுக்கான அறிவிப்பும், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் வகுப்பு கல்வித் தகுதியிலான Multi Tasking Staff பணியிடத்திற்கும் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுக்கும் இதே பாடத்திட்டம்தான். எனவே தற்போதைய தேர்வுக்கு முழுவதுமாக தயாராகி விட்டால், தொடர்ந்து வரும் இந்த இரண்டு தேர்வுகளை எளிதாக எதிர் கொள்ளலாம். இதற்கிடையில் தற்போது நீங்கள் எழுதவுள்ள SSC-CGL முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, இரண்டாம் கட்டத் தேர்வுக்கும் தயாராகி விடலாம். ஒரு வருட காலத்திற்குள் கண்டிப்பாக ஏதாவதொரு பணியை பெற வாய்ப்புஉள்ளது.
1000 மைல்கள் கொண்ட பயணம் நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியில் தான் துவங்குகிறது. இத்தேர்வுக்கு தயார் செய்வதும் ஒரு பயணமே. ஓராண்டுக்கான இந்த முழு பயணத்திற்கும் முறையாக திட்டம் வகுத்து முதல் அடியை இன்றே தொடங்குங்கள்.
நம்பிக்கையுடனும் முழு மனதுடனும் தேர்வுக்கு தயாராகுங்கள். நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.