திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை கொன்ற வாலிபர் கைது
|திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை கொன்ற வாலிபரை போலீசார் விராரில் வைத்து கைது செய்தனர்.
மும்பை,
திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை கொன்ற வாலிபரை போலீசார் விராரில் வைத்து கைது செய்தனர்.
சடலம் மீட்பு
தென்மும்பை மலபார்ஹில் பகுதியை சேர்ந்த இளம்பெண் அங்கிதா சிவ்கன் (வயது20). இவர் கடந்த மாதம் 31-ந்தேதி முதல் காணாமல் போய் விட்டார். இதனால் பெற்றோர் மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
சில நாட்கள் கழித்து தானே மாவட்டம் பயந்தர் உத்தன் பகுதியில் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக உத்தன் கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் உடலை மீட்ட போலீசார் இளம்பெண் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரித்தனர். இது பற்றி அறிந்த மலபார்ஹில் போலீசார் உடலை ஆய்வு செய்ததில் காணாமல் போன பெண் அங்கிதா சிவ்கன் என தெரியவந்துது.
வாலிபர் கைது
இதனால் இளம்பெண்ணின் செல்போன் நம்பர் மூலம் வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர். இதில் அவர் பால்கர் மாவட்டம் விரார் பகுதியை சேர்ந்த வாலிபர் அபிஷேக் என்பவரிடம் அடிக்கடி பேசியது கண்டறியப்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் அங்கிதா சிவ்கனை காதலித்து வந்து உள்ளார். மேலும் திருமணத்திற்கு இளம்பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த அபிஷேக் கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக தெரியவந்தது. இதனால் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.