< Back
மும்பை
சிவசேனா இரு அணிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விசாரணை அடுத்த மாதம் 13-ந்தேதி தொடங்குகிறது
மும்பை

சிவசேனா இரு அணிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விசாரணை அடுத்த மாதம் 13-ந்தேதி தொடங்குகிறது

தினத்தந்தி
|
25 Sep 2023 8:00 PM GMT

சிவசேனாவின் இரு அணிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க மனுக்கள் மீதான அதிகாரப்பூர்வ விசாரணை அடுத்த மாதம் 13-ந் தேதி தொடங்க இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே அணி வக்கீல் தெரிவித்தார்.

மும்பை,

சிவசேனாவின் இரு அணிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க மனுக்கள் மீதான அதிகாரப்பூர்வ விசாரணை அடுத்த மாதம் 13-ந் தேதி தொடங்க இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே அணி வக்கீல் தெரிவித்தார்.

தகுதி நீக்க மனு

மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி அரசு சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியின் எதிர்ப்பு காரணமாக கவிழ்ந்தது. இதைதொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே, பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றினார். இந்த நிலையில் அப்போதைய அதிருப்தி சூழ்நிலையின்போது ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே அணி சபாநாயகரிடம் மனு அளித்தது. இதேபோல ஷிண்டே அணியினரும் உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க மனு அளித்தனர். இந்தநிலையில் மராட்டிய அரசியல் நெருக்கடி தொடர்பான மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தகுதி நீக்க மனுக்கள் குறித்து உரிய காலத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சிவசேனாவை சேர்ந்த இரு அணி எம்.எல்.ஏ.க்களுக்கும் தற்போதைய சபாநாயகர் ராகுல் நர்வேகர் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பினார். மனுக்கள் மீதான விசாரணையை நேற்று சட்டசபை வளாகமான விதான் பவனில் சபாநாயகர் மேற்கொண்டார். இந்தநிலையில் விதான்பவன் வளாகத்தில் முதல்-மந்திரி ஷிண்டே அணி சார்பில் ஆஜரான வக்கீல் அனில் சாகரே கூறியதாவது:-

அடுத்த மாதம் 13-ந் தேதி

சபாநாயகர் ராகுல் நர்வேகர் எங்களின் வாதங்களை இன்று கேட்டுக்கொண்டார். நாங்கள் அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அனைத்து மனுக்களையும் தனி, தனியாக விசாரிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். இருப்பினும் அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்படவில்லை. சபாநாயகர் அடுத்த 2 நாட்களில் விசாரணை அட்டவணையை வெளியிட வாய்ப்பு உள்ளது. அதிகாரப்பூர்வ முதற்கட்ட விசாரணை அடுத்த மாதம் 13-ந் தேதி தொடங்கும். அப்போது அனைத்து மனுக்களையும் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ விசாரிப்பது குறித்த வாதங்கள் நடைபெறும். உத்தவ் தாக்கரே அணி அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைந்து விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் அத்தகைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். 39 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்