மாவட்ட செய்திகள்
ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி சுட்டுக்கொலை- முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்
|ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவியை சிரூர் கோர்ட்டு அருகே துப்பாக்கியால் சுட்டு கொன்ற முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மாமியார் படுகாயமடைந்தார்.
புனே,
ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவியை சிரூர் கோர்ட்டு அருகே துப்பாக்கியால் சுட்டு கொன்ற முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மாமியார் படுகாயமடைந்தார்.
ஜீவனாம்சம் கேட்டு வழக்கு
புனே மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் தவாலே (வயது45). முன்னாள் ராணுவ வீரர். இவர் மனைவி மஞ்சிராவை விட்டு பிரிந்து சென்றார். இதனால் அவரிடம் ஜீவனாம்சம் கேட்டு மனைவி சிரூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராக அம்பர்நாத்தில் இருந்து தீபக் தவாலே தனது சகோதரருடன் ஆட்டோவில் புறப்பட்டு சென்றார்.
சிரூர் கோர்ட்டு அருகே பொதுப்பணித்துறை அலுவலகம் சென்ற போது அவரது மனைவி மஞ்சிரா, மாமியார் துல்சாபாயுடன் நின்றுகொண்டு இருப்பதை கண்டார். உடனே தான் வைத்திருந்த உரிமம் கொண்ட துப்பாக்கியை எடுத்து 2 பேரையும் நோக்கி சரமாரியாக சுட்டு விட்டு தப்பினார்.
மனைவி சாவு
இந்த சம்பவத்தில் மனைவி மஞ்சிரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாமியார் துல்சாபாய் படுகாயமடைந்தார். இச்சம்பவத்தை நேரில் கண்ட அக்கம் பக்கத்தினர் விரட்டி சென்று ரஞ்சன்காவ் பகுதியில் தீபக் தவாலே மற்றும் அவரது சகோதரரை மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த துல்சாபாயை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிடிபட்ட தீபக் தவாலே உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பட்டப்பகலில் கோர்ட்டு அருகே மனைவியை, கணவரே துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.