நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் மோடக்சாகர் ஏரி நிரம்பியது
|மும்பைக்கு குடிநீர் வழங்கும் மோடக்சாகர் ஏரி முற்றிலும் நிரம்பியது.
மும்பை,
மும்பைக்கு குடிநீர் வழங்கும் மோடக்சாகர் ஏரி முற்றிலும் நிரம்பியது.
மோடக்சாகர் நிரம்பியது
மும்பைக்கு தினசரி குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் இருந்து 3 ஆயிரத்து 800 எம்.எல்.டி. அளவிற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் மும்பை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்கனவே துல்சி, விகார், தான்சா ஆகிய 3 ஏரிகள் நிரம்பின. தொடர்ந்து பெய்த மழையினால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான மோடக்சாகர் நேற்று முன்தினம் இரவு 10.53 மணி அளவில் முற்றிலும் நிரம்பியதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதனால் மும்பை வாசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
68 சதவீதம் நீர் இருப்பு
ஏரியின் உபரி நீர் 2 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்மழை காரணமாக முற்றிலும் நிரம்பிய ஏரிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மற்ற ஏரிகளான மேல்வைத்தர்ணா, வைத்தர்ணா, பாட்சா ஆகிய 3 ஏரிகளும் நிரம்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 68 சதவீதமாக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.