அமெரிக்காவில் அழிந்து போன மீன் இனம் மீண்டும் இயற்கையாக இனப்பெருக்கம் செய்து புத்துயிர் பெற்றுள்ளது கண்டுபிடிப்பு!
|‘கிரீன்பேக் கட்த்ரோட் ட்ரவுட்' மீன் இனம் 1930களில் பூமியில் இருந்து அழிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கொலராடோ மாநில மீன் இனமாக 'கிரீன்பேக் கட்த்ரோட் ட்ரவுட்' மீன்கள் உள்ளன. 1930களில் இந்த இனம் பூமியில் இருந்து அழிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
2012இல் மத்திய கொலராடோவில் பியர் க்ரீக் பகுதி நீரோட்டங்களில் இந்த இனத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அதன் பின் அவற்றின் முட்டைகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு வனவிலங்கு சரணாலயங்களில் பராமரிக்கப்பட்டு மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வந்தன.
இந்த மீன் இனம் இயற்கையாக பூமியில் மீண்டும் இருந்திட 2016இல் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் வழிகளில் விடப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்காவில் 100 ஆண்டுகள் பழமையான, அழிந்துபோன மீன் இனம் மீண்டும் இயற்கையாக பூமியில் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். தெற்கு பிளாட் ஆற்றில் 'கிரீன்பேக் கட்த்ரோட் ட்ரவுட்' மீன்கள் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இயற்கையாகவே இந்த மீன்கள் இனப்பெருக்கம் செய்து புத்துயிர் பெற்றுள்ளது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அழிவின் விளிம்பில் இருந்து உயிரினங்களை மீட்பதற்காக, 10 ஆண்டுகளுக்கும் மேலான தீவிர முயற்சிகளுக்கு பிறகு, இப்போது கிடைத்த வெற்றி இது என ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது.