உலகம் முழுவதும் நடப்பதை நாடு தொிந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது; பாலியல் உறவுக்கான சம்மத வயதை குறைக்க வேண்டும் - ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து
|பாலியல் உறவுக்கான சம்மத வயதை குறைக்கலாம் என்றும், இந்த விவகாரத்தில் உலகம் முழுவதும் நடப்பதை நாடும், நாடாளுமன்றமும் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் மும்பை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து கூறியுள்ளது.
மும்பை,
பாலியல் உறவுக்கான சம்மத வயதை குறைக்கலாம் என்றும், இந்த விவகாரத்தில் உலகம் முழுவதும் நடப்பதை நாடும், நாடாளுமன்றமும் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் மும்பை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து கூறியுள்ளது.
கற்பழிப்பு வழக்கில் தண்டனை
மும்பையை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர் 17 வயது சிறுமியை கற்பழித்ததாக சிறப்பு கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து வாலிபர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், பெண்ணின் விருப்பத்துடன் தான் அவருடன் உறவு கொண்டதாக கூறியிருந்தார். இதேபோல பாதிக்கப்பட்ட சிறுமியும் தனது மத சட்டப்படி தான் வயது வந்த பெண் என்றும், அதன் அடிப்படையில் வாலிபரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பாரதி டாங்ரே அடங்கிய அமர்வு முன் நடந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட்டு அமர்வு, "சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்ட மனுதாரர் ஜெயில் தண்டனையை அனுபவிக்க முடியாது" என கூறி வாலிபருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு ஜெயில் தண்டனையை அதிரடியாக ரத்து செய்தது. மேலும் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது தொடர்பாக ஐகோர்ட்டு அமர்வு கூறிய பரபரப்பு கருத்து வருமாறு:-
'போக்சோ'வால் உணர்வுகளை தடுக்க முடியாது
வாலிபர் பாலியல் உறவில் நுழையும் போது உடல் மோகமும், ஈர்ப்பும் தான் முன்னால் வருகிறது. இளம் வயதினருக்கு எதிர்பாலினத்தினர் மீது ஏற்படும் இயற்கையான உணர்வுகளை போக்சோ சட்டத்தால் நிறுத்த முடியாது. உடல்ரீதியான மாற்றத்தால் மைனர் பெண்ணுடன் சம்மதத்துடன் உறவு கொள்ளும் வாலிபரை தண்டிப்பது குழந்தை நலனுக்கு எதிரானது. இளம் பருவத்தினரின் அந்த உரிமையை பறிக்க முடியாது. பாலியல் உறவுக்கான வயதையும், திருமண வயதையும் வேறுபடுத்துவது அவசியம். திருமணத்திற்கு பிறகு மட்டும் பாலியல் செயல்கள் நடப்பதில்லை. சமூகம் மட்டுமில்லாமல் நீதி அமைப்பும் இந்த அம்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் அதிக வயது
பாலியல் உறவுக்கு சம்மதம் சொல்லும் வயது இந்தியாவில் பல்வேறு சட்டங்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1940 முதல் 2012 வரை அது 16 வயதாக இருந்தது. தற்போது 18 ஆக உள்ளது. உலகளவில் இது தான் அதிக வயதாக இருக்கலாம். பெரும்பாலான நாடுகள் பாலியல் உறவுக்கான வயதை 14 முதல் 16 ஆக வைத்து உள்ளன. இத்தாலி, போர்ச்சுகல், ஹங்கேரி, ஜெர்மனியில் பாலியல் உறவுக்கான சம்மத வயது 14 ஆகவும், லண்டன், வேல்ஸ், இலங்கையில் 16 ஆகவும், ஜப்பானில் 13 ஆகவும் உள்ளது. உலகம் முழுவதும் நடப்பதை நாடும், நாடாளுமன்றமும் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவே போக்சோ சட்டம். ஆனால் இதன் காரணமாக சம்மதத்துடன் நடைபெறும் இளம் பருவத்தினரின் உறவும் குற்றம் ஆக்கப்பட்டுள்ளது. காதல் உறவுகளை குற்றமாக்கியது நீதித்துறையின் வேலைபளுவை அதிகரித்து உள்ளது. இவ்வாறு ஐகோர்ட்டு கூறியுள்ளது.