மராட்டிய மந்திரிசபை விரிவாக்கம் செய்யாதது ஏன்?- காங்கிரஸ் கட்சி கேள்வி
|ஆட்சி அமைத்து 15 நாட்கள் ஆகியும் மராட்டிய மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படாதது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
மும்பை,
ஆட்சி அமைத்து 15 நாட்கள் ஆகியும் மராட்டிய மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படாதது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
மந்திரிசபை விரிவாக்கம்
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால் சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து சிவசேனா அதிருப்தி அணியினர் பா.ஜனதாவுடன் இணைந்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றினர்.
முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் மராட்டிய மந்திரி சபை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் அதுல் லோண்டே கூறியதாவது:-
விவசாயிகளுக்கு நஷ்டம்
மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி அரசு பதவியேற்று 15 நாட்கள் ஆகியும், மந்திரி சபை விரிவாக்கம் நடைபெறவில்லை. முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரி இருவர் மட்டுமே ஆட்சியை நடத்துகின்றனர்.
கனமழையால் மாநிலத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகார மோதல் காரணமாக ஏக்நாத் ஷிண்டே- தேவேந்திர பட்னாவிஸ் அரசு அமைக்கப்பட்டு இருந்தபோதிலும், அரசும் இல்லாமல், நிர்வாகமும் இல்லாமல் மராட்டியம் அனாதையாக நடத்தப்படுகிறது.
நீண்ட அரசியல் நாடகத்திற்கு பிறகு பா.ஜனதா தலைமையிலான அரசு அமைந்தாலும், இதுவரை மந்திரிசபை அமைக்கப்படவில்லை.
முதல்-மந்திரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் துறைகள் ஒதுக்கப்படவில்லை. முதல்-மந்திரி அலுவலகத்திலும் இன்னும் நிர்வாக அமைப்பு இல்லை. கடந்த 15 நாட்களில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் செய்யும் ஒரே வேலை மகா விகாஸ் அகாடி அரசு எடுத்த முடிவுகளை மாற்றியமைப்பதை தான்.
ஆரே காலனி
ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்றவுடன் விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணாமல் ஆரே காலனி பணிமனை அமைக்கும் முடிவை எடுக்கிறது.
இந்த முடிவு மும்பை மக்களின் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். கனமழையால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆறுகள் நிரம்பி வழிகின்றன. மக்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது. ஆனால் முதல்-மந்திரி 'லைட்', 'கேமரா', ஆக்சன் என்ற பிம்பத்திற்குள் சிக்கிகொண்டதாக தெரிகிறது.
அவர் செய்யும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும், அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு விமர்சனமும் பதிவு செய்யப்படுகின்றன.
இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பிரச்சினையை ஆட்சிக்கு வந்தவுடன் தீர்த்து வைப்போம் என பேசியவர்களால் கோர்ட்டில் வழக்கை கூட சரியாக தாக்கல் செய்ய முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.