தாராவியில் திருட்டு ஆசாமி கைது- 27 சைக்கிள்கள் பறிமுதல்
|தாராவியில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 27 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
தாராவியில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 27 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சைக்கிள் திருட்டு
தாராவி பகுதியில் அடிக்கடி சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாக சாகுநகர் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த நிலையில் மாகிம் ரெயில்வே கிராசிங் பகுதிக்கு சைக்கிள் திருடன் வர உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் சாகுநகர் ரோந்து போலீசார் அங்கு விரைந்தனர். இந்தநிலையில் போலீசாரை பார்த்தும் திருடன் சைக்கிளில் தப்பிக்க வேகமாக சென்றான். ஆனால் போலீசார் சுமார் 2 கி.மீ. துரத்தி சென்று திருடனை பிடித்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர் தாராவியை சேர்ந்த ராயி தவார் கான் (வயது38) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது மும்பை முழுவதும் 11 சைக்கிள் திருட்டு வழக்கு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.2½ லட்சம் சைக்கிள்
இதையடுத்து போலீசார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான 27 சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் சைக்கிள் திருடன் குறித்து சாகுநகர் போலீசார் கூறுகையில், " பிடிபட்டவர் எந்த பகுதியில் விலை உயர்ந்த சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என சில நாட்கள் நோட்டமிடுவார். பின்னர் அவர் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து சைக்கிளை திருடி செல்வதை வாடிக்கையாக வைத்து உள்ளார். அவரிடம் இருந்து சாதாரண டப்பாவாலா சைக்கிள்கள், நவீன ஸ்போர்ட்ஸ் ரேஸ் சைக்கிள்கள் உள்பட பல வகையான சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.