< Back
மும்பை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மும்பை பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி- எம்.பி.யின் உதவியாளராக நடித்தவர் கைது
மும்பை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மும்பை பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி- எம்.பி.யின் உதவியாளராக நடித்தவர் கைது

தினத்தந்தி
|
8 Sept 2022 7:56 PM IST

மும்பையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வந்த போது அவரது பாதுகாப்பில் குளறுபடி நடந்தது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக எம்.பி.யின் உதவியாளராக நடித்த வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மும்பை,

மும்பையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வந்த போது அவரது பாதுகாப்பில் குளறுபடி நடந்தது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக எம்.பி.யின் உதவியாளராக நடித்த வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பாதுகாப்பில் குளறுபடி

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக மும்பை வந்தார். அவர் திங்கட்கிழமை மும்பையில் லால்பாக் ராஜா விநாயகரை தரிசனம் செய்தார். மேலும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வீடுகளுக்கும் சென்றார். இதேபோல அவர் பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் அமித்ஷா மும்பை வந்து இருந்த போது அவரது பாதுகாப்பில் குளறுபடி நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

வாலிபர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.யின் உதவியாளர் என மோசடியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து உள்ளனர். அமித்ஷா மும்பை வந்து இருந்த போது அவருடன் வெள்ளை நிற சட்டை, நீல நிற கோட் அணிந்து வாலிபர் ஒருவர் அவருடன் சுற்றிக்கொண்டு இருந்தார். மேலும் முக்கிய அரசியல் தலைவர்களுடனும் காணப்பட்டார்.

வித்தியாசமான ஒரு நபர் அமித்ஷா, முக்கிய தலைவர்களுடன் காணப்பட்டது மூத்த மந்திராலயா அதிகாரி ஒருவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அதிகாரி அந்த நபரிடம் விசாரித்து உள்ளார். அப்போது அந்த வாலிபர், அவரது பெயர் ஹேமந்த் பவார் எனவும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி. ஒருவரின் உதவியாளர் என கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபரின் கழுத்தில் மத்திய உள்துறையின் ரிப்பன் தொங்கவிடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த மந்திராலயா அதிகாரி சம்பவம் குறித்து மலபார்ஹில் போலீசில் புகார் அளித்தார்.

கைது

இதையடுத்து போலீசார் மும்பையில் அமித்ஷாவின் நிகழ்ச்சிகள் முடிந்த 3 மணி நேரத்தில் ஹேமந்த் பவரை(வயது32) கைது செய்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் அவா் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், அவர் மராட்டிய மாநிலம் துலே பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட வாலிபர் அதிகாரப்பூர்வமாக தான் மத்திய உள்துறையின் அடையாள அட்டை ரிப்பனை வாங்கியதாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பாதுகாப்பில் குளறுபடி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்