கோடை விடுமுறை நிறைவு- மாணவர்களை உற்சாகமாக வரவேற்க மாநகராட்சி ஏற்பாடு
|கோடை கால விடுமுறை நிறைவு பெற்று இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மாணவ-மாணவிகளை உற்சாகமான முறையில் வரவேற்க மும்பை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
மும்பை,
கோடை கால விடுமுறை நிறைவு பெற்று இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மாணவ-மாணவிகளை உற்சாகமான முறையில் வரவேற்க மும்பை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
பள்ளிகள் இன்று திறப்பு
மராட்டியத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி முதல் கோடை கால விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மாநிலத்தில் நேற்று கோடை கால விடுமுறை முடிந்து இன்று (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மும்பையில் பள்ளிகள் திறப்பை தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாகல், கூடுதல் கமிஷனர் அஸ்வினி பிடே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பள்ளிகளுக்கு வருகை தர இருக்கும் மாணவ- மாணவிகளை உற்சாகமான முறையில் வரவேற்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பள்ளிகளில் அலங்காரம்
இதுதொடர்பாக மாநகராட்சி கல்வி அதிகாரி ராஜேஷ் கன்கல் கூறுகையில், "மும்பை மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பான கல்வியாண்டு தொடங்குவதை உறுதி செய்ய மாணவ- மாணவிகளுக்கு மலர்கள் கொடுத்து சிறப்பான முறையில் வரவேற்கப்படும். மேலும் நோட்டு புத்தகம், சிரூடைகள், தண்ணீர் பாட்டில்கள், ஷூக்கள் போன்ற 27 பொருட்கள் வழங்கப்படும். இதற்காக பள்ளி நுழைவு வாயில்கள் மற்றும் வகுப்பறைகள் பலூன்கள், மலர்களால் அலங்காரம் செய்யப்படும். பள்ளிகள் திறப்பை முன்னிட்டு கடந்த 12-ந்தேதி முதல் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்துள்ளனர். வகுப்பறைகள், தண்ணீர் தொட்டி, பள்ளி வளாகம் போன்றவை சுத்தம் செய்யப்பட்டது. கடந்த 2022-23-ம் ஆண்டில் 1 லட்சம் மாணவர்கள் மிஷன் சேர்க்கையில் கீழ் பள்ளிகளில் சேர்க்கை நடந்தது. இதேபோல நடப்பு ஆண்டிலும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.