சிறுநீரகங்களை பாதுகாக்கும் 10 உணவுகள்
|சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க என்ன சாப்பிடலாம் என்பதற்கான பட்டியல்
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகங்கள் இருக்கின்றன. உடலில் சேரும் நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகின்றன. சமீப காலமாக சிறுநீரக நோய் பாதிப்புகளுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவற்றை தவிர்க்க தண்ணீர் போதுமான அளவு பருகுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. உணவு பழக்கத்திலும் கட்டுப்பாடுகளை பின்பற்றியாக வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது பெரும்பாலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவிடும். சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க என்ன சாப்பிடலாம் என்பதற்கான பட்டியல் இங்கே:
1. முட்டைக்கோஸ்
இதில் வைட்டமின் சி, கே உள்ளிட்ட பல பயனுள்ள வைட்டமின்கள், சேர்மங்கள் உள்ளன. முட்டைக்கோஸில் இயற்கையாகவே சோடியம் குறைவான அளவிலேயே இருக்கும். மேலும் கரையாத நார்ச்சத்தும் முட்டைக்கோஸில் உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சினைக்கு இடம் கொடுக்காமல் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி புரியும்.
2. சர்க்கரை வள்ளிக்கிழங்கு
இதில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்பவர்களுக்கு ஏற்ற உணவுப்பொருள் இது. உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது.
3. காலிபிளவர்
வைட்டமின்கள் சி, கே, பி, போலேட், நார்ச்சத்து மற்றும் இண்டோல் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் காலிபிளவரில் காணப்படுகின்றன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறுநீரக நோய் அபாயங்களை தவிர்த்துவிடலாம்.
4. வெங்காயம்
நாம் உண்ணும் அனைத்து உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்று, வெங்காயம். இதில் வைட்டமின் சி, பி, மாங்கனீஸ் மற்றும் ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை சிறுநீரகங்களை வலுப்படுத்தக்கூடியவை.
5. பூண்டு
பூண்டில் வைட்டமின் பி6, சி, மாங்கனீசு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டது. இதனை தினமும் உணவில் சேர்ப்பது சிறுநீரகங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உடல் உறுப்புகளுக்கும் நலம் சேர்க்கும்.
6. முட்டையின் வெள்ளை கரு
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் புரதச் சத்து முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகமாக உள்ளது. எனவே தினமும் உணவில் முட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
7. ஆப்பிள்
ஆப்பிளும் அதிக புரதச்சத்து கொண்டது. இது சிறுநீரகங்களுடன் தொடர்புடைய ஆபத்து காரணிகளைக் குறைக்க உதவும்.
8. காலே
முட்டைக்கோஸ் குடும்பத்தை சேர்ந்த இதுவும் சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை சிறுநீரக செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகின்றன.
9. பெர்ரி பழங்கள்
பொதுவாக பெர்ரி பழங்களில் ஆன்டிஆக்சிடெண்டுகள் மற்றும் ஏராளமான ஊட்டசத்துக்கள் நிரம்பியுள்ளன. அவையும் சிறுநீரகங்களின் நலன் காக்க உதவும்.
10. சிட்ரஸ் பழங்கள்
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் சி கொண்ட உணவுப்பொருட்களை உட்கொள்ள வேண்டும். சிட்ரஸ் பழங்கள் இயல்பாகவே வைட்டமின் சி நிரம்பப்பெற்றவை என்பதால் தினமும் ஏதாவதொரு சிட்ரஸ் பழத்தை உட்கொள்ள வேண்டும். சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவை முக்கியமானவை.