8 பேரில் ஒருவருக்கு ஏற்படும் மன நலக் கோளாறு பாதிப்பு
|உலகளவில் 8 பேரில் ஒருவர் மன நலக் கோளாறால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய மனநல அறிக்கை கூறுகிறது.
இது தொடர்பாக 296 பக்க ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. இது 21-ம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மிகப்பெரிய மன நல பகுப்பாய்வு என்று கூறப்படுகிறது. அனைத்து கண்டங்களில் இருந்தும் கிடைக்கப்பெற்ற ஆயிரக்கணக்கான ஆதாரங்களை ஒருங் கிணைத்து இந்த ஆய்வறிக்கை தயாராகி உள்ளது.
மனநல குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பே மரணத்தை தழுவு கின்றனர். ஒரு நபரின் அறிவாற்றல், உணர்ச்சி, கட்டுப்பாடு அல்லது நடத்தை ஆகியவற்றில் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுவது மன நலக்கோளாறுக்கு வித்திடுகிறது.
கொரோனா முதல் அலை பரவிய காலகட்டத்தில் மனச்சோர்வு, பதற்றம் போன்ற மன நலம் சார்ந்த பாதிப்புகளுக்கு பலர் ஆளானார்கள். இருப்பினும் கொரோனா தொற்றுக்கு முந்தைய காலகட்டத்திலேயே பலரும் மன நலம் சார்ந்த பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதாவது 2019-ம் ஆண்டுக்கு முன்பே 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மன நலம் சார்ந்த பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
கவலை, மனச்சோர்வு போன்றவை பொதுவான மன நல கோளாறுகளாகும். மன அழுத்தம், பதற்றம் போன்றவையும் மன நோய்களுடன் தொடர்புடையவை. சோகம், ஆர்வமின்மை போன்ற உணர்வுகளும் வெளிப்படும். உலகளவில் இளம் வயதினர் 14 சதவீதம் பேர் மன நல கோளாறுகளுடன் வாழ்கின்றனர்.