காங்கிரஸ் சார்பில் நடைபயணம்; 10 நாட்கள் நடக்கிறது
|மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய நடைபயணம் அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
மும்பை,
மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய நடைபயணம் அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
10 நாள் நடைபயணம்
மும்பையில் வருகிற 31, அடுத்தமாதம் 1-ந் தேதி 'இந்தியா' கூட்டணி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் முடிந்த பிறகு மராட்டியத்தில் பிரமாண்ட நடைபயணத்தை நடத்த காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக மும்பையில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியதாவது:- பா.ஜனதா அரசின் தோல்விகள் குறித்து மக்களிடம் எடுத்து கூற காங்கிரஸ் தலைவர்கள் மாநிலத்தின் கிராமம், தாலுகா, நகர் பகுதி என எல்லா இடங்களுக்கும் 'ஜன் சம்வத் யாத்ரா' என்ற பெயரில் பயணம் செய்ய உள்ளனர். இந்த நடைப்பயணம் அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது.
ஜனநாயகம் மீது தாக்குதல்
மேற்கு மராட்டியத்தில் முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவானும், மரத்வாடாவில் அசோக் சவானும் வழி நடத்துகின்றனர். வடக்குமராட்டியத்தில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் தலைமையிலும், மேற்கு விதர்பாவில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தலைமையிலும் நடைபயணம் நடைபெற உள்ளது. கொங்கன் மண்டலத்தில் 2 நாட்கள் நடைபெறும் நடைபயணத்தில் மாநில தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். அரசியல் அமைப்பை சிதைக்க பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். நாட்டில் ஜனநாயகம் தாக்கப்பட்டு வருகிறது. அரசியல் எதிரிகளை அச்சுறுத்த மத்திய முகமைகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற விவகாரங்களில் பா.ஜனதா அரசை அம்பலப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல்காந்தி பங்கேற்பு
முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் பேசுகையில், " மகாவிகாஸ் கூட்டணி நடத்த உள்ள 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் 26-க்கும் மேலான எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி கலந்து கொள்கின்றனர். சோனியாகாந்தி கலந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. அடுத்த மாதம் 1-ந் தேதி ராகுல் காந்தி தாதரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து மாநில காங்கிரசை பாராட்ட உள்ளார் " என்றார்.