தொண்டர்கள் தயாராகுங்கள்; தசரா பொதுக்கூட்டம் சிவாஜி பார்க்கில் நடைபெறும்- உத்தவ் தாக்கரே உறுதி
|தசரா பொதுக்கூட்டம் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மும்பை,
தசரா பொதுக்கூட்டம் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
தசரா பொதுக்கூட்டம்
சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டம் ஆண்டுதோறும் மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டதை அடுத்து ஷிண்டே தலைமையிலான அணியினரும் சிவாஜி பார்க் மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி உள்ளனர். ஆனால் இரு அணியில் யாருக்கும் அங்கு தசரா பொதுக்கூட்டம் நடத்த மாநகராட்சி இதுவரை அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் சிவாஜி பார்க் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மீண்டும் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-
தயாராகுங்கள்
சிவசேனா 4 தலைமுறைகளாக சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு பிறந்த கட்சி. நாம் தான் உண்மையான சிவசேனா. நமது கட்சியை யாரும் பறித்து விட முடியாது. அல்லது விலை கொடுத்து வாங்கி விட முடியாது.
சிவசேனாவை பலவீனப்படுத்தும் முயற்சி முன்பு பல தடவை நடைபெற்றது. தற்போது வரை அது பலிக்கவில்லை. நமது கட்சியின் தசரா பொதுக்கூட்டம் பாரம்பரிய இடமான சிவாஜி பார்க்கில் நடைபெறும். அதற்காக நீங்கள் உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே தசரா பொதுக்கூட்டம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் வருகிற 21-ந் தேதி உத்தவ் தாக்கரே கலந்தாலோசிக்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.