< Back
மும்பை
மேடையில் இருந்து எழுந்து சென்ற விவகாரம்: கட்சி மீது அதிருப்தி இல்லை- அஜித்பவார் விளக்கம்
மும்பை

மேடையில் இருந்து எழுந்து சென்ற விவகாரம்: கட்சி மீது அதிருப்தி இல்லை- அஜித்பவார் விளக்கம்

தினத்தந்தி
|
12 Sept 2022 7:49 PM IST

கட்சி மீது அதிருப்தி எதுவுமில்லை என எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் கூறியுள்ளார்.

மும்பை,

கட்சி மீது அதிருப்தி எதுவுமில்லை என எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் கூறியுள்ளார்.

மேடையில் இருந்து சென்ற அஜித்பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சுப்ரியா சுலே, மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பேசினர். இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவாரை பேச அழைக்க இருந்த நேரத்தில், அவர் மேடையில் இருந்து இறங்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித் பவார் கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் தேசியவாத காங்கிரஸ் மராட்டிய மாநில தலைவர் ஜெயந்த் பாட்டிலுக்கும், அஜித்பவாருக்கு இடையே பனிப்போர் நடப்பதாகவும் தகவல்கள் பரவின.

அதிருப்தி இல்லை

இந்தநிலையில் கட்சியின் மீது அதிருப்தியில் இல்லை என அஜித் பவார் விளக்கம் அளித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எனது கட்சி என்னை ஒருபோதும் புறக்கணித்தது இல்லை. கட்சியின் தலைமை மீது கோபமோ அல்லது அதிருப்தியோ இல்லை. கட்சி எனக்கு முக்கிய பதவிகளை வழங்கி உள்ளது. நான் துணை முதல்-மந்திரி ஆக்கப்பட்டேன். தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளேன். மாநாடு மேடையில் நான் காலை முதல் உட்கார்ந்து இருந்தேன். இதுபோன்ற நேரத்தில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என நினைப்பது மனிதர்களின் இயல்பு தான். ஆனால் ஊடகங்கள் இதை வேறு விதமாக கூறிவிட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்