மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாகனம் சென்றபோது ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதா?- மும்பை போலீசார் விளக்கம்
|மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாகன அணிவகுப்பின் போது ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டதற்கு மும்பை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
மும்பை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வாகன அணிவகுப்பின் போது ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டதற்கு மும்பை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
சிக்கிய ஆம்புலன்ஸ்
மும்பையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த திங்கட்கிழமை லால்பாக் ராஜா மற்றும் முக்கிய மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரை தரிசனம் செய்தார். மேலும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வீடுகளுக்கும் அவர் சென்றார்.
இந்த நிலையில் அமித்ஷாவின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பின்போது, போக்குவரத்து தடை விதிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் ஒன்றும் சாலையை கடந்து செல்ல முடியாமல் அவசர ஒலி எழுப்பியபடி காத்து நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
வி.ஐ.பி. கலாசாரம்
பா.ஜனதா கட்சியின் இந்த வி.ஐ.பி. கலாசாரத்தை நெட்டிசன்கள் கடுமையாக சாடினர். எதிர்க்கட்சிகளும் தங்கள் பங்கிற்கு வறுத்தெடுத்தனர்.
இந்தநிலையில் உள்துறை மந்திரி அமித்ஷாவின் வாகன அணிவகுப்புக்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை மும்பை போக்குவரத்து போலீசார் மறுத்துள்ளனர்.
நோயாளி இல்லை
இதுகுறித்து அவர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், "மத்திய மந்திரி அமித்ஷாவின் வாகன அணிவகுப்பு சென்றபோது, அங்கு நின்ற ஆம்புலன்சில் நோயாளி யாரும் இல்லை. அந்த ஆம்புலன்சில் இருந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக சைரனை அணைக்க முடியவில்லை. அந்த இடத்தில் பாதுகாப்புக்கு இருந்த போக்குவரத்து போலீசாரால் இது சரிபார்க்கப்பட்டது. ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் பலர் போக்குவரத்து போலீசார் தங்கள் தவறை மறைக்க இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.