மும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு: விமான பணிப்பெண் கொலையில் கைதான தொழிலாளி தற்கொலை - போலீஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கினார்
|விமான பணிப்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளி, போலீஸ் நிலையத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
விமான பணிப்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளி, போலீஸ் நிலையத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விமான பணிப்பெண் கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ரூபால் ஒக்ரே(வயது24). இவர் கடந்த ஏப்ரல் மாதம் விமான பணிப்பெண் வேலைக்காக மும்பை வந்தார். அந்தேரி மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சகோதரி மற்றும் சகோதரியின் ஆண் நண்பருடன் வசித்து வந்தார். சமீபத்தில் ரூபால் ஒக்ரேயின் சகோதரி, ஆண் நண்பர் சொந்த ஊர் சென்றுவிட்டனர். விமான பணிப்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
துப்புரவு தொழிலாளி கைது
இந்த கொடூர கொலையில் ஈடுபட்டது அந்த கட்டிடத்தில் துப்புரவு தொழிலாளியாக இருந்த விக்ரம் அத்வால்(வயது40) என்பது தெரியவந்தது. விக்ரம் அத்வாலுக்கும், ரூபால் ஒக்ரேவுக்கும் சிறிய, சிறிய விஷயங்களில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதனால் விக்ரம் அத்வால் விரக்தி அடைந்துள்ளார். சம்பவத்தன்று இளம்பெண் தனியாக இருந்ததை அறிந்த துப்புரவு தொழிலாளி, கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என கூறி வீட்டுக்குள் நுழைந்து அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றது தெரியவந்தது. பின்னர் உடலை வீட்டின் குளியல் அறையில் போட்டு கதவை பூட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து விக்ரம் அத்வாலை அந்தேரி போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை 8-ந் தேதி (நேற்று) வரை போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட்டது.
போலீஸ் நிலையத்தில் தற்கொலை
அதன்பேரில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். அந்தேரி போலீஸ் நிலைய லாக்அப்பில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை கழிவறைக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து பார்த்தபோது விக்ரம் அத்வால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பேன்ட்டை பயன்படுத்தி அவர் தூக்கில் தொங்கி உள்ளார். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணை முடிந்து அவர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருந்த நிலையில் தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்த விக்ரம் அத்வாலுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பரபரப்பு
பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய விமான பணிப்பெண் கொலை வழக்கில், கொலையாளி போலீஸ் காவலில் இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.