மும்பை பெருநகர பகுதி வளர்ச்சி அடைந்து வருகிறது - முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேச்சு
|மும்பை பெருநகர பகுதி வளர்ச்சி அடைந்து வருவதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
தானே
மும்பை பெருநகர பகுதி வளர்ச்சி அடைந்து வருவதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
பருவ மழை
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று வில்லேபார்லே பகுதியில் கட்டப்பட்டுவரும் மிலன் சுரங்கப்பாதையையும், கடற்கரை சாலையையும் பார்வையிட்டார். மேலும் மழை கால முன்னெச்சரிக்கை பணிகளையும் ஆய்வு செய்தார். இதுகுறித்து தானேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-
நான் அதிகாரிகளுடன் பருவமழைக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட முன் எச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்தேன். நான் காலையில் சில பகுதிகளில் ஆய்வு செய்தேன். தண்ணீர் தேங்கும் பிரச்சினை பெரிய அளவில் இல்லை என்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். மராட்டியத்தில் பருவமழை நன்றாக பெய்து விவசாயிகள் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்.
தானே மெட்ரோ
மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரும் வகையில் தானேயில் மெட்ரோ பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். அம்ருத் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக தானேக்கு ரூ.323 கோடி கிடைத்துள்ளது. இது மத்திய அரசுடன் நட்பு ரீதியாக இணக்கமாக இருக்கும்போது மாநிலம் எப்படி பயனடைகிறது என்பதற்கு மிகவும் சிறந்த எடுத்துக்காட்டு. மும்பை பெருநகர பகுதி வளர்ச்சி அடைந்து வருகிறது. மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும், உள்கட்டமைப்பை அதிகரிக்கவும் மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
காப்பீடு
ஆஷாதி ஏகாதசி அன்று பண்டர்பூருக்கு வரும் 15 லட்சம் வர்காரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் காப்பீடு செய்யப்பட்ட உள்ளது. அன்றைய தினம் முதல்-மந்திரி மற்றும் அதிகாரிகள் பிரார்த்தனை நடக்கும்போதும், சாதாரண குடிமக்களும் கோவிலில் வழிபட வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் ஜூலை 1-ந் தேதி உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி மும்பை மாநகராட்சி ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது இதுகுறித்து கூறுகையில், "கொரோனா சமயத்தில் 2½ ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கொரோனாவால் பதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.600 விலையுள்ள பைகளை அவர்கள் ரூ.6 ஆயிரத்திற்கு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணையில் அதுகுறித்த உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படும்." என்றார்.