மாவட்ட செய்திகள்
சந்திராப்பூரில் லாரிகள் மோதி தீப்பிடித்தது; 9 பேர் கருகி சாவு
|சந்திராப்பூரில் டீசல் டேங்கர் லாரியும், மரக்கட்டைகளை ஏற்றிவந்த லாரியும் மோதிய பயங்கர விபத்தில் 2 லாரிகளும் தீப்பற்றி எரிந்தன. இந்த பயங்கர விபத்தில் 9 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
மும்பை,
சந்திராப்பூரில் டீசல் டேங்கர் லாரியும், மரக்கட்டைகளை ஏற்றிவந்த லாரியும் மோதிய பயங்கர விபத்தில் 2 லாரிகளும் தீப்பற்றி எரிந்தன. இந்த பயங்கர விபத்தில் 9 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
பயங்கர மோதல்
சந்திராப்பூர் புறநகர் பகுதியில் சந்திராப்பூர்- முல் சாலையில் நேற்று இரவு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இரவு 10.30 மணி அளவில் அஜய்பூர் பகுதியை நெருங்கியபோது திடீரென அந்த லாரியின் டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தாக கூறப்படுகிறது.
அப்போது இந்த லாரியும், எதிரே டீசல் பாரம் ஏற்றிவந்த டேங்கர் லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் டீசல் லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. வேகமாக பரவிய தீ மரக்கட்டை ஏற்றி வந்த லாரிக்கும் பரவியது. 2 லாரிகளும் கொழுந்துவிட்டு எரிந்தன.
2 லாரியில் சென்றவர்களும் தீயில் சிக்கி கொண்டனர். அந்த வழியாக சென்றவர்களால் தீயில் சிக்கியவர்களின் அலறல் சத்தத்தை மட்டுமே கேட்க முடிந்தது. கோர முகத்துடன் எரிந்த தீயின் காரணமாக அவர்களால் யாரையும் காப்பற்ற முடியவில்லை.
9 பேர் கருகி சாவு
விபத்து நடந்த இடம் வனப்பகுதி என்பதால் அருகில் உள்ள மரங்களிலும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்து சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்தை வந்தடைந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயை அணைத்த பிறகு பார்த்த போது 2 லாரியின் டிரைவர்கள் உள்பட 9 பேர் உடல் கருகி கரிக்கட்டையாகி பிணமாக கிடந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சந்திராப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரியில் பயணித்த தொழிலாளர்கள் என தெரியவந்தது.
இந்த பயங்கர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.