< Back
மும்பை
பெண்களிடம் நூதன முறையில்   ரூ.8½ லட்சம் மோசடி
மும்பை

பெண்களிடம் நூதன முறையில் ரூ.8½ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
15 Aug 2022 5:00 PM GMT

ஆன்லைன் வேலை என கூறி பெண்களிடம் நூதன முறையில் ரூ.8½ லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

ஆன்லைன் வேலை என கூறி பெண்களிடம் நூதன முறையில் ரூ.8½ லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஆன்லைன் வேலை

மும்பை போரிவிலி பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஆன்லைனில் வேலை தேடிவந்தார். மேலும் இணையதளத்தில் அவரது செல்போன் எண், இ-மெயில் ஐ.டி.யை பதிவு செய்து இருந்தார். சமீபத்தில் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் பெண்ணிடம் பேசினார். அந்த நபர் அவரது ஆன்லைன் நிறுவனத்தில் பொருட்களை வாங்குவது போல பணம் செலுத்தினால், அதிக கமிஷனுடன் பணம் திரும்ப கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இது எளிமையாக பணம் சம்பாதிக்கும் ஆன்லைன் மூலம் செய்ய முடிந்த வேலை என பெண்ணை நம்ப வைத்தார்.

இதையடுத்து பெண் முதலில் ரூ.100 மதிப்புள்ள பொருள் ஒன்றை வாங்கினார். உடனடியாக பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு ரூ.250 வந்தது. மேலும் சில பொருட்களை வாங்கினார். அப்போது பெண்ணின் வங்கி கணக்கிற்கு அவர் வாங்கிய பொருட்களின் மதிப்பை விட பல மடங்கு பணம் திரும்ப கிடைத்தது.

ரூ.8½ லட்சம் மோசடி

இதில் மயங்கிய பெண், ஆன்லைன் நிறுவனத்தில் ரூ.5 லட்சத்திற்கு மேல் பொருட்கள் வாங்கினார். ஆனால் இந்த முறை அவருக்கு பணம் எதுவும் திரும்ப கிடைக்கவில்லை. பெண் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை. அதன்பிறகு தான், பெண்ணுக்கு அவர் பொருட்கள் வாங்கியது ஒரு மோசடி ஆன்லைன் நிறுவனம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மோசடி குறித்து போரிவிலி போலீசில் புகார் அளித்தார்.

இதே பாணியில் போரிவிலியில் மற்றொரு பெண்ணிடமும் ரூ.3½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அந்த மோசடி குறித்தும் போலீசுக்கு புகார் வந்தது. இந்த 2 மோசடி சம்பவங்கள் குறித்தும் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்