< Back
மும்பை
மராட்டியத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மாவட்ட செய்திகள்
மும்பை

மராட்டியத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தினத்தந்தி
|
11 Jun 2022 3:46 PM GMT

மராட்டியத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு பருவ மழை

மராட்டியத்தில் வழக்கமாக ஜூன் 9-ந் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும். இந்த ஆண்டு 2 நாள் தாமதமாக இன்று தொடங்கி உள்ளது. இன்று மாநிலத்தின் மத்திய, கொங்கன் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. புனேயிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் தேங்கியது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், " தென்மேற்கு பருவ மழை கொங்கனின் சில பகுதிகள், மத்திய மராட்டியத்தில் தொடங்கி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் பருவ மழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. வானிலை சாதகமானால், மேலும் மாநிலத்தில் பருவ மழை வலுப்பெறும்" என்றார்.

மும்பையிலும் தொடங்கியது

மும்பையை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாக பருவமழைக்கு முந்தைய மழை பெய்தது. இந்தநிலையில் இன்று முதல் மும்பையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

நேற்று மும்பை, பெருநகரப்பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் மழையிலேயே ஒரு சில இடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. மும்பையில் நேற்று காலை 8.30 முதல் இன்று காலை 8.30 மணி வரை நகர் பகுதியில் 61.8 மி.மீ. மழையும், புறநகரில் 41.3 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்